Published:Updated:

பிக்பாஸையே ஓரங்கட்டும் `குக்கு வித் கோமாளி'... ஷகிலா தொடங்கி ஷிவாங்கி வரை... எப்படி இப்படிலாம்?!

இந்த டாஸ்கில் பாபா பாஸ்கர் Vs தர்ஷா-வில் பாபா பாஸ்கரும், அஷ்வின் Vs பவித்ராவில் அஷ்வினும், தீபா Vs ஷகிலாவில் ஷகிலாவும் ஜெயித்தனர். யாருமே... ஏன் மதுரை முத்துவே எதிர்பாராத வண்ணம் கனி Vs மதுரை முத்துவில் மதுரை முத்து ஜெயித்தார்.

தமிழ் சேனல்களில் செம கலகல, கலர்ஃபுல் ஷோவாக முதலிடத்தில் பரபரக்கிறது 'குக்கு வித் கோமாளி'. முதல்முறையாக 2019-ம் ஆண்டின் இறுதியில் தொடங்கிய முதல் சீசன் வனிதா விஜயகுமாரை வைரலாக்கிவிட, இப்போது 2-வது சீசன் செம வைரலாகிக்கொண்டிருக்கிறது. 'குக்கு வித் கோமாளி'யின் லேட்டஸ்ட் எபிசோடில் என்ன நடந்தது எனப் பார்ப்பதற்கு முன் சமையல் நிகழ்ச்சிகளைப் பற்றி ஒரு குட்டி ஸ்டோரி சொல்லிவிடுகிறேன்.

சமையல் நிகழ்ச்சிகள் 1937-ல் பிபிசி-யால் ஆரம்பிக்கப்பட்டாலும், 1993-ல் ஜப்பான் டிவி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட ‘அயர்ன் செஃப்’தான் உலகம் முழுக்கப் பிரபலமானது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் அதாவது 1999 வரை 300-க்கும் மேற்பட்ட எபிசோட்களுடன் வெற்றிகரமாக ஓட, "இதுக்கு பெரிய கூட்டமே இருக்குடேய்... இவனுக போற எல்லா பக்கமும் ஆளப்போடு" என்று எல்லா நாட்டிலும் இப்படிப்பட்ட குக்கிங் ஷோ-க்கள் களைகட்டத் தொடங்கின. ஸ்பான்ஸர்கள் பணத்தைக் கொட்ட, போட்டியாளர்கள் குவிய, எல்லா நாட்டிலும் இருக்கும் ‘சோறுதான் முக்கியம்' குரூப் கோடிக்கணிக்கில் டிவி முன்னர் உட்கார டி.ஆர்.பி எகிறியது. பிக்பாஸ் மாதிரி வாயைக்கொடுத்து வாங்கிக் கட்டிக்கும் போட்டியாக இல்லாமல், திறமையும், சமயோசிதமும் கலந்து கட்டிய இந்த ஷோவால் கிடைக்கும் செலிபிரட்டி ஸ்டேட்டஸும் இந்த நிகழ்ச்சி வெற்றி பெற மிக முக்கிய காரணம்.

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு மாற்றங்களோடு பல நாடுகளில் களைகட்டி நம் ஊருக்கு வந்திறங்கிய ஷோதான் விஜய் டிவியில் வரும் ‘குக்கு வித் கோமாளி’.

சீசன் 1-ல் ‘குக்’காக ஜெயித்த வனிதாவுக்கு பல புதிய கதவுகள் திறந்தன. அதேபோல கோமாளிகளில் புகழ் "யார் சாமி நீ?” என்று கேட்க வைத்தார். சூப்பர் சிங்கரில் கொஞ்சமே கவனம் பெற்ற ஷிவாங்கி, இதில் அவரது ஸ்பெஷலைஸ்ட் குரலாலும், குறும்புத்தனத்தாலும் சிரிக்க வைத்தார்.

சீசன் 2-வில் ஷகிலா, பாபா பாஸ்கர், ’கடைக்குட்டி சிங்கம்’ தீபா, மதுரை முத்து, பவித்ரா, தர்ஷா, கனி ஆகியோரோடு ‘கன்னிப்பெண்கள் உள்ளத்தில் கையெழுத்துப் போட’ என்றே அஷ்வின் என்பவரையும் களமிறக்கினார்கள். மதுரை முத்துவும், தீபாவும் எலிமினேஷில் வெளியே போனாலும் அவ்வப்போது ஸ்பெஷல் எபிசோடுகளில் வந்து சமையலைத் தவிர எல்லாம் செய்கிறார்கள். தர்ஷா சென்ற வாரம் எலிமினேட் ஆனார்.

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

இனி, கடந்த சனி, ஞாயிறுகளில் ஒளிபரப்பான ஷோவின் ஸ்பெஷல் மொமன்ட்டுகளுக்குள் பயணிக்கலாம்.

வாராவாரம் கோமாளிகளின் கெட்டப்பையும், செலக்ட் செய்யும் கான்செப்டையும் யோசிக்கும் மூளைக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டுகள்! இந்த வாரம் கோமாளிகள் வடிவேலுவின் சினிமா கதாபாத்திரங்களின் ரெப்ளிக்காவாக வந்திருந்தனர்.

கான்ட்ராக்டர் நேசமணி கெட்டப்பில் சரத், கைப்புள்ள கெட்டப்பில் சக்தி, என்கவுன்ட்டர் ஏகாம்பரம் கெட்டப்பில் சுனிதா, நாய் சேகராக பழையஜோக் தங்கதுரை, 23-ம் புலிகேசீயாக ஷிவாங்கி, மாஸ்டர் புல்லட் பாண்டியாக பாலா, துபாய் ரிட்டனாக மணிமேகலை, சூனாபானாவாக பார்வதி என எல்லோரும் வடிவேலுக்களாக உருமாறியிருந்தார்கள்.

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

கனி - சுனிதா, தீபா - சக்தி, தர்ஷா - சரத், ஷகிலா - பார்வதி, பாபா பாஸ்கர் - ஷிவாங்கி, அஷ்வின் - தங்கதுரை, மதுரை முத்து - பாலா என்று குக் - கோமாளிகள் ஜோடி சேர்ந்தனர்.

இதில் இரண்டு அட்வான்டேஜ் டாஸ்க்-குகள் இருக்கும். டாஸ்க் ஒன்னில் ஜெயித்த முதல் நால்வர், டாஸ்க் 2-வில் போட்டி போடுவார்கள். அதில் ஜெயிக்கும் குக்-கோமாளிக்கு அடுத்த நாள் நடக்கும் மெய்ன் டாஸ்க்கில், டாஸ்கைப் பொறுத்து ஏதும் விலக்கு அளிப்பார்கள்.

முதல் அட்வான்டேஜ் டாஸ்க்கில் உரலை வைத்து பச்சைப் பயிறை அரைத்து, அதில் வரும் மாவை எடை போட்டு யார் அதிக மாவு அரைத்து எடுக்கிறார்களோ அவர்கள் அடுத்த டாஸ்குக்கு முன்னேறுவார்கள். பழைய ஜோக் தங்கதுரை கொன்னு கொலையெடுக்க, மதுரை முத்து இன்னொரு பக்கம் கடி ஜோக்குகளை அள்ளித் தெளிக்க அமளி துமளியாக நடந்தது டாஸ்க். முடிவில் மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா, கனி ஆகிய நால்வரும் அடுத்த ரவுண்டுக்குப் போனார்கள்.

அடுத்த ரவுண்ட் அதைவிட கொடூர லெவலாக இருந்தது. ரெண்டு பெரிய சைஸ் கமர்கட்டை குக்குகள் வாய்க்குள் அடைத்துக் கொண்டு, கமர்கட் செய்ய கோமாளிகளுக்கு செய்முறை சொல்ல வேண்டும். யார் அதிக எடை கமர்கட் செய்கிறார்களோ அவர்களுக்கு வெற்றி.

