Published:Updated:

UNLOCK அறிவியல் 2.O - 38

UNLOCK அறிவியல்
பிரீமியம் ஸ்டோரி
News
UNLOCK அறிவியல்

- அண்டன் பிரகாஷ்

இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகளின் ரசிகர்கள் யூரோ கப் இறுதிப்போட்டிக்கு ஆர்வத்துடன் தயாராகிக் கொண்டிருந்த அதே ஞாயிறு அன்று காலையில் வேறொரு பரபரப்பு. அமேசானின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது சொந்த ராக்கெட்டில் விண்வெளிக்குத் தன்னுடன் பயணிக்க ஒருவருக்கு ஏலம் மூலம் வாய்ப்பு கொடுத்ததைப் பற்றிப் பார்த்தோம். அவரது பயணம் இன்னும் பத்து நாள்களுக்குள் இருக்க, அவரை முந்திக் கொண்டு யாரும் எதிர்பாராத வகையில் விண்வெளி சென்று திரும்பிவிட்டார் சர் ரிச்சர்ட் ப்ரான்சன். விர்ஜின் நிறுவனங்களின் தலைவராக இருக்கும் ப்ரான்சன் வெற்றிகரமான தொழில்முனைவர். விமான சேவை, சொகுசுக் கப்பல் சேவை, சூதாட்ட விடுதிகள், மீடியா, தொலைத்தொடர்பு என விர்ஜின் தொடாத துறைகள் குறைவு. பெசோஸின் Blue Origin, மஸ்க்கின் SpaceX போல ப்ரான்சனும் Virgin Galactic என்ற பெயரில் விண்வெளி சேவை நிறுவனம் ஒன்றை வைத்திருக்கிறார். பதினைந்து நிமிடங்கள் நீடித்த அவரது பயணம், நூறு கிலோ மீட்டர்களை விண்வெளியில் தொட்டுவிட்டுத் தரையிறங்கியது. இறங்கிய கையோடு மீடியாவிடம் பேசிய ப்ரான்சன், “விண்வெளிப் பயணம் அனைவருக்கும் சாத்தியம் என்ற அத்தியாயம் இன்று தொடங்குகிறது” என்றார் பூரிப்பாக.

UNLOCK அறிவியல் 2.O - 38

‘விண்வெளிக்கு இன்பச் சுற்றுலா (Space tourism) என்ற புதிய வணிகப் பிரிவு பிறந்திருக்கிறது’ எனச் சிலாகிக்கின்றன ‘வாஷிங்டன் போஸ்ட்’ போன்ற நாளிதழ்கள். வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் உரிமையாளர் ஜெஃப் பெசோஸ் என்பது தேவையற்ற உப செய்தி. விண்வெளிக்குப் பறந்து திரும்புவது என்பது முதல் கட்டம்; அதன்பின்னர் பறந்து அங்கிருக்கும் சர்வதேச விண்வெளி மையத்தில் (International Space Station, சுருக்கமாக, ISS) சில நாள்கள் தங்கியிருந்து திரும்புவது இரண்டாவது கட்டம்; சந்திரன் வரை சென்று வருவது இந்தச் சுற்றுலாத் திட்டத்தின் இறுதித் திட்டம். விண்வெளி சென்று வர டிக்கெட் விலை எவ்வளவு என்ற கேள்வி மனதில் எழுகிறதா? இப்போதைக்கு 2.5 லட்சம் டாலர் (இரண்டு கோடி ரூபாய்க்கு சற்று அதிகம்) என நிர்ணயித்திருக்கிறார்கள். “டூ மச்ச்ச்” என உங்கள் மனதில் பீறிடும் சத்தம் கேட்கிறது. அதே உரையில், ‘விர்ஜினில் இலவச விண்வெளிப் பயணம் செய்யும் வாய்ப்பு இருக்கிறது’ என்றார் ப்ரான்சன். அது என்ன என்பதை இந்தக் கட்டுரையை முடிக்கும் முன்னால் சொல்லிவிடுகிறேன்.

இடைக்குறிப்பு: யூரோ கப்பைத் தவறவிட்டதால் சோகமாக இருக்கும் இங்கிலாந்து ரசிகர்களுக்கு ஆறுதல் - விண்வெளிப்பயணம் செய்த முதல் சிவிலியன் என்ற சாதனையைச் செய்திருக்கும் ரிச்சர்ட் ப்ரான்சன் இங்கிலாந்துகாரர்.

மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், கோடைக் காலங்களிலும் சற்று மென்மையாக இருக்கும் கனடா, அதன் எல்லையை ஒட்டி அமெரிக்காவில் அமைந்திருக்கும் சியாட்டில் நகரத்தைக் கொண்ட வாஷிங்டன், அதற்குக் கீழிருக்கும் ஓரேகான் மாநிலங்கள் எதிர்பாராத அதீத வெப்ப குவிமாட (Heat dome) விளைவில் மாட்டிக்கொள்ள, அமெரிக்கக் கண்டத்தின் பெரும் நிலப்பரப்பு வெக்கையில் தகிக்கிறது.

UNLOCK அறிவியல் 2.O - 38

அதென்ன வெப்ப குவிமாடம்?

அதை அன்லாக் செய்வதற்கு முன்னால், நம் தலைமீது சுழன்றுகொண்டிருக்கும் ஜெட் ஸ்ட்ரீம் (Jet stream) என அழைக்கப்படும் ‘வேகக் காற்றாறு’ எப்படி இயங்குகிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். தானாகச் சுழன்றுகொண்டு, தனக்கு நியமிக்கப்பட்ட பாதையில் சூரியனைச் சுற்றி வந்தபடியிருக்கும் புவிப்பந்தில் நாமெல்லாம் காலையில் எழுந்து, பணிகள் செய்து, இரவில் தூங்கச் சென்று விடுகிறோம். நம்மைச் சுற்றி இருப்பவையும் பெரிய மாற்றங்கள் இல்லாமல் இருந்து கொண்டிருக்கின்றன. ஆனால், நம் தலைக்கு மேல் இருக்கும் வளி மண்டலத்தில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது மேற்கண்ட வேகக் காற்றாறு. பூமியிலிருந்து 8 முதல் 14 கிலோமீட்டர் உயரம் வரையுள்ள Troposphere என்ற வெப்ப மண்டலப் பகுதியில்தான் ஜெட் ஸ்ட்ரீம் சுழன்றடிக்கிறது. எப்படி உருவாகிறது இந்த ஜெட் ஸ்ட்ரீம்?

சுழன்றுகொண்டிருக்கும் பூமியின் மீது பாயும் சூரிய ஒளி சமமாக இருப்பதில்லை. நில நடுக்கோட்டிற்கு அருகில் வெப்பம் அதிகமாகவும், வடக்கு மற்றும் தெற்கு துருவங்களுக்கு அருகே வெப்பம் குறைவாகவும் இருக்கும். இயற்பியல் விதியின் படி, வெப்பமான காற்று மேலெம்பிச் செல்ல, குளிராக இருக்கும் கனக்காற்று கீழிறங்க, இரண்டுக்கும் இடையில் நடக்கும் போரில் உருவாவது ஜெட் ஸ்ட்ரீம் என்ற வேகக் காற்றாறு. பூமி உருண்டையைச் சுற்றி நான்கு பட்டைகளாகத் தொடர்ந்து சுழன்றுவரும் ஜெட் ஸ்ட்ரீம்தான் அனைத்துக் காலநிலை நிகழ்வுகளுக்கும் காரணம். குளிர்காலங்களில் 160 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் ஜெட் ஸ்ட்ரீம், வெப்பக் காலத்தில் 400 கிலோமீட்டரைத் தாண்டி வீசும். மிகவும் முக்கியமாகக் குறித்துக்கொள்ள வேண்டிய மற்றொரு பாயின்ட் - ஜெட் ஸ்ட்ரீம் மேற்கிலிருந்து கிழக்காக மட்டுமே வீசும். பை தி வே, விமானங்கள் பொதுவாக தரையிலிருந்து 35,000 அடி உயரத்தில் பயணிப்பது என்பது தெரிந்திருக்கலாம். இது Troposphere-க்குள் வருகிறது என்பதால், விமானங்களுக்கான நெடுஞ்சாலையாக ஜெட் ஸ்ட்ரீம் உதவுகிறது என்றும் சொல்லலாம். வெப்பக் குவிமாட விளைவிற்குத் திரும்புவோம்.

குளிர்காலத்தில் கடலைத் தொட்டு வரும் குளிர்ந்த காற்றும், கோடை நாள்களில் வரும் வெப்பமாக்கப்பட்ட காற்றும் அதன் அளவில் சரியாக இருந்ததென்றால், பருவங்கள் சரியாக மாறி மழை, வெப்பம் என சரியாகக் காலநிலை மாறியபடியே இருக்கும். கடந்த குளிர்காலத்தில் எப்போதும் இல்லாதபடி பசிபிக் பெருங்கடலின் பல பகுதி சராசரிக்கும் அதிகமாக வெப்பமாகவே இருந்தது என்கிறார்கள். இதன் காரணமாக கோடை வந்ததும் மேலேறிச் செல்ல முயன்ற வெப்பம் ஒரு பெட்டகமாக அடைபட்டுவிட, அதற்குக் கீழிருக்கும் நிலப்பரப்புகள் சூட்டில் தகிக்க ஆரம்பிக்கும். இந்த வரியை எழுதும் வரை அமெரிக்க மேற்கில் வெப்பக் குவிமாடம் விலகவில்லை.

இப்படி திடீரென காலநிலை மாற்றங்களுக்கான காரணம் என்ன என்பதை இந்தத் தொடரைத் தொடர்ந்து படிப்பவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு, இரண்டு வார்த்தையில் காரணத்தைச் சொல்லிவிடுகிறேன்.

அது - கரியமில வாயு. சற்று விரிவாகச் சொல்ல வேண்டுமானால், மனிதர்களின் செயல்பாடுகளால் வளிமண்டலத்தில் சேகரமாகியபடி இருக்கும் அதீத அளவிலான கரியமில வாயு. வெப்பக் குவிமாட விளைவைப் பற்றி அலசும் துறைசார் அறிஞர்கள் “காலநிலை மாற்றம் (Climate change) என்பது அவசர நிலையை அடைந்துவிட்டது. இதை எமர்ஜென்சி அடிப்படையில் சரி செய்ய வேண்டும்” எனத் திகிலூட்டுகிறார்கள். வாகனங்களை ஓட்டுவதற்கும், மின்சாரத் தேவைக்கும் என நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற புதைவடிவ எரிபொருள்களை (Fossil fuels) எரித்துத் தீர்ப்பதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் பெரும் வெற்றி பெறவில்லை. வளி மண்டலத்தில் இருக்கும் கரியமில வாயுவை அப்படியே உறிஞ்சி எடுத்துவிடுகிற தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தும் வகையில் இல்லை. நமக்கெல்லாம் அறிமுகமான இன்னொரு வழியும் இருக்கிறது - கரியமில வாயுவை தனது வாழ்வாதாரமான ஒளிச்சேர்க்கை (Photosynthesis) மூலமாக எடுத்துக் கொண்டு, ஆக்சிஜனை வெளியிடும் மரங்களை நடுவது. குத்துமதிப்பாக மூன்று லட்சம் கோடி மரங்கள் புவிப்பந்தில் குட்டையாகவும், நெட்டையாகவும் நின்றுகொண்டு கரியமில வாயுவைக் கபளீகரம் செய்தபடி இருக்கின்றன.

சென்ற வருடத்தில், கொரோனா லாக்டௌன் தொடங்குவதற்கு முன்னால் ஜெனீவாவில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றம் ‘ஒரு லட்சம் கோடி மரங்கள்’ என்ற பார்வையை உலகத் தலைவர்கள் முன் வைத்தது. அதன் செயலாக்க வடிவங்களாக, உலக வனவிலங்கு நிதி (World Wildlife Fund) போன்ற அமைப்புகள் ஒன்றிணைந்து இதற்கான முயற்சிகளில் மும்முரம் காட்டிவருகின்றன. இதன் அதிக விவரங்களை அறிய அவர்களது வலைதளமான https://trilliontrees.org/-க்குச் செல்லுங்கள்.

இந்த அமைப்புகள் போடும் கணக்கைப் பார்க்கலாம். நமது செயல்கள் மூலம் வருடத்திற்கு 3,600 கோடி மெட்ரிக் டன் கரியமில வாயுவை வெளியிட்டபடி இருக்கிறோம். மரங்கள் 1,600 கோடி மெட்ரிக் டன் அளவிலான கரியமில வாயுவை உட்கொண்டாலும், காட்டுத்தீ போன்ற நிகழ்வுகள், சுமார் 800 கோடி மெட்ரிக் டன் கரியமில வாயு உருவாகக் காரணமாக அமைந்து விடுகின்றன. ஆக, நிகர லாபமாக 800 கோடி மெட்ரிக் டன் மட்டுமே காலியாகிறது. இன்னும் ஒரு லட்சம் கோடி மரங்களை நட்டால், அதிலிருந்து இன்னும் 250 கோடி மெட்ரிக் டன் அளவிலான கரியமில வாயு மட்டுமே குறையும். இது எதிர்பார்த்தபடி நடந்தாலும், நாம் உருவாக்கும் 3,600-க்கு அருகில் வரப்போவதில்லை. இது ஒருபுறம் இருக்க, இப்படிப் பரவலாக மரம் நடும் முயற்சிகள் முன்னரும் எடுக்கப்பட்டு தோல்வி அடைந்திருக்கின்றன என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். 20 வருடங்களுக்கு முன்னால், சீனாவில் விமானங்கள் மூலம் விதைகளைத் தூவி பரவலாக மரங்களை வளர்க்க வேண்டும் என எடுக்கப்பட்ட முயற்சி, துருக்கியில் மரங்களை வளர்க்கிறேன் என்ற பெயரில் மண்ணுக்குத் தகாத யூகலிப்டஸ் போன்ற மரங்கள் வளர்ந்து அதனால் விளைந்த எதிர்மறைச் சூழலியல் விளைவு என இதில் சிக்கல்கள் அதிகம். அரசுகள் எடுக்கும் மெகா முயற்சிகளைவிட தனிப்பட்டவர்களின் முயற்சிகளை ஊக்குவித்தால் அதன் பலன் அதிகமாக இருக்கும் என்பதை மற்றொரு கள ஆய்வு உறுதிசெய்திருக்கிறது.

ஒவ்வொரு பிரச்னையும் ஒரு புதிய வாய்ப்பு என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டிருக்கும் டெக் உலகம், மரங்கள் மூலம் கரியமில வாயு அளவைக் கரைப்பதைக் கையில் எடுத்திருக்கிறது. அதில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவில் ஒரு முயற்சி - https://www.single.earth/

தொடர்சங்கிலி (Blockchain) தொழில்நுட்பத்தின் உதவியுடன் கரியமில வாயுவின் கரைப்பு மதிப்பிற்கு நிகரான டோக்கன்களை நேரடியாக வழங்குகிறது இந்தத் தொழில்நுட்பம். உதாரணத்திற்கு, உங்களிடம் பத்து ஏக்கர் நிலம் இருக்கிறது என்றால், அந்த இடத்தைப் பதிவு செய்து கொண்டு, மரங்களை நட வேண்டும். துணைக்கோள்கள் உதவியுடன் அந்தப் பகுதியைத் தொடர்ந்து கண்காணிக்கும் இந்தத் தொழில்நுட்பம், நூறு கிலோ அளவிலான கரியமில வாயுவை உங்கள் பிரத்யேகக் காடு உட்கொண்டுவிட்டது என்று தெரிந்ததும் உங்களுக்கு ஒரு டோக்கன் வழங்கப்படும். அரசுகளும், தன்னார்வ அமைப்புகளும், ஏன், புதைவடிவ எரிபொருள்களைப் பயன்படுத்தும் வணிக நிறுவனங்களும் இந்த டோக்கன்களை வாங்கிக்கொள்ளும் சந்தை வசதியைக் கட்டிவருகிறார்கள். தனிநபர்கள் என்றில்லை; கிராமங்கள் ஒன்றிணைந்து தரிசாகக் கிடக்கும் இடத்தில் மரங்களை வளர்த்து நேரடி பலனைப் பெற முடியும். மக்களின் மர வளர்ப்பு முயற்சிக்கு நேரடியான வெகுமதியைக் கொடுக்கும் இந்த முயற்சி டெக் உலகில் சிலாகிக்கப்படுகிறது. அவர்களது முயற்சிக்கு முதலீட்டாளர்கள் பணத்தைக் கொடுப்பது இந்தத் தொழில்நுட்பத்தின் மீதிருக்கும் நம்பிக்கைக்கு இன்னொரு அடையாளம்.

UNLOCK அறிவியல் 2.O - 38

Virgin Galactic சேவையில் பயணிக்க இலவசமாக இருவருக்குக் குலுக்கல் முறையில் வாய்ப்பு கொடுக்கப்படவிருக்கிறது. அதில் பங்குபெற உங்கள் விவரங்களை www.omaze.com/space என்ற தளத்தில் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் கொடுங்கள். குலுக்கலில் இருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்; அவர்களுக்கு பிரத்யேக விமானக் கலம் பற்றிய டூர் ப்ரான்சனால் கொடுக்கப்படுமாம். வெற்றிபெற்று விண்வெளிப் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தால், அவரிடம் ‘அன்லாக் 2.0 மூலம் இந்த வாய்ப்பைத் தெரிந்துகொண்டேன்’ என்பதைச் சொல்லிவிடுங்கள்.

இன்னும் இரண்டு வாரங்களில் இந்தத் தொடரை நிறைவு செய்வது என்பது திட்டம். அடுத்த இரண்டு கட்டுரைகளில் எதை அன்லாக் செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்? அலைபேசியை எடுங்கள். +1 628 240 4194 என்ற எண்ணுக்கு வாட்ஸப்பில் உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

- Logging in