உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பரவலால் ஏழு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வைரஸின் பாதிப்பைக் கட்டுப்படுத்த உலகநாடுகளின் அரசுகள் பலவும் மக்களை தங்கள் வீடுகளிலேயே இருக்க உத்தரவிட்டுள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதனால் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஐ.டி ஊழியர்கள் தொடங்கி ரோட்டோரம் சிறு சிறு வியாபாரம் செய்யும் வணிகர்கள் வரை வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அப்படி வீட்டில் அடைந்து கிடக்கும் நம் மக்கள் மொபைல் போன்களில் ஃபார்வேடு மெஸ்சேஜ் அனுப்பியும் இன்ஸ்டாவில் நியூஸ் ஃபீட் பார்த்தும் டிக் டாக் செய்தும் தங்களின் பெரும்பாலான நேரத்தினைக் கழித்துவரும் நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் திடீரென்று அதன் ஸ்டேடஸ் வீடியோக்களின் அளவினை 30 விநாடிகளிலிருந்து 15 விநாடியாகக் குறைத்துள்ளது. இந்தப் புதிய மாற்றம் வாட்ஸ்அப் செயலியின் இந்தியப் பயனாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இது குறித்து வாட்ஸ்அப் பீட்டா இன்ஃபோ பதிவிட்டுள்ள ட்வீட்டில் ``ஊரடங்கு உத்தரவால் தற்போது இந்தியாவில் இணையப் பயன்பாடு வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் ஏற்படும் இன்டர்நெட் டிராபிக்கை குறைக்கவும் வாட்ஸ்அப் சர்வர்கள் சரியாக இயங்கவும் இந்த ஸ்டேடஸ் அளவு 30- விநாடிகளிலிருந்து 15 விநாடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது பீட்டா இன்ஃபோ. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் டிரெயின் ஓட்டும் நம்மில் சிலருக்கு இந்த மாற்றம் சிரமமாக இருந்தாலும் வீடியோ எண்ணிக்கையில் எந்தத் தடையும் விதித்ததாகத் தெரியவில்லை. மேலும், இந்தப் புதிய மாற்றம் தற்காலிகமானதுதான் என்றும் பழையபடி ஸ்டேட்டஸ் வசதி விரைவில் மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வாட்ஸ்அப் மட்டுமல்லாமல் யூடியூப் நிறுவனமும் தனது வீடியோக்களை முப்பது நாள்களுக்கு high definition தரத்திலிருந்து standard definition-க்கு மாற்றுவதாக அறிவித்துள்ளது. ஐரோப்பியாவிலும் கூட யூடியூப் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனங்கள் தங்களின் வீடியோ தரத்தினைக் குறைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.