Published:Updated:

Exclusive: தீபாவளி பட்டிமன்றத்தில் பேசுவாரா பாரதி பாஸ்கர்? - சாலமன் பாப்பையா & ராஜா பதில்!

`பாரதி பாஸ்கர் எப்படி இருக்கிறார்?' - அவரை அறிந்த பெரும்பாலானோரும் இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவரின் உடல்நிலை குறித்து பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர் ராஜாவிடம் பேசினோம்.

`பாரதி பாஸ்கர் எப்படி இருக்கிறார்?' - அவரை அறிந்த பெரும்பாலானோரும் இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கின்றனர். பட்டிமன்றம் மற்றும் தன்னம்பிக்கைப் பேச்சாளராக நமக்குப் பரிச்சயமான பாரதி, கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால், தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்தக் கடுமையான பாதிப்பிலிருந்து குணமானவர், இயல்புநிலைக்குத் திரும்பி வருகிறார்.

பாரதி பாஸ்கர்
பாரதி பாஸ்கர்

பண்டிகை என்றாலே பட்டிமன்றம்; பட்டிமன்றம் என்றாலே பாரதி பாஸ்கர். தனது பேச்சுத்திறனால் இந்தச் சிறப்பைப் பெற்றிருக்கும் பாரதி, ஏறத்தாழ கடந்த 20 ஆண்டுகளாகவே சன் டிவி பட்டிமன்றங்களில் தவிர்க்க முடியாத நட்சத்திரப் பேச்சாளர். வரவிருக்கும் தீபாவளிக்கான சிறப்புப் பட்டிமன்றத்தில் பாரதி பேசுவாரா என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அவரின் உடல்நிலை குறித்து பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவிடம் பேசினோம்.

``நேற்று முன்தினம்கூட பாரதியிடம் பேசினேன். அவரின் உடல்நிலை தேறி வருகிறது. வங்கிப் பணிக்கு அவர் இன்னும் திரும்பவில்லை. முழுமையான ஓய்வில்தான் இருக்கிறார்" என்று முதல்கட்ட விவரங்களைக் கூறியவர், பாரதி பாஸ்கர் பட்டிமன்றத்தில் பேசுவதற்கான வாய்ப்பு குறித்தும் பேசினார்.

சாலமன் பாப்பையாவுடன் பாரதி பாஸ்கர்
சாலமன் பாப்பையாவுடன் பாரதி பாஸ்கர்

``கொரோனா காலகட்ட கட்டுப்பாடுகளாலும், மக்களின் நலனைக் கருத்தில்கொண்டும், கடந்த சில பட்டிமன்றங்களில் பார்வையாளர்கள் இன்றி, பேச்சாளர்களை மட்டுமே வைத்துப் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அந்த முறையில் ஜீவன் குறைவதுபோல உணர்ந்தோம். எங்களின் பேச்சை மக்கள் நேரடியாகக் கண்டு ரசிப்பதைத்தான் எல்லாப் பேச்சாளர்களுமே விரும்புவார்கள். கொரோனாவின் தாக்கம் வெகுவாகக் குறைந்திருக்கும் சூழலில், அதற்கான வாய்ப்புகள் தற்போதுதான் சாத்தியமாகியிருக்கின்றன. கடந்த விநாயகர் சதுர்த்தி பட்டிமன்றத்தில்கூட பார்வையாளர்களுடன் படப்பிடிப்பை நடத்தினோம். அதில், பாரதி பாஸ்கர் கலந்துகொண்டு பேசினார். அன்றுதான் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தீபாவளி சிறப்புப் பட்டிமன்றத்துக்கு மக்களிடம் தனி எதிர்பார்ப்பு இருக்கும். ராஜாவும் பாரதி பாஸ்கரும் கலந்துகொண்டு பேசாவிட்டால், பட்டிமன்றத்தின் ஸ்ருதி குறைந்துவிடும். எனவே, பாரதி பாஸ்கரின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு பட்டிமன்றத்தை நடத்துவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. சன் டிவி மற்றும் எங்கள் தரப்பில் பாரதியிடம் ஆலோசித்து வருகிறோம். தீபாவளிக்கான பட்டிமன்றத்தில் பேச வேண்டும் என்று பாரதி ஆசைப்படுகிறார். ஆனால், அதற்கு அவரின் உடல் ஒத்துழைக்க வேண்டுமல்லவா?

பாரதி பாஸ்கர்
பாரதி பாஸ்கர்

உடல்நிலை முன்னேற்றத்துக்காகச் சில பயிற்சிகளை மேற்கொள்கிறார். பாரதியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும் அவரின் குடும்பத்தினருக்குத்தான் முழுமையாகத் தெரியும். எனவே, அந்த இரண்டு தரப்பிலும் சாதகமான ஒப்புதல் கிடைக்க வேண்டும். பட்டிமன்றப் படப்பிடிப்பில் கலந்துகொள்ள பாரதியின் உடல்நிலை மேம்பட வேண்டும் என்பதுதான் என் விருப்பமும்கூட. இந்த மாதத்துக்குள் அதற்கான நல்ல வாய்ப்பு கைகூடும் என்று காத்திருக்கிறோம்" என்றார் நம்பிக்கையுடன்.

பட்டிமன்றப் பேச்சாளர் ராஜாவிடம் பேசினோம். ``இப்போதைக்கு அவருக்குத் தேவை ஓய்வுதான். ஒருவருக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால், எந்த வகையிலும் அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது. அதனால், நேரில் சந்திப்பது உள்ளிட்ட இடையூறுகளைச் செய்யாமல், அவர் குணமாகி பழைய உற்சாகத்துடன் இயல்புவாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்றுதான் நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். சாலமன் பாப்பையா ஐயா, இலங்கை ஜெயராஜ் ஐயா உட்பட சிலரிடம் அண்மையில் பாரதி பேசினார். அந்த வரிசையில் என்னிடமும் சில வார்த்தைகள் பேசினார்.

ராஜாவுடன் பாரதி பாஸ்கர்
ராஜாவுடன் பாரதி பாஸ்கர்

அவர் குடும்பத்தினர் சிலர் வாயிலாக, பாரதியின் உடல்நிலை குறித்து அவ்வப்போது கேட்டறிகிறேன். அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. பட்டிமன்றத்துக்கான படப்பிடிப்பை முடிக்க இன்னும் கால அவகாசம் இருக்கிறது. தீபாவளி பட்டிமன்றத்தில் பாரதி கலந்துகொண்டு பேச வேண்டும் என்று ரசிகர்களில் ஒருவராக நானும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்" என்று முடித்தார்.

சென்னையிலுள்ள முன்னணி வங்கி ஒன்றில் மூத்த துணைத் தலைவராகப் பணியாற்றும் பாரதி பாஸ்கர், இல்லத்தரசி, பேச்சாளர் என எப்போதும் பிஸியாகவே இயங்கும் பன்முகத்தன்மை கொண்டவர். சில ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளி சிறப்பிதழுக்காக, பாரதி பாஸ்கரைச் சந்தித்துப் பேசியபோது, தனது பர்சனல் பக்கத்தில் சிலவற்றைப் பகிர்ந்திருந்தார்.

பாரதி பாஸ்கர்
பாரதி பாஸ்கர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதி பாஸ்கர்; இப்போது எப்படி இருக்கிறது உடல்நிலை?

``பேச்சாளரா என் ஆரம்பகால பயணத்துல, கைத்தட்டல் ஒருவகையான போதைனு எனக்குத் தெரியல. அதனால, கைத்தட்டலுக்காகச் சில நேரங்கள்ல உணர்ச்சிவசப்பட்டு தவறான வார்த்தைகளைப் பேசியிருக்கேன். பொது இடத்துல ஒருத்தரை மனதாரப் பாராட்டணும்; ஒருத்தர் செய்யுற தவறுகளைத் தனியா கூப்பிட்டு அக்கறையோடு சொல்லணும். இதை எனக்குக் கத்துக்கொடுத்த சாலமன் பாப்பையா ஐயா, என்னைத் தனியா கூப்பிட்டு என் பேச்சிலிருந்த தவறுகளைப் பக்குவமா சுட்டிக்காட்டினார். என்னோட பொறுப்பை உணர்ந்து, அதுக்கப்புறமா இப்போவரைக்கும் எல்லா இடங்கள்லயும் என் பேச்சுல கண்ணியத்தைக் கடைப்பிடிக்கிறேன்.

என் பொண்ணுங்கதான் என்னோட நெருங்கிய தோழிகள். அவங்களுக்குத் தெரியாம எந்த விஷயத்தையும் நான் செய்ய மாட்டேன். ஒவ்வொரு பட்டிமன்றத்துலயும் நான் பேசி முடிச்சுட்டு கார்ல வந்துகிட்டிருப்பேன். என் பொண்ணுங்ககிட்டேருந்து தவறாம அழைப்பு வரும். `இன்னிக்கு எப்படிப் பேசினேம்மா?'னுதான் முதல்ல கேட்பாங்க. `சூப்பர்', `சுமார்', `மோசம்'னு சூழலுக்குத் தகுந்த பதிலைச் சொல்லுவேன். அதேபோல, பட்டிமன்றத்துல நான் பேசினதை டிவி-யில பார்த்துட்டு, மனசுல பட்டத்தை வெளிப்படையா சொல்லுவாங்க. அதனால, என் பொண்ணுங்களோட விமர்சனத்துக்குத்தான் ஒவ்வொருமுறையும் ஆவலுடன் காத்திருப்பேன்" என்றவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் வந்திருக்கின்றன. நடிப்பில் ஆர்வம் இல்லாததால் அந்த வாய்ப்புகளை மறுத்தவர், கே.பாலசந்தரின் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்திருந்தால் மட்டும் டபுள் ஓகே சொல்லியிருப்பாராம்.

பாரதி பாஸ்கர்
பாரதி பாஸ்கர்
"எனக்கு பத்மஶ்ரீ விருது அந்த இருவர் போட்ட பிச்சை!"- சாலமன் பாப்பையா

அந்த உரையாடலில் தூக்கம் குறித்து அவர் கூறுகையில், ``எவ்வளவு வேலைகள் இருந்தாலும், தூங்குறதுக்கு முன்பு ரெண்டு மணி நேரமாச்சும் வாசிப்பு பழக்கத்தைக் கடைப்பிடிப்பேன். ஒவ்வொரு நாள் விடியல்லதான் என் தூக்கம் தொடங்கும். பல மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் தூங்கிய நாளே எனக்கு நினைவுல இல்ல. `கிடைக்கமாட்டியா?'ன்னு தூக்கத்துக்கு ஏங்குவேன்" என்று கூறினார். பாரதிக்கு இன்னும் நிறைய பொறுப்புகள் காத்திருக்கின்றன. எனவேதான், உடல்நலனில் இன்னும் கூடுதலான கவனம் செலுத்த, அவரின் உடல் பாரதிக்கு ஓய்வு கேட்டிருக்கிறது. அதன்படி தன்னைப் புதுப்பித்துக்கொண்டு மீண்டும் பழைய பாரதியாக மேடைகளில் அவர் முழங்க வேண்டும் என்பதுதான் நம் எல்லோரின் விருப்பம்.

மீண்டு(ம்) வாருங்கள் பாரதி பாஸ்கர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு