சினிமா
Published:Updated:

UNLOCK அறிவியல் 2.O - 36

UNLOCK அறிவியல் 2.
பிரீமியம் ஸ்டோரி
News
UNLOCK அறிவியல் 2.

- அண்டன் பிரகாஷ்

பிரிட்டிஷ் இளவரசர் ஹேரி அமெரிக்க கலப்பினப் பெண்ணான மேகனைத் திருமணம் செய்து கலிபோர்னியாவுக்கு வந்தது முதல் அவர்களைப் பற்றிய சர்ச்சைகள் ஓயவில்லை. இப்போது அவர்களுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு லில்லிபெட் டயானா மவுண்ட்பேட்டன்-விண்ட்சர் என்ற நீளமான பெயர். பாட்டி, அம்மா மற்றும் அப்பாவின் சித்தப்பாவான, நம்மூரில் வைஸ்ராயாக இருந்த மவுண்ட்பேட்டன் பெயரையும் ஹேரி இணைத்ததால் இத்தனை நீளம். இளவரசி டயானாவின் பாரீஸ் அகால மரணம் நடந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆகப்போகின்றன. சமீபத்திய பயணத்தின் போது நெட்ப்ளிக்ஸில் பிரபலமான ‘The Crown’ தொடரின் டயானாவைச் சுற்றிச் சுழலும் கடைசி சீசனைப் பார்த்தேன். அரண்மனைப் படாடோப வாழ்விற்குப் பொருந்தாதவராக டயானா இருந்ததையும் அவருக்கும் இளவரசர் சார்லஸுக்குமான பிணக்குகளையும் திறம்படச் சித்திரிக்கிறது தொடர். தன் மனதிற்குத் திருப்தியளிக்கும் சிலவற்றை இளவரசியின் பணிகளாக விரும்பி எடுத்துக் கொண்டார் டயானா. அதில் ஒன்று - கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம்.

கண்ணி வெடிகள்? பார்க்கலாம்.

உலகில் நடந்த பல யுத்த வழிகளில் ஒன்று - தரையில் பதியும் கண்ணி வெடிகளை எதிரிப்படை முன்னேறாத வகையில் தூவிவிடுவது. தரைக்குச் சற்றுக் கீழே பதிந்திருக்கும் இந்தக் கண்ணி வெடிகள் பல ஆண்டுகளுக்குப் பின்னரும் உயிர்ப்போடு இருக்கும். இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட கண்ணிவெடிகள் 75 ஆண்டுகளுக்குப் பின்னும் வீரியமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தரைக்குள் பதிந்திருக்கும் கண்ணிவெடியின் மீது நடந்தாலோ, வாகனம் சென்றாலோ, அழுத்தம் காரணமாக வெடித்துச் சிதறும். வயல் வெளிகளிலும் காடுகளிலும், கடற்கரைகளிலும் பதிந்திருந்த கண்ணிவெடிகள் வெடித்து உயிரிழந்த, உடல் உறுப்புகளை இழந்த மனித சோகம் சொல்லி மாளாது. 78 நாடுகளில் கிட்டத்தட்ட ஆண்டிற்கு மூவாயிரம் வரை கண்ணிவெடிகளால் இன்றும் இறப்புகள் நேரிடுகின்றன என்கிறார்கள். புதைந்திருக்கும் கண்ணி வெடிகளைக் கண்டறிந்து அவற்றைச் செயலிழக்க வைப்பதை Demining என அழைக்கிறார்கள். போர்க்காலத்தில் கண்ணிவெடிகளைத் தூவிப் புதைய வைப்பது எளிது; ஆனால், அவற்றை Demining செய்வது அதிக செலவாகும் செயல் என்பதால் பல நாடுகள் இதைச் செய்வதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. இரண்டாம் உலகப்போரில் போர்க்கைதிகளை ஓடவிட்டு, கண்ணிவெடிகளை மிதிக்க நேர்ந்தால் அவர்கள் சிதறிச் செத்துப்போவதைப் பற்றிய நாஜிக்களின் ஆவணங்கள் உலகைக் கலங்க வைத்தன. உலோகத்தைக் கண்டறியும் உபகரணங்களால் (Metal detectors) புதைந்திருக்கும் கண்ணி வெடிகளைப் பொதுவாகக் கண்டறிய முடியும். ஆனால், அந்தக் கருவிகள் குண்டுவெடிப்பில் வீணாகிப்போவதால் அந்தச் செலவைச் சரிக்கட்டுவது கடினம். மோப்ப சக்தி அதிகம் உள்ள நாய்களைக்கூடப் பயன்படுத்தமுடியாது; காரணம், அவற்றின் எடையும் புதைந்திருக்கும் வெடிகுண்டை வெடிக்க வைத்துவிடுகிறது. இப்போது, ஆப்பிரிக்க பை பெருச்சாளி (African giant pouched rat) என்ற எலியைப் பழக்கியுள்ளார்கள். என்றாலும், பூமியில் பல்லாயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள இடங்கள் தொடர்ந்து ஆபத்தைத் தங்களுக்குள் புதைத்து வைத்துக் காத்திருக்கின்றன.

UNLOCK அறிவியல் 2.O - 36

இளவரசி டயானாவுக்கு வருவோம். 90களின் தொடக்கத்தில் அவர் கொரியா, வியட்நாம், மற்றும் ஆப்பிரிக்காவின் பல நாடுகளுக்கும் பயணம் செய்து, பாதுகாப்பு உடை சகிதம் கண்ணி வெடி களங்களில் நடந்தது உலக மீடியாக்களின் கவனத்தை இந்தப் பிரச்னையின் பக்கம் ஈர்த்தது.

சமீபத்திய அறிவியல் முயற்சி ஒன்று, ‘எளிதாகவும், செலவு குறைவாகவும் தரையில் புதைந்திருக்கும் கண்ணி வெடிகளைக் கண்டறிந்து விடலாம்’ என நம்பிக்கை கொடுத்திருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னால், ஈ-கோலை (E-Coli) என்ற பாக்டீரியாவைப் பற்றி இந்தத் தொடரில் விரிவாகப் பார்த்தோம், நினைவிருக்கிறதா? கெட்டுப்போன உணவுகளிலும் அழுக்கான தண்ணீரிலும் வளரும் இந்த பாக்டீரியா நம் வயிற்றுக்குள் செல்கையில் நஞ்சைப் (Toxin) பீய்ச்சி நம் நலத்தைக் கெடுக்கும் வில்லன். ஆனால், கல்லுக்குள் ஈரம் போல, இந்த வில்லனுக்குள் இருக்கும் நல்ல விஷயத்தைக் கொண்டு வந்திருக்கிறது சமீபத்திய செயற்கை அறிவியல் (Synthetic Biology) வளர்ச்சி.

ஆராய்ச்சியின் அடிப்படை இதுதான்: பாக்டீரியாவின் மரபணுவிற்குள் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. Promoter எனப்படும் பகுதி ஆன்/ஆஃப் சுவிட்ச் போல இயங்கும் தன்மை கொண்டது. Reporter எனப்படும் மற்ற பகுதி வெளிச்சத்தை உமிழும் தன்மை கொண்டது. இந்த உயிரியல் அடிப்படையை எடுத்துக் கொண்ட இஸ்ரேல் நாட்டின் ஹீப்ரு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கடந்த பத்து வருடங்களாக ஈ-கோலை பாக்டீரியாவின் மரபணுப் பிரிவுகளைப் பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம் என்ற முடிவிற்கு வந்தனர். அதன் முதல் பயன்பாடு, கண்ணிவெடிகளைக் கண்டறிவது.

எப்படி நடக்கிறது இது?

வெடிகுண்டிற்குள் TNT என்ற வேதிப்பொருள் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். குவாரிகளில் பாறைகளை வெடிக்கப் பயன்படுவது trinitrotoluene எனப்படும் TNTதான். பூமிக்குள் புதைந்திருக்கும்போது, TNTயின் உபபொருளாக dinitrotoluene, சுருக்கமாக, DNT என்னும் வேதிப்பொருள் உருவாகிறது. ‘பாக்டீரியாவின் மரபணுவை மாற்றியமைப்பதன் மூலம் DNTயைக் கண்டறிந்து சேர்ந்துகொள்ளும் திறன் அதற்கு உருவாகிறது’ என்பது தெளிவானது. அப்படிச் சேர்க்கை நடக்கும்போது, அதன் ரிப்போர்ட்டர் விழித்துக்கொண்டு மின்மினிப்பூச்சாக ஒளிர, அந்த இடத்தில் கண்ணிவெடி இருப்பது உறுதி செய்யப்படுகிறது. பரிசோதனைச் சாலையில் தயாரிக்கப்பட்ட பாக்டீரியாவை ஆளில்லாமல் பறக்கும் ட்ரோன்கள் மூலம் சந்தேகிக்கப்படும் இடங்களில் தூவினால், சில மணி நேரத்திலேயே கண்ணி வெடிகள் புதைந்திருக்கிறதா என்பது தெரிந்துவிடும். இதை நிஜ வாழ்வில் பயன்படுத்த சில தடைகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, 15 டிகிரி செல்சியஸில் இருந்து 37 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே மேற்படி வேதியியல் ஈர்ப்பு ஏற்படும் என்பதால், தகிக்கும் வெப்பம் இருக்கும் இடங்களில் இதைப் பயன்படுத்த இயலாது. அதை மாற்ற தொடர்ந்து ஆராய்கிறார்கள். கண்ணிவெடி கண்டுபிடிப்பு மட்டுமன்றி, மரபணு மாற்றம் கொண்ட பாக்டீரியா வேறு பல இடங் களிலும் பயன்பாட்டுக்கு இன்னும் சில ஆண்டுகளில் வரும் என்பதில் சந்தேகம் இல்லை.

கல்லூரி மாணவர்களிலிருந்து ஓய்வு பெற்ற சீனியர் சிட்டிசன்கள் வரை பலராலும் அன்லாக் படிக்கப்படுவது, வரும் வாட்ஸப் பின்னூட்டங்களிலிருந்து தெரிகிறது. இந்த வரியைப் படிக்கும் நீங்கள் கல்லூரி மாண வராக இருந்தால், ‘அலைபேசி இல்லாத உலகு ஒன்று இருந்தது’ என்பது பழங்கால சரித்திரம் போலத் தோன்றலாம். சீ.சிட்டிசன் என்றால், கணினிகள் இல்லாமல் காகிதம் கொண்டு உலகம் இயங்கிய நினைவு இருக்கலாம். இந்த இரண்டு உலகுகளும் பரிச்சயம் உண்டென்றால், நீங்கள் மத்திய வயதை நெருங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

UNLOCK அறிவியல் 2.O - 36

அதிருக்கட்டும், கணினி யுகம், அதன்பின் வந்த அலைபேசி யுகம் இரண்டிலும் எத்தனை சாதனங்களைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்பதைக் கணிக்க முடியுமா? மைக்ரோசாப்ட், டெல், ஆப்பிள், சாம்சங், ஓப்போ, ஒன்ப்ளஸ் எனப் பல நிறுவனங்கள் பல வகையான சாதனங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். பயன்படுத்தப்பட்டு ஆனால் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கும் சாதனங்களை மற்றவர்களுக்கு நேரடியாக விற்கும் வசதி கொண்ட ebay, இவற்றை வாங்கிப் புதுப்பித்து (Refurbished) விற்கும் அமேசான் போன்றவற்றில் சில சாதனங்களை மட்டுமே விற்க முடியும். பயன்பாட்டின் முடிவிற்கு வந்துவிட்ட சில சாதனங்களில் இருக்கும் பாகங்கள் பிரிக்கப்பட்டு, மறுசுழற்சி முறையில் புதியவை உருவாக்கப் பயன்படுகின்றன. இதுபோல, கழிவைக் குறைக்கும் முயற்சிகள் சில இருந்தாலும், பெரும்பாலான சாதனங்கள் குப்பையில் வீசப்படுகின்றன. ஐம்பது மில்லியன் மெட்ரிக் டன் அளவில் வீசப்படும் சாதனங்களில் பத்து சதவிகிதம் மட்டுமே மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. மின்குப்பை (E-Waste) எனப் பொதுவாக அழைக்கப்படும் இதன் அளவு ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகிக்கொண்டே செல்வது சூழலியலாளர் களைக் கவலையுறச் செய்திருக்கிறது. குப்பையில் மின்னணுச் சாதனங்கள் சிதைய ஆரம்பிக்கும்போது அவற்றிலிருந்து கசியும் ஈயம் (Lead), கணினி, தொலைக்காட்சி போன்ற சாதனங்களில் இருக்கும் திரைகளிலிருந்து உதிரும் பாதரசம் (Mercury) போன்றவை நிலத்தடி நீரில் கலந்து அதை நாசமாக்கும் தன்மை கொண்டவை. தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வர, புதிய சாதனங்கள் வருவதையும் தவிர்க்கமுடியாது. மின்குப்பை மேலாண்மை பற்றிய பல ஆராய்ச்சி முயற்சிகள் நடந்துவந்தாலும், குறிப்பிட்டுச் சொல்லும்விதத்தில் எந்தப் புதுமையாக்கமும் இதுவரை இல்லை. நம்மால் முடிந்த வரை மின்குப்பை அளவைக் குறைக்க முயல்வது நல்லது.

சில டிப்ஸ்:

கணினி, தொலைக்காட்சி, மானிட்டர் போன்றவை பயன்பாட்டின் எல்லைக்கு வந்துவிட்டது என நீங்கள் நினைத்தால், அதைக் குறைந்த விலை என்றாலும் விற்கவோ அல்லது நன்கொடையாகவோ கொடுத்துவிடுங்கள். யாரும் பயன்படுத்தப்படாமல் தூசி படர்ந்து பல வருடங்கள் பரிதாப நிலையில் இருக்கும் சாதனம் யாருக்கும் பயனில்லாமல் இறுதியில் தரையில் தூக்கியெறியப்படவே நேரிடும்.

பயன்படுத்திக்கொண்டிருக்கும் சாதனம் முன்னைப்போல் இயங்கவில்லை என்பதால், உடனடியாகப் புதிய ஒன்றை வாங்கிவிட வேண்டும் என்ற பதற்றம் தேவையில்லை, பெரும்பாலான சாதனங்களை அது வாங்கப்படும்போது இருந்த வகையில் Factory Reset செய்துவிட்டு, அதற்கான மென்பொருள் update-களைச் செய்தாலே அது இயங்கும் வேகத்தை அதிகரித்துவிடலாம்.

புதிய டேப்லெட் அல்லது அலைபேசி வாங்கிய பின்னரும், பழைய சாதனத்தை விட்டுவிட மனம் வரவில்லையா? அதை வேறு வகையில் பயன்படுத்தலாம். உதாரணத்திற்குச் சிலவற்றைப் பகிர்கிறேன்.

பொருத்தமான அலை மென்பொருளை நிறுவிக்கொள்வதன் மூலம் உங்களது பழைய அலைபேசியை வீட்டுப் பாதுகாப்பு உபகரணமாக மாற்றிக்கொள்ளலாம். https://alfred.camera/ என்ற தொழில்நுட்பம் உங்களது பழைய அலைபேசியை கேமராவாக்கி, புதிய அலைபேசியை அந்த கேமராவை இயக்க வைக்க உதவுகிறது.

அலைபேசி சேவையை நிறுத்திவிட்டாலும், அதில் இருக்கும் GPS வசதி தொடர்ந்து இயங்கும் என்பது தெரியுமா? இதைப் பயன்படுத்தி உங்களது பழைய அலைபேசியை நிரந்தர GPS சாதனமாக மாற்றிக்கொள்ளலாம்.

தொலைக்காட்சி, டிவிடி எனப் பல சாதனங்களுக்குப் பல ரிமோட்டுகளை வைத்துத் திணறுகிறீர்களா? பழைய அலைபேசியை யுனிவர்சல் ரிமோட்டாக மாற்ற முடியும். இந்த யூடியூப் உரலி உதவும் - https://youtu.be/Z6fevUmrEYI

நம் வாழ்வில் பின்னிப் பிணைந்திருக்கும் மேகக்கணினியத்தின் (Cloud Computing) பல சேவைகள் நாமாக சாதனங்களை வைத்திருக்கும் அவசியத்தைக் குறைத்துவருகிறது. முக்கியமாக, தகவல் சேமிப்பு. Flash Drive-களுக்கு பதிலாக கோப்புகளைச் சேமிக்கும் கூகுள், மைக்ரோசாப்ட், டிராப் பாக்ஸ் போன்றவற்றின் சேவைகளைப் பயன்படுத்தலாம்.

கவினா மது ஆங்கிலத்திலும், பிரபாகர் தமிழிலும், ஹேமா ஆடியோவிலுமாக G7 நாடுகளின் பட்டியலை, கட்டுரை வெளியான நாளில் கிடுகிடுவென அனுப்பியிருக்கிறீர்கள். பை தி வே, தமிழில் எழுதியிருக்கும் அனைவரும் UK என்பதற்கு இங்கிலாந்து எனக் குறிப்பிட்டி ருக்கிறீர்கள். இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இறையாண்மைக்குத்தான் United Kingdom என்று பெயர். இந்த வாரக் கட்டுரைக்கான பின்னூட்டங்களை எப்போதும் போல் +1 628 240 4194 என்ற எண்ணுக்கு வாட்ஸப் மூலம் அனுப்ப மறந்திட வேண்டாம்.

- logging in -