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

வெல்லத்தை உடைக்கவே படாத பாடு பட்டுக்கொண்டிருந்தார்கள். கமர்கட்டை வாயில் வைக்க முடியவில்லை என்று ஷகிலா வெளிநடப்பு செய்துவிட்டார். மதுரைமுத்து பேசமுடியாமல் மாட்டிக்கொள்ள தங்கதுரை அவரிடம் கடிஜோக் ஜொல்லி கடுப்பேற்றிக் கொண்டிருந்தார். பதிலுக்கு சைகையில் கடி ஜோக்கை அரங்கேற்றிக் கொண்டிருந்தார் முத்து.

சுனிதாவின் இந்தி கலந்த தமிழ் கலகல ரகம். அடுப்பில் இரண்டு பாத்திரங்களில் இருந்த வெல்லத்தைக் கிண்ட சைகையில் கனி சொல்ல, “இதையும் கொண்டணும்... அதையும் கொண்டணுமா... கொண்டறேன்” என்றார் சுனிதா.

பாதிக்கு மேல கமர்கட்டை எடுத்துவிட்டு டாஸ்கைத் தொடர்ந்ததில் கனி - சுனிதா இணை வென்றது. அவர்களுக்கு அடுத்தநாள் டாஸ்கில் ஒரு பத்துநிமிடம் விலக்கு அளிக்கப்பட்டது.

அடுத்தநாள் மெய்ன் டாஸ்கில் இரண்டு இரண்டு அணிகளைமோத விட்டார்கள். பாபா பாஸ்கர் Vs தர்ஷா, அஷ்வின் Vs பவித்ரா, தீபா Vs ஷகிலா, கனி Vs மதுரை முத்து என்று எதிர் அணிகள் அமைந்தன.

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

மட்டன், நாட்டுக்கோழி, நாட்டுக் காய்கறி, கீரை என்று டீமுக்கு ஒரு கான்செப்டை எடுத்துக்கொண்டு சமைத்தார்கள். குக் பத்து நிமிடமும், கோமாளி பத்து நிமிடமும் சிலுவை போன்ற ஒரு செட்டப்பில் கைகள் கட்டியபடி நின்று கொள்ள மற்றவர் சமைக்கவேண்டும் என்பது ட்விஸ்ட்.

மாஸ்டர்கள் அப்படி நிற்கும்போது முகத்தை மறைக்கும் மாஸ்க் ஒன்றை மாட்டிக்கொண்டு நின்றது, இன்னும் ஆட்டத்தை சுவாரஸ்யப்படுத்தியது. பாபா மாஸ்டர் அப்படி நிற்க, ஷிவாங்கி அஷ்வின் டேபிளுக்கு அவ்வப்போது சென்று லந்து கூட்டியது, தீபா முகத்தை மூடிக்கொண்டு நின்றிருக்க ரக்‌ஷன் அவரிடம் வம்பிழுத்தது என்று ஜாலியாகவே போனது.

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

இந்த டாஸ்கில் பாபா பாஸ்கர் Vs தர்ஷா-வில் பாபா பாஸ்கரும், அஷ்வின் Vs பவித்ராவில் அஷ்வினும், தீபா Vs ஷகிலாவில் ஷகிலாவும் ஜெயித்தனர். யாருமே... ஏன் மதுரை முத்துவே எதிர்பாராத வண்ணம் கனி Vs மதுரை முத்துவில் மதுரை முத்து ஜெயித்தார். ‘பரீட்சை எழுதினவன் ஃபெயிலு... அதைப் பாத்து எழுதினவன் பாஸூ’ என்பது போல போட்டியாளர் கனியிடம் கோமாளி பாலா ரெசிப்பியும் டிப்ஸும் கேட்டு அதை மதுரை முத்துவிடம் சொல்லி இருவருமாக சமைத்து, ரெசிப்பி சொல்லிக் கொடுத்த கனியையே ஓரங்கட்டி நிற்க வைத்துவிட்டார்கள்!

இந்த டாஸ்க் முடிந்ததும் பொங்கல் ஸ்பெஷலுக்காக ஒரு விஐபி நிகழ்ச்சிக்கு வந்தார். அவர்தான் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை சிவகார்த்திகேயன். இந்த நிகழ்ச்சியை போன சீசனில் ஆரம்பித்து ஒரு எபிசோட் விடாமல் பார்ப்பதாகச் சொன்னவர், நிகழ்ச்சியில் இருந்த ஒவ்வொருவரைப் பற்றியும் வரி வரியாகப் பாராட்டினார். அவர்கள் செய்த குறும்புகள், அவர்களின் ஸ்பெஷல் திறமைகள் என்று நிகழ்ச்சியை அக்குவேறு ஆணிவேறாக அலசினார். குறிப்பாக, “உங்க ரெண்டு பேரோட டிரான்ஸ்ஃபர்மேஷன்தான் குறிப்பா பாராட்டணும். கலக்குறீங்க” என்று ஜட்ஜ் வெங்கடேஷ் பட், தாமு இருவரையும் குறிப்பிட்டார். ஷிவாங்கி மாதிரி மிமிக்ரி செய்து காட்டியது மாஸ் மொமன்ட். கலாயும் பாராட்டும் கலந்து சிவா கொடுத்தது ஒட்டுமொத்த டீமுக்கும் பொங்கல் விருந்து! அங்கே இருந்தவர்கள் அல்லாமல் இல்லாத புகழையும் குறிப்பிட்டுப் பாராட்டியது சிவாவின் டிரேட்மார்க் பாசிட்டிவ் பூஸ்டர்!

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

சிவா பேசும்போது இயக்குநர், எடிட்டர்கள் என்று ஒட்டுமொத்தக் குழுவையும் பாராட்டினார். இந்த இடத்தில் எடிட்டருக்கு நாமும் நம் பங்குக்கு ஒரு பொக்கே கொடுப்போம். ஒவ்வொரு எபிசோடிலும் அவர்களது உழைப்பு வேற லெவல் வெறித்தனம். சிவா பேசும்போதுகூட புகழைப் பற்றிய நிகழ்ச்சி வரும்போது அந்த க்ளிப்பிங், ஷிவாங்கி மாதிரி பேசும்போது ஒரிஜினலாக ஷிவாங்கி பேசிய க்ளிப்பிங், அஷ்வின் சிவாவை எப்போதோ சந்தித்ததைச் சொல்லும்போது அந்தப் புகைப்படம் என்று நிகழ்ச்சியை லைவ்லியாக்குவதில் அவர்கள் பங்கு அளப்பரியது. ஹாட்ஸ் ஆஃப்!

இரண்டாவது ஷகிலா, மதுரை முத்து, பாபா பாஸ்கர், அஷ்வின் ஆகிய நால்வருக்கும் டாஸ்க்காக ஸ்பானர்ஷிப்புக்காக நெய்கொண்டு பொங்கல் வெரைட்டிகளை செய்யும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஸ்பான்சர்களிடம் பேசிய காசுக்கு, - பாவம் - தொகுப்பாளர் ரக்‌ஷன் டேபிள் டேபிளாக போய் நெய், நெய் என்று கூவிக்கொண்டிருந்தார். இதற்கிடையில் சுனிதா அஷ்வினுக்கு ஒரு கவிதையை பாலாவிடமிருந்து காபி அடித்துச் சொன்னது, அதற்கு ஷிவாங்கி பொசசிவ் பொங்கல் வைத்தது, தங்கதுரை “மணல் மணலா இருக்கு... இந்த நெய்ல வீடு கட்லாமா” என்று கொடூர லெவல் காமெடிகளை அள்ளித் தெளித்தது, ‘நெய்யா மெதக்குதே... ஏன் அதுக்கு நீச்சல் தெரியாதா?” என்ற மதுரை முத்துவின் ‘மதுரை வீரன்தானே’ மொமன்ட்ஸ், அஷ்வின் செய்த பொங்கலை ஷிவாங்கி சாப்பிட்டு லவ்வோடு ஒரு பாராட்டு சைகை காமித்தது என்று பலசில சுவாரஸ்யங்களுக்கு இடையே நான்கு டீமும் சமைத்து முடித்தார்கள்.

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

மதுரை முத்துவுடையது மட்டும் கொஞ்சம் பின்தங்க, அஷ்வின், பாபா பாஸ்கர், ஷகிலா மூவருக்கும் செமயான பாராட்டுகளை அள்ளிவழங்கினர் வெங்கடேஷ் பட் & தாமு. அதிலும் தாமு பாராட்டுகிற அழகே தனி! மூவருக்கும் பரிசு கொடுத்து இந்த வார எபிசோடை முடித்து வைத்தார்கள்.

ஆங்... ஒரு முக்கியமான விஷயம்...

இரண்டவாவது சீசனில் ஷகிலா என்று விளம்பரங்கள் வந்தபோது ‘இவனுக கவர்ச்சிக்குன்னே சேர்த்தறாங்க' என்று கமென்ட் அடித்தவர்களை கப்சிப் ஆக்கி வருகிறார் ஷகிலா. இரண்டாம் தர கமென்ட்கள் யாரும் கொடுத்தால் முகத்திலடித்தாற்போல சொல்லவும் அவர் தயங்குவதில்லை. ஸ்பாட்டிலேயே திருப்பிக் கொடுத்துவிடுகிறார். விகல்பம் இல்லாமல் பேசும் கோமாளிகளுக்கு மட்டும் சின்னப் புன்னகையைப் பரிசளிக்கிறார். சமையலிலும் செம அனுபவசாலி. அசத்திக்கொண்டிருக்கும் ஷகிலாவுக்கு அவரது இமேஜையே மாற்றும் நிகழ்ச்சியாக இது இருக்கப்போகிறது!

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

க்யூட் மொமன்ட்!

குழந்தைத்தனத்தோடு கமென்ட் அடிப்பதுதான் ஷிவாங்கியின் ஸ்பெஷாலிட்டி. அஷ்வினை சைட் அடித்தாலும், சக பெண்களை மனதார பாராட்டவும் தவறுவதில்லை ஷிவாங்கி. இந்த வார எபிசோடில் கைகள் கட்டப்பட்டு நின்றிருந்த நிலையில் அஷ்வினைப் பார்த்து ஸ்நேகிதனே ஸ்நேகிதனே பாடலை அவர் காதலோடு பாடிய விதமும், சமையலை மறந்து - கிட்டத்தட்ட மெய்மறந்து - அஷ்வின் அவர் பாடுவதை பிரமிப்போடும் அன்போடும் பார்த்து... கூடவே பாடிய விதமும் செம்ம க்யூட் மாமே!

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

அடடே... சபாஷு!

இந்த எபிசோடின் ஸ்டார் கோமாளி மணிமேகலைதான். துபாய் ரிட்டன் கெட்டப்பில் இருந்த அவர், ஜட்ஜ் இருவரும் செட்டுக்குள் வந்ததும் ரக்‌ஷனிடம், “எனக்கு சென்ட் அடிக்கவும், குடை பிடிக்கவும் ஆள் கேட்டேன். உடனே கூட்டிட்டு வந்துட்டியே?” என்று கேட்டது, ”நெய் பாட்டிலுக்கு க்ளோஸ் கேமரா போறாங்க... அநேகமா நமக்கு ஒரு கிஃப்ட் ஹாம்ப்பர் உண்டு” என்று கமென்ட் அடித்தது என்று மணிமேகலையின் டைமிங் கமென்ட்ஸ் மிகவும் ரசிக்க வைத்தன. அதில் உச்சபட்சமாக ஒன்று.

மணிமேகலையைப் பார்த்து தாமு கேட்டது...

“ஆமா உனக்கு எந்த குக் ஜோடியா வர்ல இன்னும்?

மணிமேகலை: ''நீங்களும், வெங்கடேஷ் பட்டும் வர்ல சார்''

வெங்கடேஷ் பட் ஜெர்க் ஆக, தாமு “என்னது நாங்க குக்கா?”

மணிமேகலை: “இல்லையா பின்ன? சமைக்கவே தெரியாதா? அப்பறம் எப்படி இந்த ஷோவுக்கு ஜட்ஜ் ஆனீங்க?”

மணிமேகலை..... நீ கலக்கும்மா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு