Published:Updated:

``சொல்லவேண்டாம்னுதான் இருந்தேன்... முடியலை. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு!’’ - `ஃபைனலி’ பாரத்

`சிவகார்த்திகேயன் மாதிரி காமெடி பண்றோம், ஆங்கர் ஆகுறோம். அப்புறம் 'மெரினா' மாதிரி ஒரு படத்துல நடிக்குறோம். சூப்பர் ஹீரோ ஆகுறோம், இருபது கோடி ரூபாய் சம்பளம் வாங்குறோம்'னு கனவு கண்டேன்.

"வாழ்க்கையில எடுத்தவுடனே ஜெயிக்க முடியாது. பல தோல்விகளைப் பார்த்துட்டுதான் ஜெயிக்க முடியும்னு தெரிஞ்சுக்கிட்டேன். நான் பார்த்த பல தோல்விகள்தான், என்னை இப்போ 'பைனலி' பாரத்னு பேர் தெரியுற அளவுக்கு கொன்டு வந்திருக்கு. என்ஜினீயரிங் முடிச்சிட்டு கோயம்புத்தூர்ல இருந்து சென்னைக்கு பஸ் ஏறினப்போ, `சிவகார்த்திகேயன் மாதிரி காமெடி பண்றோம், ஆங்கர் ஆகுறோம். அப்புறம் 'மெரினா' மாதிரி ஒரு படத்துல நடிக்குறோம். சூப்பர் ஹீரோ ஆகுறோம், இருபது கோடி ரூபாய் சம்பளம் வாங்குறோம்'னு கனவு கண்டேன். ஆனா, எனக்கு மட்டும் அந்த கனவு வரல, என்கூட பஸ்ல இருந்த 50 பேருக்கும் அதே கனவுதான்னு அப்புறம்தான் தெரிய வந்துச்சு. ஏற்கெனவே நிறைய பேட்டிகள்ல சொன்ன மாதிரியே 2014-லேயே யூ-டியூப் சேனல் ஆரம்பிச்சவன் நான். கிட்டதட்ட 7 சேனல்கள் வரைக்கும் ஆரம்பிச்சு, எதுவும் சரியா போகாம, மறுபடியும் கோவைக்கு கிளம்ப மூட்டை கட்டிட்டு இருந்தப்போ ஒரு புரொடியூசர் கிடைச்சார்.

ஃபைனலி டீம்
ஃபைனலி டீம்

அவர் உதவியால் ஆரம்பிச்சதுதான் இந்த 'பைனலி' சேனல். ராஜூ, பாலு, நிரஞ்சன்னு எல்லோரும் அடுத்துடுத்து வந்தாங்க. கடைசியா வந்து சேர்ந்தது தர்ஷனி. ஆனா, எல்லாத்துக்கும் முன்னாடி பிராங்க்ஸ்டர் ராகுல் வந்துட்டு, வந்த வேகத்திலேயே போயிட்டார். இப்போ நாங்க எல்லாரும் ஒன்னா சேர்ந்து ஜீ தமிழ்ல ஷோ பண்ணிட்டு இருக்கோம். ஜீ தமிழ்ல 'காமெடி கேங்ஸ்டர்ஸ்' தொடங்கின உடனே எங்க கிட்டேதான் முதல்ல கேட்டாங்க. முதல்ல அதிகாரபூர்வமா கமிட்டானதும் 'பைனலி' சேனல்தான். அப்புறம் ஜீ தமிழ் பிரவின் சாரும் நானும் சேர்ந்தே நிறைய யூ-டியூப் சேனல்கள் கிட்டே பேசுனோம். எங்க நிகழ்ச்சியோட கான்செப்ட் எல்லாமே டைரக்‌டர் நிரஞ்சன் பார்த்துக்குவார். அஞ்சு நிமிஷம் வீடியோ எடுக்குறதுக்கான ஸ்க்ரிப்டை ஒரு மாசம் வரைக்கும் எழுதுவார். ஆனா, இவர் ஸ்க்ரிப்ட் எழுதுறப்போ மத்தவங்க யார் வந்தாலும் உள்ளே எடுத்துக்க மாட்டார். அவரே உட்கார்ந்து முழு ஸ்க்ரிப்ட்டும் முடிச்சாதான் அவருக்கே நிம்மதியா இருக்கும். அதே மாதிரிதான் கிருஷ்ணாவும். எங்க சேனல்ல மொத்தமா 38 பேர் இருக்கோம். ஆனா, ஸ்க்ரீன் முன்னாடி வந்து நடிக்குறது பத்து பேர் மட்டும்தான். அவ்வளவு சீக்கிரமா யாரையும் ஆன் ஸ்க்ரீன் விட்டுற மாட்டோம். நல்ல நடிக்குறான்னு மட்டுமில்லாம சூப்பர்னு பேர் வாங்குனாதான் உள்ளே நடிக்க வரமுடியும். அதுவும் ஆக்டிங் எனக்கு ரொம்ப பிடிக்கும்ங்கிறதால அந்த டிபார்ட்மென்ட்டை நான்தான் பார்த்துக்குறேன்.

எங்கே சேனல் ஹிட் அடிக்க ஆரம்பிச்ச நேரத்துல பல யூ-டியூப் சேனல்கள் கொடிகட்டு பறந்துட்டு இருந்தாங்க. இருந்தாலும் எங்களுக்குனு ஒரு பெயர் கிடைச்சது. அதுக்கு அப்புறம் நான் யாரையும் என்னோட போட்டியா பார்க்கல. பலர் எனக்கு குருவாதான் யூ-டியூப்ல தெரிஞ்சாங்க. என்னுடைய ஆக்டிங் பார்த்துட்டு ஆர்.ஜே.விக்னேஷ் அண்ணா போன் பண்ணினது மறக்கவே முடியாது. யாரோ போன் பண்றாங்கனு எடுத்தேன். 'தம்பி நல்லா நடிக்குறடா, பிரிச்சு எடுக்குற... நடிக்க தெரிஞ்ச மிர்ச்சி சிவா'னு சொன்னார். உடம்பெல்லாம் சிலிர்த்து போயிருச்சு. மிர்ச்சி சிவா அண்ணாவுடைய தம்பி மாதிரியே இருக்கடா'னு சொல்லிட்டு இருப்பார். `நக்கலைட்ஸ்' ராஜேந்திரன் அண்ணாவும் மனசார பாராட்டினார். யூ-டியூப்ல சீனியர்ஸ் எல்லாரும் என் குரு மாதிரிதான். சொல்லப்போனா விஜய் டி.வி.யோட எல்லா ஆடிஷன்லேயும் கலந்துக்கிட்ட பையன் நான். எப்போ ஆடிஷன் போனாலும் அங்கே நூறு பேர் எனக்கு முன்னாடி நின்னுக்கிட்டு இருப்பாங்க. ரியோ, பாலசரவணன் நின்னுட்டு இருந்த க்யூவ்ல நானும் நின்னுருக்கேன். ஆனா, எந்தவொரு ஆடிஷனுக்கு போனாலும் வெற்றிங்குற வார்த்தையைக் கேட்காமதான் வெளியே வருவேன். அதனால, வாய்ப்புகளை நம்மளே உருவாக்குவோம்னு நினைச்சிக்கிட்டுதான் யூ-டியூப் வந்தேன். காலேஜ் படிச்ச காலத்துல இருந்து யூ-டியூப் மேலே பெரிய காதல் இருந்தது. இது அசுர வளர்ச்சி அடையும்னு நம்பினேன்.

ஃபைனலி பாரத்
ஃபைனலி பாரத்

ஆன்ட்ராய்டு போன் புதுசா மார்கெட்ல வந்தவுடன், என் கைக்கு வந்துரும். வீட்டுலேயும் வாங்கி கொடுத்துருவாங்க. உடனே, அதை முழுசா பிரிச்சி பார்த்துடுவேன். கிட்டதட்ட ஆன்ட்ராய்டு போனுக்கு பிரசவமே பார்த்திருக்கேன்னு சொல்லலாம் . நான் பண்ணின இப்படி கிறுக்குத்தனமான காரியங்கள்தான் என்னை இன்னைக்கு யூ-டியூபரா மாத்திருக்கு. டெல்லி கணேஷ் சார் மாதிரியான லெஜென்ட் ஆக்டர்லாம் எங்களோட சேனல்ல நடிக்குறத பெருசா நினைக்குறோம். ஆக்‌ஷன் சொல்ற வரைக்கும் எதுவும் பண்ணாம சாதராணமாதான் இருப்பார். ஆனா, கேமரா ஜூம் போயிட்டா நடிப்புல பிச்சு எடுத்துருவார். இப்போ அவரை வெச்சுதான் 'மாமனுக்கு மரியாதை' முழு சீரிஸ் எடுத்திருக்கோம். கிட்டதட்ட ஐம்பது நிமிஷம் வரைக்கும் போகும்.'' என்றவரிடம் 'திடீர்னு திருமணம் முடிச்சதால 'மாமனுக்கு மரியாதை' வெப்சிரீஸ் எடுத்தீங்களா?'னு கேட்க "ஐயோ... அப்படியெல்லாம் இல்லைங்க. எனக்கு திருமணம் ஆனது உண்மைதான். வெளியே யாருக்கும் தெரியாம பார்த்துக்கலாம்னு பார்த்தா.. ப்ளாக் ஷீப் ஆட்கள் எங்கே போனாலும், எனக்கு கல்யாணம் முடிஞ்சத சொல்லிக்கிட்டே இருக்காங்க. சொல்லப் போனா என் கல்யாணத்துக்கு கொள்கை பரப்பு செயலாளரா வேலை பார்த்துட்டு இருக்காங்க. கல்யாணம் வாழ்க்கையும் நல்லாதான் இருக்கு. கொரோனா வந்ததால எல்லாரும் எவ்வளவு அமைதியா இருக்காங்களோ அதுமாதிரி. கிட்டதட்ட எட்டு வருஷம் காதல் திருமணம் எங்களோடது.'' என்கிறார் `பைனலி' பாரத்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு