சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

UNLOCK அறிவியல் 2.O - 34

 உலக நாடுகளின் தலைவர்களுடன் மகாராணி எலிசபெத்
பிரீமியம் ஸ்டோரி
News
உலக நாடுகளின் தலைவர்களுடன் மகாராணி எலிசபெத்

- அண்டன் பிரகாஷ்

Blue Origin நிறுவன ராக்கெட்டில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸோடு 11 நிமிடங்கள் விண்வெளிப் பயணம் செய்யும் வாய்ப்பிற்கான ஏலம் மூன்று மில்லியனைத் தொட்டுவிட்டதாக சென்ற வாரக் கட்டுரையில் பார்த்தோம் இல்லையா? ஏலம் முடிந்துவிட்டது லேடீஸ் & ஜெண்டில்மென். வெற்றிபெற்றவர் 30 மில்லியன் டாலர் கொடுத்திருக்கிறார். புதிய மேய்ப்பன் (New Shepard) எனப் பெயரிடப்பட்ட இந்த ராக்கெட் ஜூலை 20 அன்று புறப்படும்போது காசைக் கரியாக்கும் மேற்படி நபர் யார் என்பது தெரிய வரும்.

UNLOCK அறிவியல் 2.O - 34

விண்வெளியிலிருந்து இறங்கி வந்து தரையில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம். புரூட் சிக்காடா (Brood cicada) என்ற பூச்சியினம் பூமிக்குள் பிறப்பிலிருந்து வளர்ந்து பதிமூன்றிலிருந்து பதினேழு வருடங்களில் பூமியின் மேல் மட்டத்திற்கு வந்துவிடும். அமெரிக்காவில் 2004-ம் வருடத்தில் பெரும் திரளாக வந்து சென்ற சிக்காடாக்கள் மீண்டும் இந்த மாதத்தில் வரும் என எதிர்பார்க்கப்பட்டது இப்போது நடந்துகொண்டிருக்கிறது. சிக்காடாக்களைப் பார்த்தவர்கள் எடுத்துப் பதிவேற்றும் படங்களால் ட்விட்டரும், இன்ஸ்டாகிராமும் நிறைந்து வழிகின்றன. பரிணாம உயிரியலாளர்களுக்கும் (Evolutionary Biologist), நடத்தைச் சூழலியலாளர்களுக்கும் (Behavioral Ecologist) சிக்காடாக்களின் வாழ்க்கை விருப்பப் பாடம். தரைக்குள் பல வருடங்கள் வாழ்ந்துவிட்டு சிக்காடாக்கள் மேலே வருவதற்குக் காரணம் - இனப்பெருக்கம். தரைக்கு வந்த தருணத்தில் இருந்தே, மோட்டார் பைக் இஞ்சின் ஓடுவதற்கு நிகரான சத்தத்துடன் ஆண் சிக்காடாக்கள் பெண் சிக்காடக்களைக் கவர முயலும். சரியாக இத்தனை வருடங்கள் என வைத்துக்கொள்ளாமல், இப்படி ஒரு இடைவெளியில் ஏதோ ஒரு வருடத்தைத் தேர்ந்தெடுத்து குபீர் எனக் கும்பலாக இவை வருவதற்குக் காரணம் - பரிணாம வளர்ச்சியின் உயிர் காக்கும் அடிப்படை உணர்வு. ‘தங்களை உணவாகப் பயன்படுத்தும் ஏதோ ஒரு விலங்கினம் உருவாகிவிடக் கூடாது; குறிப்பிட்ட வருட இடைவெளியில் தரைக்கு வரும் பழக்கத்தை வைத்திருந்தால், தங்களை வேட்டையாடும் உயிரினமும் தன் வாழ்க்கையை அப்படி அமைத்துக்கொள்ளும்’ என்ற பரிணாமக் கணக்கீட்டில் சிக்காடாக்கள் செய்யும் புத்திசாலிச் செயல் இது. ஆறு சென்டிமீட்டர் வரை வளரும் சிக்காடாக்கள் சற்றுக் கொழுத்த வடிவில் இருக்கும். சிட்டுக்குருவிகள் போன்ற சில பறவைகளுக்கு சிக்காடாக்கள் என்றால் கொண்டாட்டம். சிக்காடாக்கள் தரைக்கு வரும் வருடங்களில் இந்தப் பறவைகளின் எண்ணிக்கை அதிகமாவதும், அவை தரைக்குள் இருக்கும் வருடங்களில் குறைந்துகொண்டே போவதையும் பறவை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். ‘பறவைகள் மட்டுமல்ல; புரதம் அதிகம் இருப்பதால் மனிதர்களும் அதை உண்ணலாம்’ என உணவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்ல, ஒரு குறுகிய கால சமையல் பரிசோதனை பல இடங்களில் நடந்துவருகிறது. ஓகையோ மாநிலத்தில் இருக்கும் உணவகம், சிக்காடாக்கள் கொண்ட புதிய வகை பீஸாவை அறிமுகப்படுத்த, அந்த உணவகம் பேசுபொருளானது. மனிதர்களின் புரதத்தேவையைப் பூச்சிகளை உண்பதன் மூலம் பூர்த்தி செய்யமுடியும் என்ற உணவுப் பிரிவு எண்டமாபஜி (Entomophagy) என அழைக்கப்படுகிறது. இந்தப் பூச்சி பஜ்ஜி அதிக நாள் இருக்கப்போவதில்லை. காரணம், இத்தனை வருடங்கள் கழித்து வந்து இனப்பெருக்கச் செயல் முடிந்த ஆறு வாரங்களில் அவை இறந்துவிடும். புதிதாகப் பிறக்கும் பேபி சிக்காடாக்கள் பூமிக்குள் சென்றுவிடும். அவற்றைப் பதிமூன்றிலிருந்து பதினேழு வருடங்களுக்குப் பின்னரே பார்க்க முடியும். அப்போது என்ன மசாலாவைத் தடவி எப்படி சமைப்பது என்ற ஆராய்ச்சியை ஆர்வமிருந்தால் இப்போதே தொடங்கிவிடுங்கள்.

நிற்க!

ஏழு நாடுகள் கொண்ட, Group of Seven (சுருக்கமாக G7) கூட்டம் ஐரோப்பாவில் நடந்து வருகிறது. (அந்த ஏழு நாடுகள் எவை என்பதை எனக்கு முதலில் அனுப்புபவர் யார் என்பதை அடுத்த வாரம் பகிர்கிறேன். அனுப்ப வேண்டிய வாட்ஸப் எண் கட்டுரையின் இறுதியில்). லண்டனில் நடைபெற்ற நிகழ்வுகள் சிலவற்றை சம்பிரதாயத் தலைமை ஏற்று உலக நாடுகளின் தலைவர்களுடன் காமெடி பேசிச் சிறப்பித்திருக்கிறார் மகாராணி எலிசபெத். தன் கணவரின் மறைவிற்குப் பின்னர் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி என்பதால், ராணியைப் பற்றி மீடியாக்களில் பல செய்திகள். அதில் ஒன்று - அவர் நாளொன்றிற்கு நான்கு மதுபான காக்டெயில் குடிக்கிறார் என்பது. இங்கிலாந்திற்குக் குடிபெயர்ந்துவிட்ட பள்ளிக்கால நண்பர் ஜாண் ராயன் இதை வாட்ஸப்பில் அனுப்பி வைத்த அதே தருணத்தில், லாக்டௌன் போது தமிழ்நாட்டில் டாஸ்மாக் திறக்கப்படுவது பற்றிய விவாதங்கள் எழத் தொடங்கியிருப்பதைச் செய்தித் தளங்களில் பார்க்க முடிந்தது.

 G7 கூட்டத்தில் சம்பிரதாயத் தலைமை ஏற்று உலக நாடுகளின் தலைவர்களுடன் மகாராணி எலிசபெத்
G7 கூட்டத்தில் சம்பிரதாயத் தலைமை ஏற்று உலக நாடுகளின் தலைவர்களுடன் மகாராணி எலிசபெத்

அரசியல் தவிர்த்து, குடிப்பதன் அறிவியலை இந்த வாரத்தில் விரிவாக அன்லாக் செய்யலாம்.

