Published:Updated:

`நோ குக்கிங்' அஷ்வின்... பொசஸிவ்னெஸ்ஸில் பொங்கிய ஷிவாங்கி... `குக்கு வித் கோமாளி' அட்ராசிட்டீஸ்!

'குக்கு வித் கோமாளி'யில் இந்த வாரம் பரபர வாரம். எலிமினேஷன் சுற்று என்பதால் சனி, ஞாயிறு இரண்டு நாட்களின் எபிசோடுகளுமே திக்திக் திருவிழாவாகத்தான் இருந்தது.

பாபா பாஸ்கர், அஷ்வின், கனி, ஷகிலா, பவித்ரா ஐவரில் அஷ்வின் சென்ற வாரம் இம்யூனிட்டி சுற்றில் வெற்றி பெற்றதால், அவர் மட்டும் இந்த வாரம் சமைக்க வேண்டியதில்லை என 'நோ குக்கிங்' ஆஃபர் கொடுத்துவிட்டார்கள் நடுவர்கள்.

"இன்றைக்கு யார் எலிமினேஷன்?’' என்று பேச்சு எழ, வாராவாரம் யாருக்காவது ஜோஸ்யம் சொல்லும் பாபா பாஸ்கர் கனியைக் குறி வைத்தார். அமைதியாக நின்று கேட்டுக்கொண்டிருந்த ஷகிலாவை அனைவருமே பாராட்டிக் கொண்டிருந்தனர். போட்டியாளர்களாக அஷ்வினையும், ஷகிலாவையும் பாபா பாஸ்கர் உள்ளிட்ட அனைவரும் பாராட்டினர். ஷகிலா சிரித்துக் கொண்டே இருப்பதையும், அவருக்குக் கிடைத்திருக்கும் ‘அம்மா’ இமேஜ் குறித்து பரவலாக பலர் எழுதிக் கொண்டிருப்பதையும் வெங்கடேஷ் பட் குறிப்பிட்டுப் பாராட்டினார். (நாம எழுதினதப் படிச்சிருப்பாரு போல!)

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

இந்த வாரம், இரண்டு கோமாளிகளோடு குக்குகள் சமைக்க வேண்டும் என்பது விதி. `பாகுபலி'யின் கட்டப்பா, பிங்களத்தேவன் வேடத்தில் தங்கதுரை - சரத், `மைக்கேல் மதன காமராஜன்' திருட்டுப் பாட்டி, திரிபுர சுந்தரியாக மணிமேகலை - ஷிவாங்கி, `தில்லுமுல்லு' இந்திரன் சந்திரனாக பாலா - சக்திராஜ், `தர்மபிரபு' எமன், சித்திரகுப்தனாக புகழ் - சுனிதா ஆகியோர் வேடமிட்டிருந்தனர். சுனிதா எமனை, ‘யமுதன் யமுதன்’ என்றே அழைத்துக் கொண்டிருந்தது மரணகாமெடியாக இருந்தது.

இவர்களில் புகழும் மணிமேகலையும் அந்த வேடத்தை அத்தனை அழகாகத் தாங்கிப் பிடித்தார்கள். புகழ் பல இடங்களில் தனக்குள்ளிருக்கும் சிவாஜியை வெளியே உலவவிட்டுக் கொண்டிருந்தார். `‘கோமாளிகளாக எனக்கு பெண்களே வேண்டாம். பாய்ஸ் யார் வந்தாலும் சரி" என்றார் பாபா பாஸ்கர். "பார்வதி தவிர யார் வந்தாலும் சரி’' என்றார் ஷகிலா. "மணிமேகலை நல்லா சப்போர்ட் பண்ண மாட்டாங்கனு நெனைச்சேன். ஆனா நல்லா ஹெல்ப் பண்றாங்க. அவங்க வந்தா ஓகே'’ என்றார் பவித்ரா.

எமதர்மராஜா, சித்திரகுப்தனான புகழ் - சுனிதாவை ஷகிலா தேர்வு செய்தார். "என் செல்லக்குட்டி சுனிதாவும், என்னை ரொம்ப சிரிக்க வெச்ச புகழும் வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்'' என்றார் ஷகிலா. ‘என் தாயே’ என்று காலில் விழுந்து ஆசி வாங்கிக்கொண்டார் புகழ். பவித்ரா, தங்கதுரை - சரத்தை தேர்வு செய்தார். பிங்களத்தேவன் வேடத்தில் வந்த தங்கதுரை ‘`ஒருத்தர் தன் ஃபோனில் இருக்கும் சிம்மை, அரசனுடைய சேரில் வைத்தார் ஏன்?’' என்று கேட்டார். எல்லாரும் முழிக்க ‘`ஏனென்றால் அது சிம்மாசம்'’ என்று சொல்ல எல்லோரும் அடித்துத் துவைத்தனர். கனி பாலா, சக்தியைத் தேர்வு செய்ய, பாபா பாஸ்கர் மணிமேகலை, ஷிவாங்கியைத் தேர்வு செய்தார்.

ஷகிலா - புகழ்
ஷகிலா - புகழ்

“பொண்ணுக வேண்டாம்னு சொன்ன மாஸ்டர்க்கு நாம போய் அவரு எண்ணத்தை மாத்துவோம்” என்று பாசமழை பொழிந்தார் ஷிவாங்கி. மணிமேகலை, "இன்னைக்கு அவரை வீட்டுக்கு அனுப்புவோம்'’ என்று கிண்டலாகச் சொன்னதும் சீரியஸாக "வேணாம் வேணாம்’' என்று பதறினார் ஷிவாங்கி.

தர்பூசணி ஜூஸ் செய்வதுதான், சனிக்கிழமை நடந்த அட்வான்டேஜ் டாஸ்க். கத்தியில்லாமல் கையால் நசுக்கி, ஜூஸ் செய்ய வேண்டாம். இன்னொரு தர்பூசணி வேண்டுமென்றால். வேறொரு குக்கை அழைத்து நிற்கவைத்து அவரை 10 முறை சுற்றிவிட்டு செஃப்பிடம் சென்று இன்னொரு தர்பூசணி வாங்கிக் கொள்ளலாம். மற்றொரு வொர்க் ஸ்டேஷனில் இருந்து குக், அவர்கள் வேலையை விட்டுவிட்டு வந்து நிற்பார்களா என்பதுதான் எல்லாரின் மனதில் இருந்த கேள்வி.

தர்பூசணி ஜூஸ் - அட்வான்டேஜ் டாஸ்க்
தர்பூசணி ஜூஸ் - அட்வான்டேஜ் டாஸ்க்

ஆளாளுக்கு ஸ்பீடெடுத்து களத்தில் இறங்க, தர்பூசணி தீர்ந்தவர்களுக்காக சுற்றியவர்கள் கலங்கி மயங்கி விழப்போனார்கள். முதல் சுற்றில் கனி, பவித்ரா, பாபா பாஸ்கர் மூவரும் வென்று அடுத்த சுற்றுக்குப் போனார்கள். ஷகிலா - புகழ் - சுனிதா டீம் நான்காவது வந்ததால் அடுத்த சுற்றுக்குப் போகவில்லை. சுனிதா வருத்தப்பட, புகழ் அவரைத் தேற்றினார்.

அட்வான்டேஜ் டாஸ்க் - 2, பூ ஆப்பம் செய்வது. ஆனால் கோமாளி - குக் இருவரும் கையைப் பின்னிக் கோர்த்துக் கொண்டு செய்ய வேண்டும் என்பது விதி. இந்த சுற்றில் மதுரை முத்து புலவர் வேடத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டாஸ்க் ஆரம்பித்ததும் ஆளாளுக்கு சீரியஸாக சமையலை ஆரம்பித்தனர். எப்போதும் வேலையில் கவனமாக இருக்கும் பாபா பாஸ்கர், ஷிவாங்கி பாசத்தில் கொஞ்சம் பேசிக் கொண்டே இருந்தார். ‘அஷ்வினுக்கு மட்டும் பாட்டு பாடினல்ல... எனக்கு ஒரு பாட்டு பாடு’ என்று பாபா பாஸ்கர் கேட்க ‘கண்ணான கண்ணே’ பாடினார் ஷிவாங்கி. ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்று கனி பாட ‘`ஏன் காலண்டர் கிழிக்க மாட்டீங்களா’' என்று கலாய்த்தார் பாலா. ‘திருட்டுப் பாட்டி’ மணிமேகலை வேறு வொர்க் ஸ்டேஷனில் சமைத்து வைத்திருந்த ஆப்பத்தை லவட்டிக் கொண்டு வந்தார். ஷகிலாவைப் பார்த்து "எங்கப்பா உங்க ஃபேன்'’ என்று பாலா சொல்ல, ‘எங்க வீட்டுக்காரரும் அவங்க ஃபேன்தான்’ என்று ஃபீலானார் கனி.

கடைசியில் அட்வான்டேஜ் டாஸ்க்கில் கனி & பாலா வெற்றிபெற்றனர்.

போட்டியாளர்கள்
போட்டியாளர்கள்

ஞாயிறன்று நடந்த மெய்ன் டாஸ்கில் என்ன டிஷ் செய்வது என்று கோமாளிகள் தேர்வு செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டது. டார்க் ரூமுக்கு குக்குகள் சென்றுவிட, வட்டாரச் சமையல்தான் இன்றைய டாஸ்க் என்று அறிவித்தனர். "ஓட்ட ஓட்டையா இருக்குறதுதான் ஒட்டார சமையலா" என்று அறிவுப்பூர்வமாக ஒரு கேள்வி கேட்டார் சுனிதா.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு வட்டார உணவுகள் வைக்கப்பட்டன. காபி, குழிப் பணியாரம், பள்ளிபாளையம் சிக்கன், அல்வா என்று நான்கு வைக்கப்பட்டன. பாலா அல்வாவைத் தேர்வு செய்ய திருநெல்வேலி வட்டாரச் சமையல் கனிக்கும், மணிமேகலை பள்ளிபாளையம் சிக்கன் தேர்வு செய்ய கொங்கு சமையல் பாபா பாஸ்கருக்கும், புகழ் குழிப்பணியாரம் தேர்வு செய்ய செட்டிநாடு சமையல் ஷகிலாவுக்கும், தங்கதுரை காபியைத் தேர்வு செய்ய கும்பகோணம் வட்டார சமையல் பவித்ராவுக்கும் கிடைத்தன. அட்வான்டேஜ் டாஸ்க்கில் ஜெயித்த கனியிடம் வட்டாரத்தை மாற்றிக் கொள்கிறீர்களா என்று கேட்க "இன்னொருத்தங்களை கவுத்து நாம ஜெயிக்கணுமா" என வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

மெய்ன் டாஸ்கில் இடையூறு இல்லாமலா? `சேது'வில் விக்ரம் கட்டிக்கொண்டது போல இருபுறமும் பெரிய வளையத்துடன் சங்கிலி கொடுக்கப்பட்டது. குக்கும், கோமாளியும் ஒரு கால், ஒரு கையில் அதைக் கட்டிக்கொண்டு சமைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. "ரொம்பவும் கஷ்டமா இருக்கு’' என்று சிலர் புலம்பினாலும் சமைக்கத் தயாராகினர்.

மணிமேகலை, செஃப் இருவர் உள்பட எல்லாரையும் கலாய்த்து கமென்ட் அடித்துக் கொண்டிருந்தார். புகழ், ஷகிலாவுடன் கோமாளியாக வேலை செய்வதற்கு நடுவில் தன் புனிதமான லவ்வுக்கு உண்டான வேலையையும் இடைவிடாமல் செய்து கொண்டிருந்தார் புகழ். அவர் அவ்வப்போது பவித்ராவுக்கு உதவி செய்வதையும், பவித்ரா வொர்க் ஸ்டேஷனுக்கு சென்று கொஞ்சம் பந்தா செய்வதை கவனித்தாலும் பல்லைக் கடித்துக்கொண்டு சகித்துக் கொண்டிருந்தார் ஷகிலா. கனி, சுனிதாவுக்கு பழமொழி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். மணிமேகலையை, பாபா பாஸ்கர் பாராட்ட பொசசிவ்னஸ்ஸில் பொசுங்கினார் ஷிவாங்கி. "நீயும் செல்லம்தான் செல்லம்'’ என்று சமாளித்தார் பாபா பாஸ்கர்.

பாபா பாஸ்கர் - குக்கு வித் கோமாளி
பாபா பாஸ்கர் - குக்கு வித் கோமாளி

இதற்கிடையில் பாலாவும் புகழும் போய் ஆப்பிளை மொசுக்கிக் கொண்டிருக்க வெங்கடேஷ் பட் பார்த்து துரத்திவிட்டார். `‘என் தாயை சங்கிலியோட இப்படிப் பார்க்க வெச்சுட்டீங்களே’' என்று சோக செண்டிமென்ட் போட்டு அழுதார் புகழ். அவர் அழ அழ, பார்க்கும் நமக்கு சிரிப்பு தாங்கவில்லை. அடுத்து அதே டயலாக்கை கனியின் வொர்க் ஸ்டேஷனுக்குப் போய் சொன்னார். "கனிய என்னால இப்படிப் பார்க்க முடியல’' என்று புகழ் சொல்லிவிட்டு, அதே சீனோடு பவித்ராவிடம் போய் நின்று அழுதார். பவித்ரா ஒரு செகண்ட் கூட கண்டுகொள்ளாமல் சமைத்துக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் மிக்ஸி சவுண்டுக்கு டான்ஸ் மூவ்மென்ட் போட்டுக்கொண்டிருந்தார் பாபா பாஸ்கர்.

பாபா பாஸ்கர் ‘கொங்கு மீன் கொழம்பு’ செய்து கொண்டு வந்து கொடுத்தார். ‘கொங்கு ஃபுட் என்றால் சிக்கன் அல்லது மட்டன் செய்வார்கள். பள்ளிபாளையம் சிக்கன், சிக்கன் சிந்தாமணி இதெல்லாம்தான் கொங்கு. இருந்தாலும் நீங்கள் செய்த மீன் கொழம்பு ஓகேதான்’ என்றனர் நடுவர்கள். ‘செட்டிநாடு மட்டன் லிவர் ஃப்ரை’ செய்து கொண்டு வந்தார் ஷகிலா. ‘`சமையலாக ஓகே. ஆனால் செட்டிநாடு ஃப்ளேவர் இருக்கா என்றால் கேள்விக்குறிதான்'’ என்றார் தாமு.

பவித்ரா - புகழ் | குக்கு வித் கோமாளி
பவித்ரா - புகழ் | குக்கு வித் கோமாளி

உடன்நின்றிருந்த புகழிடம், "எதுக்கு நீயும் பாலாவும் ஆப்பிள் சாப்டீங்க?’' என்று செஃப் தாமு கேட்கவும், “பாலா... இங்கவா...” என்று அழைத்த புகழ் “அப்பா... சரத் என்ன சொன்னான் தெரியுமாப்பா?” என்று சொல்லி கொஞ்ச நேரம் ஆர்ப்பாட்டம் செய்தார். “நான் என்னடா சொன்னேன்...” என்று சரத் கேட்கவும் “ஏண்டா... நீ என்ன சொன்ன... என்ன சொன்ன” என்று அவரைப் புரட்டி எடுத்தனர். “சரத் சொன்னதுக்கும் நீ ஆப்பிள் சாப்டதுக்கும் என்னடா சம்பந்தம்?” என்று கேட்டார் தாமு. இடையில் பாலா “சரத் என்ன சொன்னான்னா...” என்று ஆரம்பிக்க “சொல்லாதடா.. கன்டென்ட் முடிஞ்சிரும்” என்று தடுத்தார் புகழ். இப்படி கொஞ்சநேரத்துக்கு செட்டில் அதகளம் செய்தார் புகழ். "முடியவே முடியலடா... நான் ஒண்ணும் கேட்கலடா” என்று ஓடினார் செஃப் தாமு.

கனி & டீம் ‘நெல்லை மீன் குழம்பு’ செய்து கொண்டு வந்தனர். "ஓகே ரகம்'' என்று நடுவர்கள் சொன்னார்கள். பவித்ரா டீம் ‘கும்பகோணம் கடப்பா’ செய்து கொண்டு வந்தார். ``நிறமும், செய்முறையும் கடப்பா மாதிரி இல்லை'' என்றார்கள் நடுவர்கள். "வட்டாரச் சமையலில் யாருமே அழுத்தமாக சமைக்கவில்லை'' என்று அறிவித்தனர். நால்வரில் ஷகிலா மட்டும் கொஞ்சம் ஓகே ஆகி, சேஃப் ஸோனுக்குப் போனார். மற்ற மூவரும் எலிமினேஷனின் அடுத்த சுற்றுக்குப் போனார்கள்.

இரண்டாவதாக ‘நவதானிய சேலஞ்ச்’ செய்யும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட 25 நிமிடத்தில் பாபா பாஸ்கர் ‘சென்னா மசாலா’வும், பவித்ரா ‘நவதானிய லட்டு’வும், கனி ‘மொச்சப்பயிறு கொண்டக்கடலை கத்திரிக்காய் கொழம்பு’ம் செய்து சமர்ப்பித்தனர்.

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

மூவரின் சமையலும் ஏகபோக பாராட்டைப் பெற்றது. செஃப் தாமுவும், வெங்கடேஷ் பட்டும் பவித்ராவின் யோசனையைப் பாராட்டினர். நவதானியத்தில் லட்டு செய்ய நினைத்ததும், அதை செய்த விதமும் சிறப்பாக இருந்ததாகச் சொன்னார்கள். கனி மற்றும் பாபா பாஸ்கர் இருவரின் சமையலுமே அதே போல பாராட்டுப் பெற்றது.

மூவரையும் நிற்க வைத்து யார் எலிமினேஷன் என்று சொல்ல வேண்டிய தருணம். "மூவரின் சமையலும் மிகச் சிறப்பு என்றாலும் ஏதாவது ஒரு குற்றம் கண்டுபிடித்து எலிமினேஷன் செய்து போட்டியை மேற்கொண்டு நடத்த வேண்டும்’' என்றெல்லாம் பில்டப் கொடுத்த வெங்கடேஷ் பட், ‘`இரண்டு சீசன்களிலும் இல்லாத விதமாக, இன்று எலிமினேஷன் இல்லை'’ என்று அறிவித்தார். "தகுதியான சமையல் செய்தபிறகும் எலிமினேட் செய்வதும் தவறுதான் என்பதால் எலிமினேஷன் இல்லை" என்றார்கள் நடுவர்கள்.

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி
அரங்கில் குக், கோமாளி எல்லாரும் சந்தோஷக்கூச்சலிட இந்த வார எபிசோட் முடிவுக்கு வந்தது. அடுத்த வாரம், அஷ்வினும் களத்தில் இறங்குவார் என்பதால் போட்டி இன்னும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு