சினிமா
தொடர்கள்
Published:Updated:

UNLOCK அறிவியல் 2.O - 35

UNLOCK அறிவியல் 2.O
பிரீமியம் ஸ்டோரி
News
UNLOCK அறிவியல் 2.O

- அண்டன் பிரகாஷ்

கோழியா, முட்டையா - எது முதலில் வந்திருக்கும் என்பதை சென்ற வாரத்தில் அலசியதற்குப் பொருத்தமாக ஓர் ஆராய்ச்சி நிகழ்வு இப்போது நடந்திருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் யாவ்னே நகரில் அகழ்வாராய்ச்சியாளர்கள் பண்டைப்பொருள்கள் இருக்கும் இடத்தைத் தோண்டி ஆராய்ந்துகொண்டிருக்கும்போது கிடைத்தது - புதைபடிவ உருவில் இருந்த கோழி முட்டை (Fossilized egg). இதற்கு முன்னரும் முட்டை ஓடுகள் கிடைத்திருக்கின்றன. ஆனால், முழு முட்டை கிடைத்திருப்பது இதுவே முதல் முறை. முட்டையின் ஓட்டில் விழுந்திருந்த சிறிய கீறல் வழியாக வெள்ளைக்கரு முழுதும் வெளியேறிவிட்டாலும், சிறிய அளவில் மஞ்சள் கரு படிம வடிவில் எஞ்சியிருக்கிறது. அதை டிஎன்ஏ சோதனைக்கு அனுப்புவது திட்டம். ஆனால், முட்டை ஓட்டை கரிம சோதனை (Carbon dating) செய்ய, மேற்கண்ட முட்டை கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் இடப்பட்டதாக இருக்கும் என்கிறார்கள். கரிமசோதனை எப்படிச் செய்யப்படுகிறது என்பதைப் பார்த்துவிடலாமா?

முதலில் சில அடிப்படைகள்:

தனது கருவில் ஒரே அளவிலான புரோட்டான்கள் உள்ள அணுக்களைக் கொண்ட தூய வடிவத்திற்கு உறுப்பு (Element) என்று பெயர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள 118 Element-களையும் தர வரிசைப்படுத்திய Periodic table of elements கலர் அட்டவணைப் பட்டியல் வேதியியல் மாணவர்களுக்கு அடிப்படையில் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று. உலகில் இருக்கும் அனைத்துப் பொருள்களும் இந்த அட்டவணைப் பட்டியலில் இருக்கும் உறுப்புகள் அல்லது அவற்றின் கலவைகளால் ஆனவையே.

UNLOCK அறிவியல் 2.O - 35

பட்டியலில் ஆறாவது இடத்தில் இருப்பது கார்பன். C என்ற குறியீடு கொண்ட கார்பன், உயிருடன் இருக்கும் / இருந்த கரிமப்பொருள்கள் (Organic matters) அனைத்திலும் இருக்கும். அட்டவணையில் இருக்கும் உறுப்புகளுக்கு ஐசோடோப்புக்கள் உண்டு. ஐசோடோப்புக்கள் அடிப்படை உறுப்பிலிருந்து சற்றே மாறுபட்ட இரட்டையர்கள் போல. புரோட்டான்களும் எலெக்ட்ரான்களும் சம அளவில் இருக்க, நியூட்ரான்கள் மட்டும் எண்ணிக்கையில் மாறுபட்டால், அது குறிப்பிட்ட உறுப்பின் ஐசோடோப் என அழைக்கப்படும். கார்பனுக்கு C12, C13 மற்றும் C14 என மூன்று ஐசோடோப்புகள் உண்டு. கரிமப் பரிசோதனைக்குப் பயனாவது C14 என்ற கார்பனின் ஐசோடோப்பு. உயிரினங்கள் அனைத்தும் - தாவரமென்றாலும் விலங்கென்றாலும் - தொடர்ந்து கரியமில வாயுவில் இருந்து C14-ஐத் தங்களுக்குள் சேகரித்துக்கொண்டே இருக்கின்றன. அவற்றின் வாழ்க்கை முடிவுக்கு வந்ததும், சேகரித்து வைத்திருக்கும் C14 சிதைந்துகொண்டே வரும். அந்தச் சிதைவு எவ்வளவு என்பதை அளந்துவிட்டால், அவை எவ்வளவு நாள்களுக்கு முன்னால் இறந்தன என்பதைத் தெளிவாகக் கணக்கிடலாம்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்திருப்பது சற்று நிம்மதியைத் தருகிறது. தடுப்பூசி விநியோகம் அதிகரித்திருப்பதும் இன்னொரு பாசிட்டிவ் செய்தி. பை தி வே, மக்கள் தொகையில் பாதிக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுவிட்டதால், அமெரிக்கா லாக்டௌன் தளர்வுகளில் இருந்து கிட்டத்தட்ட முழுமையாக வெளியே வந்துவிட்டது. ஆனால், இந்த வருடத்தின் தொடக்க குளிர் மாதங்களில் போதுமான மழை இல்லை என்பதுடன், வெயிலின் அளவும் அதிகமாக இருக்க, வறட்சி தாண்டவமாடத் தொடங்கியிருக்கிறது. பல மாநிலங்கள் நீர்ச் சிக்கனம் பற்றிய புதிய விதிகளை அறிவித்தபடி வருகிறார்கள். சூழலியலாளர்கள் எச்சரித்துக்கொண்டே இருப்பதுபோல், வளிமண்டலத்திற்குள் நாம் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்கும் கரியமில வாயுவைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், புவி வெப்பமயமாதலைக் குறைக்க முடியாது. காலத்திற்கு சம்பந்தமில்லாத புயல்கள், கடல் அளவு உயர்தல் போன்றவை மட்டுமன்றி, மற்றொரு நேரடி ஆபத்து நிகழ்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கமுடிகிறது. அது - காடுகள் பற்றியெறிவது. உதிர்ந்து விழும் இலைகள், மரப்பட்டை போன்றவை அதிகமாக அனல் வீசும் சூரிய வெப்பத்தில் கருகித் தீப்பற்றி எரியத் தயாராக இருக்க, காட்டுத்தீ தொடங்கினால் அதைக் கட்டுக்குள் கொண்டுவரத் தேவையான தண்ணீர் வசதி இல்லாதது இரட்டைச் சிக்கல், மற்றொரு ஆபத்து - காடுகள் பற்றி எரிகையில் வரும் புகையால் ஏற்படும் மாசு. Air Quality Index, சுருக்கமாக, AQI, என்ற அளவீட்டால் அளக்கப்படும் காற்றின் தரம் காட்டுத்தீயால் வெகுவாக பாதிக்கப்படுகிறது. வாகனங்கள், தொழிற்சாலைகள் எனக் காற்றை மாசுபடுத்தும் காரணிகளுடன் காட்டுத்தீயும் சேர்ந்துகொண்டால் உருவாகும் மொத்த விளைவு - மூச்சுக்குத் தேவைப்படும் காற்று நச்சாக மாறத்தொடங்குவது. AQI அளவீட்டை பூஜ்யத்திலிருந்து ஐந்நூறு வரை எனக் கணக்கிடுகிறார்கள். எப்படி அளக்கப்படுகிறது இந்த AQI?

காற்றில் நைட்ரஜன் அதிகமாகவும், ஆக்சிஜன் அதற்கடுத்தும், இன்னபிற வாயுக்கள் மிகக் குறைவாகவும் இருக்கின்றன. இதில் ஆக்சிஜன்தான் நமக்குத் தேவையானது. நைட்ரஜனை நம் உடல் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் வெளியேற்றி விடுகிறது. மீதமிருக்கும் வாயுக்களில் சில நமக்குப் பொருந்தாதவை. அதில் குறிப்பாக இரண்டு வில்லன்கள்: ஒன்று, ஓசோன். அடுத்தது, ஏரோசால் (Aerosol) என அழைக்கப்படும் காற்றுவழியாகப் பரவும் துகள்கள். வளி மண்டலத்தின் மேல்பகுதியில் திரையாக மூடியிருக்கும் ஓசோன் சூரிய ஒளியின் வலிமையைக் குறைப்பதால், பூமி அதீத வெப்பமயமாவது தவிர்க்கப்படுகிறது. காடு எரிகையில் நிகழும் வேதிவினைகளால் உண்டாகும் பல்வேறுவித ஆக்சைடு வாயுக்களுடன் சூரிய ஒளி பாயும்போது ஓசோன் உருவாகிறது. அந்த ஓசோனை சுவாசித்தால் உடல்நலம் பாதிப்படையும்.

காற்றுவழியாகப் பரவும் ஏரோசால் துகள்கள் சமையலுக்காகச் சிறிய அளவில் மரத்தை எரிக்கும்போதே உருவாகும். பெரிய அளவில் தீப்பற்றி எரிகையில் இதன் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகும். நம் தலைமுடியில் மூன்றில் ஒரு பகுதி அளவில் நுண்ணியதாக இருக்கும் இத்துகள்கள் நுரையீரலுக்குள் சென்று அதிலிருக்கும் மடிப்புகளில் படிந்து ஆஸ்த்மா முதல் இதயநோய் வரை இட்டுச் செல்லலாம். இவை இரண்டு மட்டுமல்லாமல், தீ எரியும்போது உருவாகும் கார்பன் மோனாக்சைடு ஆக்சிஜன் அளவைக் குறைத்து மூச்சுத்திணறலை உருவாக்கும்.

AQI எந்த அளவிற்கு இருக்க வேண்டும்? 50க்குள் இருந்தால், நீங்கள் இருக்கும் இடத்தின் காற்று தரமானதாக இருக்கிறது எனக் கருதி பயமில்லாமல் வெளியில் செல்லலாம். 100வரை கூட ஓகே. 150ஐத் தொட்டுவிட்டால், ஆஸ்த்மா போன்ற மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு சிக்கல். 200க்கு மேல் சென்றுவிட்டால் அனைவருக்கும் ஆபத்து.

நீங்கள் இருக்கும் இடத்தில் AQI எந்த அளவில் இருக்கிறது என்பதை அறிய பல வலைதளங்கள் இருக்கின்றன. நான் அடிக்கடி பயன்படுத்தும் வலைதள சேவையின் உரலி - https://www.iqair.com/us/air-quality-map.

சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னால், வடகொரிய அதிபர் கிம் ஜாங் ஊன் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் தென்கொரிய அதிபர் மூன் இருவரையும் தன் நாட்டு எல்லையைத்தாண்டி வந்து சந்தித்தது பரபரப்பாகப் பேசப்பட்டது நினைவிருக்கலாம். எதிரி நாடுகளான தென் மற்றும் வட கொரியா நாடுகளுக்கிடையே பொதுவாக அமைந்திருக்கும், Demilitarized Zone, இடத்தில் சந்திப்பு நிகழ்ந்தது. குடிப்பதற்குத் தண்ணீர், உணவு என மட்டுமல்லாமல், தான் பயன்படுத்தும் போர்ட்டபிள் கழிவறையையும் கொண்டுவந்து விட்டார் கிம். ஒரு வேளை தனது உணவில் விஷத்தைக் கலந்துவிடுவார்களோ என பயந்து உணவு பார்சல் கொண்டுவந்தது ஓகே. ஆனால், கழிப்பறை?

காரணம் இருக்கிறது. தன்னைப்பற்றிய விவரங்கள் எதுவும் தெரிந்துவிடக்கூடாது என்பதில் படு கவனமாக இருப்பவர் கிம். உடலில் இருந்து வெளியேறும் வியர்வை, சிறுநீர் மற்றும் மலத்தை ஆய்வு செய்வதன் மூலம் ஒருவரின் உடல்நலம் எப்படி இருக்கிறது, அவர் எந்த வகையான மருந்துகளை எடுத்துக் கொள்கிறார் என்பதெல்லாம் தெரிந்துவிடும். தென்கொரியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கழிப்பறையைப் பயன்படுத்தினால் அப்படிச் செய்துவிடுவார்கள் என்பதால் கையோடு கொண்டுவந்துவிட்டார் என ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது. மேற்படி சந்திப்புதான் கிம் ஜாங் ஊன் பங்கேற்ற கடைசி சந்திப்பு. 2019 வருட இறுதியில், தனது நாட்டின் வடக்கே இருக்கும் சீனாவின் ஊகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதும், சில மாதங்களிலேயே அது பெருந்தொற்றாக (Pandemic) அறிவிக்கப்பட்டதும் நடக்க, கழிப்பறையைத் தூக்கிக்கொண்டு நாடு நாடாகச் செல்ல வேண்டிய தேவை இல்லாமல்போனது அவருக்கு.

UNLOCK அறிவியல் 2.O - 35

கொரோனா வரும் பலருக்கு அறிகுறிகள் இருப்பதில்லை. மெல்லிய அறிகுறிகள் (Symptoms) இருக்கும் பலர் பரிசோதனை செய்து கொள்வதில்லை. இந்தத் தொடரின் வாசகர் கோயம்புத்தூர் பாஸ்கர் சந்தேகத்தில் Antibody பரிசோதனை எடுத்துக்கொள்ள, அதில் “ஆம், உங்கள் உடலில் கொரோனா வந்து சென்றிருக்கிறது” என முடிவு வந்தது என வாட்ஸப்பில் அனுப்பியிருந்தார். வைரஸால் பாதிக்கப்பட்டு சோதனை செய்துகொள்ளலாம் என விரும்புபவர்கள், மருத்துவமனை அல்லது சோதனைக்கூடங்களுக்கு வருகையில் அவர்களிடமிருந்து வைரஸ் மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்பு இன்னொரு ஆபத்து.

நேரடியாகப் பரிசோதனை செய்யாமல் வைரஸைக் கண்டறிய முடியுமா என்பது பற்றி புதுமையாக்க முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. வியர்வையை முகர்வதன் மூலம் நாய்களால் கண்டறிய முடியும் என்பதைச் சில வாரங்களுக்கு முன்னால் பார்த்தோம். இந்தப் பிரிவில், இன்னொரு புதிய முயற்சியின் முடிவுகள் சென்ற வாரத்தில் ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது. வைரஸ் உடலில் இருக்கும்போது இருமல் மற்றும் மூச்சுக்காற்று வழியாக நீர்த்துளிகளாகப் பொதிந்து வெளியேறுவது மட்டுமல்ல; மனிதக் கழிவுகளிலும் அது இருக்கிறது. இதனால்தான், கொரோனா வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தனிக் கழிவறையைப் பயன்படுத்த வேண்டும் என்பதை CDC, ICMR போன்ற பொதுச் சுகாதார அமைப்புகள் வலியுறுத்துகின்றன. சாண்டியாகோ நகரில் இருக்கும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி அமைப்பு, கழிவறைகளில் இருந்து சேகரமாகும் கழிவுகள் பொது வடிகாலுக்குள் செல்லும் இடத்தில் பரிசோதனைக் கருவிகளை நிறுவியிருக்கிறார்கள். இதன்மூலம் அந்தப் பகுதியில் இருக்கும் யாருக்காவது வைரஸ் இருந்தால் அந்தப் பகுதியில் இருக்கும் அனைவருக்கும் பரிசோதனை செய்வதன் மூலம் நோய்க் கட்டுப்பாட்டு மேலாண்மையைத் திறம்படச் செய்ய முடியும். சென்ற வருடம் நவம்பரில் இருந்து இந்த வருட ஜனவரி வரை மேற்கண்ட ஆராய்ச்சியின் மூலம் நோய் பரவும் விகிதத்தை ஐந்து சதவிகிதம் குறைத்திருப்பதை வெளியிட்டிருக்கிறார்கள். மேற்படி தொழில்நுட்பம் வணிகமுறைக்கு வருகையில் தனிப்பட்டவர்களின் கழிவறைகளில் பொருத்தப்பட்டு, அது வைரஸ் இருப்பதாகக் கண்டறிந்தால், புளூடூத் மூலமாக உங்கள் அலைபேசிக்குத் தகவல் வரும்படி வடிவமைக்கப்படலாம் என்பது எனது எதிர்கால ஊகிப்பு.

விகடன் டாட் காம் தளத்தில், சென்ற வாரக்கட்டுரைக்கான பின்னூட்டத்தில் “உங்கள் கட்டுரை அறிவியல் சார்ந்து பயனுள்ளதாக உள்ளது. உங்களின் ஆங்கிலச் சொற்களுக்கான தமிழாக்கம் அருமை” என, Chalam என்ற வாசகர் எழுத, அந்தக் கருத்திற்கு உடன்படாமல் கட்டைவிரலைக் கீழே காட்டியிருக்கும் துரைசாமி, பாலாஜி இருவர் உட்பட, இந்த வாரக் கட்டுரைக்கான பின்னூட்டங்களை +1 628 240 4194 என்ற எண்ணுக்கு விரிவாக வாட்ஸப் மூலம் அனுப்புங்கள்.

- Logging in...