எந்த மது வகையானாலும், அதில் இருப்பது அடிப்படையில் எத்தனால் என்ற வேதிப் பொருள். மது பானங்களில் இருக்கும் எத்தனாலைப் பொதுவாக ஆல்கஹால் என அழைக்கிறோம். நிறமற்ற, எரியும் தன்மைகொண்ட, மெல்லிய நச்சு (Toxin) இந்த வேதிப்பொருள். மது பானங்களில் இருக்கும் ஆல்கஹால் தவிர்த்து எரிபொருள், உணவைப் பராமரிக்கும் வினிகர், ஏன், இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் கைகளில் இருக்கும் கிருமிகளை அழிக்க பெருவாரியாக நாம் பயன்படுத்தும் சானிட்டைசர் என எத்தனால் பல்வேறு வகைகளில் பயன்படுகிறது. லாக்டௌன் தொடங்கிய சென்ற வருட மார்ச், ஏப்ரல் காலகட்டத்தில் சானிட்டைசர் தட்டுப்பாடு இருந்தபோது, மதுபானங்களைப் பயன்படுத்திப் பாதுகாப்பாக சானிட்டைசர் செய்துகொள்வது எப்படி என்பது பற்றிய யூடியூப் வீடியோக்களை நீங்கள் பார்த்திருக்கலாம்.

ஆல்கஹாலின் அடிப்படைகள்.

ஈஸ்ட் என்பது ஒரு செல் பூஞ்சை (Fungi). முட்டை வடிவில் இருக்கும் ஈஸ்ட் அளவில் மிக மிகச் சிறியது. ஒரு கிராமில் 2,000 கோடி ஈஸ்ட் முட்டைகள் இருக்கும். ஆக்சிஜன் இல்லாத இடத்தில் சர்க்கரையுடன் கலந்தால், அந்தச் சர்க்கரையை வேதிவினைக்கு உட்படுத்தி ஆல்கஹாலும், கரியமில வாயுவுமாக மாற்றிவிடுகிறது ஈஸ்ட். அதிகம் பழுத்து அழுகத் தொடங்கும் பழங்களில் இயற்கையாக உள்ள ஈஸ்ட்டின் உதவியுடன் சிறிய அளவில் ஆல்கஹால் உருவாகிறது என்பதைப் பார்த்து மனிதன் கண்டறிந்த முதல் வேதிப்பொருள் ஆல்கஹால். மாவுச்சத்து கொண்ட எல்லாவற்றிலும் சர்க்கரை இருக்கிறது என்பதால், திராட்சை, உருளைக்கிழங்கிலிருந்து அரிசிச் சோறு வரை எதிலிருந்தும் ஆல்கஹாலைத் தயாரித்துவிடலாம்.

குகைகளில் வாழ்ந்துகொண்டு, வேட்டையாடுவதன் மூலம் மட்டுமே உணவைப் பெற்று வந்த மனிதன், நிலத்தைச் சரிப்படுத்தி, முறையாக விவசாயம் செய்யத் தொடங்கியபோது தற்செயலாகக் கண்டறிந்த உப தயாரிப்பு (byproduct) ஆல்கஹால் என்று தோன்றலாம். ஆனால், விவசாயம் செய்ய மனிதனைத் தூண்டியதே ஆல்கஹால் தயாரிக்கத்தான் என வாதிடும் நிபுணர்கள் மானுடவியலில் (Anthropology) இருக்கிறார்கள். ‘ரொட்டிக்கு முன்னர் பியர் தியரி’ (Beer before bread theory) என்பது அவர்களது ஆராய்ச்சிகளிலிருந்து வடிவமைக்கப்பட்டது.

மற்ற வேதிப்பொருள்களைப் போலல்லாது ஆல்கஹால் சற்று வித்தியாசமானது. கந்தக அமிலம் என்ற வேதிப்பொருளை எடுத்துக்கொண்டால், அது அளவில் குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தாலும், அது ஏற்படுத்தும் விளைவு ஒன்றுதான். ஆல்கஹால் அப்படி அல்ல.

சிறிய அளவில் உடலிற்குள் செல்லும்போது உற்சாக மனநிலையைக் (Stimulation) கொண்டுவரும். பரவசமுண்டாக்கி சற்று அதிகமாகப் பேச வைக்கும். சற்று அதிகமாகச் சேர்கையில் அதே ஆல்கஹால் மனச்சோர்வை (Depression) உண்டாக்கும். எவ்வளவு ஆல்கஹால் உற்சாக மனநிலையில் இருந்து மனச்சோர்வுக்குக் கொண்டு செல்லும் என்பதைத் துல்லியமாகக் கணிப்பது கடினம். அது அவரவர் வளர்சிதை வலிவு (Metabolism), எடை மற்றும் மரபணு சார்ந்தது. அதைப்பற்றி விளக்கமாகப் பார்க்கலாம். அதற்கு முன்னால், உடலுக்குள் ஆல்கஹால் செல்கையில் என்ன நடக்கிறது என்பதை ஸ்டெப் பை ஸ்டெப்பாகப் பார்க்கலாம்.

UNLOCK அறிவியல் 2.O - 34

ஆல்கஹால் கலந்த பானத்தை உறிஞ்சியதுமே வாய் மற்றும் நாக்கில் இருக்கும் ரத்த நாளங்கள் வழியாக சிறிய அளவு ஆல்கஹால் ரத்தத்தில் கலந்துவிடுகிறது. இது நடந்ததுமே, வரப்போகும் யுத்தத்திற்கு உடல் தயாராகத் தொடங்குகிறது. உணவுப் பாதை வழியாகச் செல்லும்போது இருபது சதவிகிதம் ரத்தத்தில் கலந்துவிடுகிறது. மீதி ஆல்கஹால் குடலைச் சென்றடைகிறது. உணவு செரிமானமானபடி இருந்தால் மெதுவாகவும், இல்லையெனில் படுவேகமாகவும் ரத்தத்தில் சேகரமாகிறது. தண்ணீரில் கலக்கும் பண்புடையது ஆல்கஹால் என்பதால், முதலில் ரத்தத்தில் இருக்கும் நீர்ச்சத்தைக் குறைக்க ஆரம்பிக்கும். ரத்தம் உடலில் வேகமாக ஓடிக்கொண்டே இருக்கிறது என்பதால், தங்களுக்கு வந்து சேரும் ஆல்கஹாலை எப்படிப் பதம் பிரித்துச் செயல்படுத்துவது என்பதில் பல உடல் உறுப்புகள் முனைப்பு காட்டும். குறிப்பாக, இரண்டு உறுப்புகள் : (1) கல்லீரலின் (Liver) பணி ரத்தத்தைச் சுத்திகரித்துக் கொண்டே இருப்பது. ஆல்கஹால் வந்ததும் அதைப் பிரித்து எடுக்கும் பணியில் முனைப்பாகச் செயல்படும் கல்லீரலுக்கு அதன் வலுவையும் தாண்டி ஆல்கஹால் தொடர்ந்து வந்தபடி இருந்தால் காயப்பட்டுப் பழுதாகலாம். கல்லீரலின் செல்கள் தடித்துப் போய் வரும் நோயை சிரோசிஸ் (cirrhosis) என்கிறார்கள். (2) மூளைக்குள் ரத்தம் வழியாகச் செல்லும் ஆல்கஹால், சில அறிவாற்றல் செயல்பாடுகளை (Cognitive functions) மட்டுப்படுத்தி, விரைவாக முடிவெடுக்கும் தன்மையைக் குறைக்கும்.

ரத்தத்தில் இருக்கும் ஆல்கஹாலை அளப்பதன் மூலம் அது எவ்வளவு தூரம் கலந்து செயலாற்றிக்கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளமுடியும். Blood Alcohol Count, சுருக்கமாக, BAC என்ற பெயர் கொண்ட இந்த அளவீட்டை மூச்சுக்காற்றில் இருந்தே எடுத்துவிட முடியும். காரணம், ரத்தம் வழியாக நுரையீரலுக்குச் செல்லும் ஆல்கஹால், சிறிய அளவில் நுரையீரல் திசுக்களின் வழியாக ஆவியாகி நுரையீரலில் சேகரமாகி மூச்சுக் காற்றில் வர ஆரம்பிக்கும். ஆல்விலோர் (Alveolar Air) என அழைக்கப்படும் இந்த ஆவிக்காற்று ரத்தத்தில் இருக்கும் ஆல்கஹாலில் சிறிய பகுதி என்பதை ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக முடிவு செய்திருக்கிறார்கள். Breathalyzer கருவி மூலம், மூச்சுக்காற்றில் இருந்தே ஆல்கஹால் ரத்தத்தில் தற்சமயம் இருக்கிறதா, ஆமெனில் எவ்வளவு என்பதையெல்லாம் சில நொடிகளில் கண்டறிந்து விடலாம். அமெரிக்காவைப் பொறுத்தவரை அனுமதிக்கப்பட்ட BAC மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. அதிகபட்ச அனுமதி 0.08 BAC (100 மில்லி ரத்தத்தில் 80 மில்லிகிராம் ஆல்கஹால்). அதற்கு மேலிருக்கும் அளவில், வாகனங்களை ஓட்டுவது சட்டவிரோதம். இந்தியாவிலும் ஆல்கஹாலை நடைமுறைப்படுத்தும் சட்டம் மாநிலங்களிடமே இருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவு 0.03 BAC மட்டுமே என்கிறது விக்கிபீடியா.

ஆல்கஹால் உடல் உறுப்புகளை பாதித்து கிட்டத்தட்ட 200 நோய்களுக்குக் காரணமாக அமைகிறது; தொடர்ந்து ரத்தத்தில் சேர்கையில் சார்புநிலை (Addiction) ஏற்படுகிறது; ஆண்டுதோறும் உலக மக்கள்தொகையில் ஐந்து சதவிகிதத்திற்கு மேல் இறப்பதற்குக் காரணம் ஆல்கஹால். இப்படிப் பல புள்ளிவிவரங்களை அடுக்குகிறது உலக சுகாதார நிறுவனம்.

பரிணாம வளர்ச்சியில் தனக்குக் கேடானதை விலக்கும் வலிமையை உயிரினங்கள் பெற்றுவிடும் என்பது பரிணாம உயிரியலின் அடிப்படை. அப்படியானால், இன்றும் ஆல்கஹால் மனிதப் பயன்பாட்டில் இருப்பது எப்படி? பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் எட்வர்ட் சிலிங்கர்லேண்ட் எழுதி சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘Drunk - How we sipped, danced and stumbled our way to civilization’ நூலில் இதை விரிவாக விவரிக்கிறார். நூலின் சுருக்கம் இதுதான் - நம் மூளையின் முன்பகுதியில் நெற்றிக்குப் பின்னாக இருக்கும் Prefrontal Cortex, சுருக்கமாக, PFC தான் நமது சிந்தனையையும் செயல்பாட்டையும் கட்டுப்படுத்துகிறது. குழந்தைகளாக இருக்கையில் PFC பகுதி படைப்பாற்றல் (creativity) மிகுந்தும், ஆனால் செயல்திறனில் குறைந்தும் இருக்கும். வளர்ந்தபின்னர் இது தலைகீழாக மாறிப்போய் விடும். சிறிய அளவில் ஆல்கஹால் மூளைக்குள் செல்கையில் PFC மீண்டும் குழந்தை வடிவில் மாறிவிடுவதால், படைப்பாற்றல் தற்காலிகமாகக் கிடைக்கிறது. மற்ற விலங்கினங்களைவிடப் பரிணாம வளர்ச்சியில் மனிதன் கிடுகிடுவென வளர்ந்ததற்குப் படைப்பாற்றலே காரணம். ‘இந்த ஒரு காரணத்தால்தான் ஆல்கஹாலை இன்னும் விட்டு வைத்திருக்கிறது பரிணாம உயிரியல்’ என்பது அவரது வாதம்.

`எந்த அளவிலான ஆல்கஹால் நமது படைப்பாற்றலை அதிகமாக்கும் நிலைக்கு இட்டுச் செல்லும் ? அதற்கு அடிமையாகிவிடாமல், அதன் விளைவுகளால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாகப் பருக உதவும் அறிவியல்பூர்வ வாய்ப்புகள் என்ன?’ போன்ற பல கேள்விகளுக்கு ஆராய்ச்சியாளர்களிடம் பதில் இல்லை. ஆனால், ஆல்கஹால் நம்மை பாதிக்குமா என்பதை அதைப் பருகாமலேயே தெரிந்துகொள்ளும் சாத்தியம் இருக்கிறது என்கிறார்கள் மரபணு நிபுணர்கள். ஆல்கஹாலைச் சார்ந்திருக்கும் நிலை வந்துவிடுமா என்பதை நம்மில் இருக்கும், குறிப்பாக மரபணுக்கள் - ADH1B மற்றும் ALDH2 - என்ற இரண்டும், மற்றவை சிலவும் காட்டிவிடுகின்றன என்று கண்டறிந்திருக்கிறார்கள். ஆக, மரபணுப் பரிசோதனை செய்து ஆல்கஹால் பருகலாமா வேண்டாமா என்பதை முடிவுசெய்யும் தொழில்நுட்பம் விரைவில் கிடைக்கலாம்.

இந்தக் கட்டுரைக்கான பின்னூட்டத்தை வாட்ஸப் மூலம் அனுப்ப வேண்டிய எண்: +1 628 240 4194

- Logging in..