Published:Updated:

UNLOCK அறிவியல் 2.O - 37

UNLOCK அறிவியல் 2.O
பிரீமியம் ஸ்டோரி
News
UNLOCK அறிவியல் 2.O

- அண்டன் பிரகாஷ்

புதிய அதிபராக அமெரிக்காவில் பதவியேற்ற பைடன், தனது அமைச்சரவையில் கேபினெட் அந்தஸ்து கொண்ட பதவியை அறிவியலுக்கு வழங்கும் திட்டம் இருப்பதை எழுதியது நினைவிருக்கலாம். ஆலோசகர் என்ற பெயரில் அறிவியலுக்கு இடம் இருந்தாலும், பாதுகாப்பு, நிதி, வணிகம் போன்றவற்றிற்கு நிகரான இடம் அறிவியலுக்குக் கொடுக்கப்படுவது இதுவே முதல் முறை.

பை தி வே, அமெரிக்க அதிபருக்கு தனது கேபினெட்டில் யாரை வேண்டுமானாலும் நியமிக்கும் உரிமை இருந்தாலும், மாநிலத்திற்கு இரண்டு என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு பேரைக் கொண்ட செனட் சபை இந்த நியமனங்களை உறுதிப்படுத்த வேண்டும். பைடனால் நியமிக்கப்பட்ட எரிக் லாண்டரை, சென்ற மாதம் செனட் உறுதிசெய்தது.

64 வயதான எரிக் லாண்டரின் அறிவியல் வாழ்க்கைப்பாதை ஆச்சரியமான திருப்பங்களையும், நம்ப முடியாத ஏற்றங்களையும் கொண்டது. கல்லூரியில் கணிதத்தை எடுத்த அவர், அமெரிக்க பிரின்ஸ்டன் மற்றும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்று, பொருளாதாரப் பேராசிரியராக சில வருடங்கள் பணிபுரிந்தார். தகவல் தொழில்நுட்பம் என்ற துறை உருவாகிக் கொண்டிருப்பதை உணர்ந்து, தகவல் பகுப்பாய்வு என்பதில் தன் கணிதத் திறனைப் பயன்படுத்தச் சில முயற்சிகள் செய்து நிம்மதியற்றுச் சுழன்று கொண்டிருந்தவரை உயிரியல் ஈர்த்தது. மூளையின் செயலாக்கத்தை ஒட்டி கணினிகளை உருவாக்குவது பற்றிய தகவல்-நரம்பியல் பிரிவில் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டவருக்கு, எண்பதுகளில் ஆரம்பிக்கப்பட்ட மனித மரபணு வரிசைப்படுத்தும் திட்டத்தில் (Human Genome Project) செயலாற்ற வாய்ப்பு கிடைத்தது. திட்டமிட்ட வருடங்களுக்கு மிகாமலும், ஒதுக்கப்பட்டிருந்த நிதிக்குள் எந்தப் பற்றாக்குறை வராமலும் முடிக்கப்பட்ட இந்தத் திட்டம், உலக அறிவியல் வரலாற்றில் ஒரு மாபெரும் மைல் கல். அதில் முக்கியப் பொறுப்பு வகித்த எரிக் லாண்டர், தான் தத்தெடுத்துக்கொண்ட புதிய மரபியல் (Genetics) மூலக்கூறு உயிரியல் (Molecular Biology) துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள Broad Institute என்ற அமைப்பை MIT மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழங்களின் உதவியுடன் தொடங்கினார். தனது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டவற்றை, 73 காப்புரிமைகளாக வளைத்துப் போட்டிருக்கிறார்.

UNLOCK அறிவியல் 2.O - 37

கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஒருவரை எப்படி உயிரியல் ஈர்த்தது? இந்தக் கேள்வியுடன் எரிக் லாண்டரின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மற்றும் பேட்டிகளைப் படிப்பதில் நேரம் செலவிட்டேன். ஹார்வர்டு பல்கலைக்கழக உரையில் அவர் சொன்ன ஒரு வரி என்னை மிகவும் ஈர்த்தது. ‘கணிதத்தையோ, இயற்பியலையோ எடுத்துக்கொண்டால், அதன் அடிப்படைகள் கண்டுபிடிக்கப்பட்டு நூறாண்டுகளுக்கு மேலாகிறது. உயிரியலில்தான் புதிய அடிப்படை ஆராய்ச்சிகள் நடந்து, அவற்றின் முடிவுகளை நாம் நேரடியாகப் பயனீட்டுக்குக் கொண்டுவந்தபடி இருக்கிறோம்.’

மிகவும் உண்மை!

விலங்குகள், தாவரங்கள் மற்றும் மனித உடலின் குறைபாடுகளைக் களையச் செய்யப்படும் அறிவியல் ஆராய்ச்சிகளைத் தாண்டி, உயிரியல் தனது பாரம்பரிய எல்லைகளுக்கு அப்பால் பயன் தரும் துறையாக விரிந்துவருகிறது. மூளையின் செயல்பாட்டை மிமிக் செய்து வடிவமைக்கப்படும் செயற்கை அறிவு (Artificial Intelligence), எந்திரக் கற்றல் (Machine Learning) போன்றவை மட்டுமல்ல, செல்களின் உயிரியல் (Cellular Biology) ஆராய்ச்சிகள் சம்பந்தமேயில்லாத துறைகளில் பயன்பாட்டுக்கு வருகின்றன. கண்ணிவெடிகளை ஒளிர வைக்கும் மரபணு மாற்றப்பட்ட பாக்டீரியா பற்றி சென்ற வாரத்தில் பார்த்தோம். சூழலியலுக்கு உதவும் இன்னொரு பயன்பாடு பற்றி எரிக்கின் கட்டுரை ஒன்றிலிருந்து அறிந்துகொண்டேன்.

வணிக மாலுமிகளாக இருக்கும் நண்பர்கள் சிலர் பணிபுரியும் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் (Oil tankers) கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லவும், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை யார் வாங்கினார்களோ, அவர்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கவும் குறுக்கும் நெடுக்குமாக ஆண்டு முழுதுவதும் பயணிக்கின்றன. “இந்தப் பயணங்களின் மிகப்பெரிய ரிஸ்க் - எண்ணெய் கசிந்து கடலில் கலந்துவிடும் ஆபத்து” என விளக்கிய புன்னக்காயல் ரசல், நீண்ட நாள் மாலுமி. இது நடக்காமல் என்னென்ன முயற்சிகளைக் கப்பல்களில் மேற்கொள்வார்கள் என்பதையும் விவரித்தார். ஆனால், அவற்றையும் மீறி அவ்வப்போது கசிவு நடந்துவிடுவதைச் செய்திகளில் பார்க்க்கிறோம்.

கச்சா எண்ணெயில் இருக்கும் ஹைட்ரோ கார்பன்கள் பல மில்லியன் வருடங்களுக்கு முன்பாக நடந்த வேதியியல் விளைவு காரணமாக இயற்கையாக உருவானவை என்றாலும், கடல் மற்றும் தரைமட்டத்திற்கு வருகையில் சூழலியல் சிக்கல்களை உருவாக்குகின்றன. உதாரணத்திற்கு, கடலில் கசியும் கச்சா எண்ணெய், கடலில் வாழும் உயிரினங்களை அழித்துவிடுவதோடு, அலைகளின் மூலமாகக் கரைக்கு வந்து அங்கிருக்கும் வாழ்வாதாரங்களையும் சேதப்படுத்திவிடுகிறது. எனவே, கடலில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட உடனேயே அதைச் சுத்தம் செய்துவிட வேண்டும். வீட்டில் சமையலின்போது சிந்தும் எண்ணெயைச் சமையலறைத் தரையில் சுத்தம் செய்வதுபோல எளிதானதல்ல இது. சுழன்று அடிக்கும் காற்றையும், குமுறி எழுந்து நகர்ந்தபடியிருக்கும் அலைகளையும் சமாளித்து சுத்தப்படுத்தல் பணியைச் செய்ய வேண்டும். மிதந்து கொண்டிருக்கும் எண்ணெயை எரியூட்டுவது, மீதமிருப்பதை உறிஞ்சியெடுப்பது என்று கடினமான வேலை இது. இதைத் திறம்படச் செய்யும் ஆபத்பாந்தவனாக எண்ணெய் தின்னி பாக்டீரியாக்கள் சில கண்டறியப்பட்டுள்ளன. Alkanivorax, Marinobacter என்றெல்லாம் பெயரிடப்பட்ட ஏழு வகை பாக்டீரியாக்கள் எண்ணெயில் இருக்கும் ஹைட்ரோகார்பன்களை சுவையான உணவாகக் கருதுகின்றன. இந்த பாக்டீரியாக்களின் மரபணுக்களை மாற்றியமைப்பதன் மூலம் அவற்றின் எண்ணெய் தின்னி மோகத்தை அதிகரிக்க வைக்கமுடியுமா என ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பை தி வே, எரிக் லாண்டர் Brave New Planet என்ற பெயரில் பாட்காஸ்ட் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். அதில் கணிதம், உயிரியல் தாண்டிப் பல முக்கிய அறிவியல் நிகழ்வுகளை அலசுகிறார். அவரது பாட்காஸ்ட் உரலி - https://www.pushkin.fm/show/brave-new-planet/

இந்தத் தொடரைப் பல நாடுகளில் வாழும் தமிழ் வாசகர்கள் படிக்கிறார்கள். அதில், அண்டார்ட்டிக்கா இருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவிலிருந்து சில பின்னூட்டங்கள் வந்திருப்பதால் அங்கு வாசகர்கள் இருப்பது தெரிகிறது.

நியூஸ் ப்ளாஷ்: மேற்படி இரண்டு கண்டங்களில் சையோர்டியைப் பார்க்க முடியாது.

UNLOCK அறிவியல் 2.O - 37

சையோர்டி? இதென்ன குழப்பமான பெயராக இருக்கிறதே என்ற எண்ண ஓட்டம் நியூரான்களின் வழி ஓடி முடிந்ததா? சையோர்டி (Sciuridae) என அமெரிக்க ஆங்கில உச்சரிப்பு வரும் அறிவியல் பெயருக்கு எளிய தமிழ்ப் பதம் - அணில் குடும்பம். உலகின் மற்ற கண்டங்கள் அனைத்திலும் வாழும் அணில் குடும்பத்தில் கிட்டத்தட்ட 300 வகை இருக்கின்றன என்கிறார்கள். 12 செ.மீ அளவிற்கு மட்டுமே வளரும் குள்ள அணிலில் (Pygmy squirrel) இருந்து ஒரு மீட்டர் வரை வளரும் இந்தியப் பேரணில் (Indian giant squirrel) வரை அணில்கள் உருவ அளவுகளில் மாறுபட்டாலும், அவை அனைத்தும் பாலூட்டிகள். முதுகில் மூன்று கோடுகளுடன் நம்மூரில் வலம் வருபவை பனை அணில் (Palm squirrel) என அழைக்கப்படுகின்றன. நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருக்கும் பனை அணிலுக்கு முதுகில் ஐந்து கோடுகளைப் போட்டு வைத்திருக்கிறது இயற்கை.

நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன் அணில் குடும்பம் தோன்றியிருக்கக்கூடும் என அனுமானிக்கிறார்கள் பரிணாம உயிரியலாளர்கள். மரங்களுடனான உப விலங்குகளாக அணில்கள் பரிணமித்திருக்க வேண்டும். மரம் கொடுக்கும் இலை, பழம், கொட்டைகளை மட்டுமே தின்றுகொண்டிருந்த பண்டைய அணில் குடும்பத்தினர், மரத்தை விட்டுக் கீழே இறங்கவில்லை. வருடங்கள் உருண்டோட, சுமார் ஒரு கோடி வருடங்களுக்கு முன்னால், தரையில் என்ன இருக்கிறது என்பதை அறிய இறங்கியபின்னர்தான் பல வித அணில் வகைகள் உருவாக ஆரம்பித்தன. அணில்கள் வாழ்ந்துவந்த காடுகளை நகரங்களாக்கி நாம் வாழ்ந்துகொண்டிருக்க, பலத்த பரிணாம வாழ்வுப் பிடிப்பு கொண்ட அணில்கள் நம்முடன் வாழப் பழகிவிட்டன. மனித நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் பல்கிப் பெருகும் அணில்கள் நம் உணவுகளை உண்ணும் பழக்கத்தை ஏற்றுக்கொண்டுவிட்டன. பல வகை அணில் குடும்பங்களின் உணவுப் பழக்கங்களை ஆராய்ச்சி செய்து கட்டுரை வெளியிட்டிருக்கிறார்கள் ட்யூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். இயற்கையாகப் பெறப்படும் உணவுகளை மட்டுமே உண்டு வரும் காட்டு அணில்களுடன் ஒப்பிடுகையில், மனித சமூகம் வாழும் இடங்களில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட அணில்களுக்கு ரத்தத்தில் சராசரிக்கு அதிகமாக ரத்த சர்க்கரை இருப்பது நிரூபிக்கப்பட்டிருப்பது, நம் உணவுப் பழக்கங்களைப் பற்றிய ரிப்போர்ட் கார்டு என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

Disney தயாரிப்பில் வெளியான Ice Age திரைப்படங்கள் சுமார் 20 லட்சம் வருடங்களுக்கு முன்னால் பூமியில் வாழ்ந்த மிருகங்களைப் பாத்திரங்களாகக் கொண்ட கார்ட்டூன் புனைவுகள். அதில் Scrat என்ற பெயருடன் வரும் வாள்-பல் (Saber-toothed) கொண்ட அணில் வகை அழிந்து போய்விட்டது. கிடைத்த கருவாலி (Oak) மரக் கொட்டை (Acorn) ஒன்றைப் பாதுகாக்க Scrat படும் பிரயத்தனம் காமெடியாகத் தெரிந்தாலும், அதன் பின்னால் நிஜ அறிவியலும் இருக்கிறது. சில அணில் வகைகள் தனிக்காட்டு ராஜாவாகவும், வேறு சில குழுவாகவும் வாழ்கின்றன. இவை தங்களுக்குள் எப்படித் தொடர்புகொள்கின்றன என்பது ஆராய்ச்சியாளர்களின் மற்றொரு ஆர்வ ஏரியா. பிற உயிரினங்களைப்போல், உணவு மற்றும் இனப்பெருக்கம் இரண்டிற்காகவும்தான் அணில்கள் தங்களது தொடர்புத் திறன்களைப் பயன்படுத்துகின்றன. கீச் கீச் என்ற சத்தத்தில் இருந்து, புஷ்டியான வால்களை ஆட்டுவது வரை அணில்களின் ஒவ்வொரு அசைவிற்கும் அர்த்தம் இருக்கிறது. தங்களது முன்னங்கால்களால் பழக்கொட்டையை எடுத்துக்கொண்டு அதன் மேல்பகுதியைப் பல்லால் உரசியபடி அணில் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கொட்டையின் தரத்திற்கேற்றபடி அதை உடனே உண்ண வேண்டுமா அல்லது மழை நேரத்திற்காகச் சேமித்து வைக்க வேண்டுமா என்பதைப் பற்றி முடிவு எடுக்கும் செயல்தான் அந்தப் பல் உரசல். சில வகை அணில்கள் உணவுகளை ஒரே இடத்தில் சேர்த்து வைத்து, அதைப் பாதுகாத்தபடி இருக்கும். தனிக்காட்டு ராஜாவாக வாழும் அணில் வகைகள் பல இடங்களில் மறைத்து வைக்கும். இப்படி மறைத்து வைக்கும் சில இடங்களை மறந்துபோவதால், அந்த விதைகள் செடிகளாக, மரங்களாக வளர்வது நடப்பதுண்டு.

UNLOCK அறிவியல் 2.O - 37

இறுதியாக, தானிருந்த இடத்தில் மனிதன் குடி வந்துவிட்டான் என்ற கோபத்தின் காரணத்தினாலோ என்னவோ, அணில்கள் விருப்பத்துடன் கடித்துத் தள்ளும் ஒரு நவீனப் பொருள் - மின் கம்பிகள். அமெரிக்காவில் இருபது சதவிகித மின்வெட்டுகளுக்குக் காரணம் அணில் கடிகள். மின் விநியோகத்தின் மீது அணில்கள் நடத்தும் இந்த யுத்தம் பற்றிய தகவல்களைத் திரட்டி ஒரு வலைதளமே தயாரித்திருக்கிறார்கள். அதன் உரலி - https://cybersquirrel1.com/

தொடரின் 34-ம் கட்டுரையில் ஆல்கஹால் அறிவியல் பற்றி அலசினோம். அதில் ஒரு பிழை. ஆண்டுதோறும் நடக்கும் இறப்புகளில் ஐந்து சதவிகிதம் ஆல்கஹால் காரணமாக நிகழ்கிறது என்பதற்குப் பதிலாக, உலக மக்கள்தொகையில் ஐந்து சதவிகிதம் என வந்துவிட்டது. ‘என் பெயரைக் குறிப்பிடுவீர்கள் என்பதல்ல நோக்கம்’ என்றபடி தவற்றைச் சுட்டிக் காட்டிய கோட்டாறு தமிழரசனுக்கு நன்றி. இந்த வாரக் கட்டுரைக்கான பின்னூட்டங்களை வாட்ஸப் வழியாக +1 628 240 4194 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள்.

- Logging in...