கதைகளின் கதை - பாவ மூட்டையின் எண்:188 - சு.வெங்கடேசன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியங்கள்: ஜி.ராமமூர்த்தி

பாவ மூட்டைகளை இறக்க, காசிக்குப் பயணம் போனவர்களின் கதைகள் பல நூற்றாண்டுகளாகச் சொல்லப்பட்டு வருகின்றன. காசியிலும் ராமேஸ்வரத்திலும் நீராடுவதை, பாவம் போக்கும் புனித காரியமாக சைவ மதத்தில் நம்பிக்கைகொண்ட மக்கள் செய்துவருகின்றனர். தூர அளவைக் கணக்கிட்டுப்பார்த்தால்  ஆயிரக்கணக்கான  மைல் தொலைவைக்கொண்ட நகரங்கள் இவை. `இவ்வளவு நெடுந்தூரப் பயணம் எப்படிச் சாத்தியமானது, அதற்கான சாலை வசதிகள் இருந்தனவா,  போக்குவரத்து வாகனங்கள் எப்படி இருந்தன, பயண வழியின் அபாயங்கள் என்னென்ன, அவற்றை எப்படிப் பயணிகள் சமாளித்தனர்?’ என அடுத்தடுத்து கேள்விகள் எழுகின்றன.

உலகின் புராதன சாலை வழித்தடங்களைக் கொண்டது இந்தியா. இந்தியாவின் சாலைகளைப் பற்றிய பல குறிப்புகளை கிரேக்க வரலாற்றாசிரியர்கள் வழங்குகின்றனர். அர்த்தசாஸ்திரமும் சங்க இலக்கியமும் சாலைகளையும் பயணங்களையும் பற்றிய   பல அரிய தகவல்களைத் தருகின்றன.

சந்திரகுப்தனின் அரசவைக்கு வந்திருந்த மெகஸ்தனீஸ் இந்திய சாலை முறைகளைப் பற்றி கூறும்போது, `இந்தியர்கள் சாலை அமைப்பதில் மிகவும் கைதேர்ந்தவர்களாக இருந்தனர்’ என்றும், `சாலைகள் அமைத்த பிறகு, இரண்டு மைல்களுக்கு ஒரு கம்பம் நட்டு அதில் தூர விவரமும் கிளைச் சாலைகள் செல்லும் ஊரின் விவரமும் எழுதியிருந்தார்கள்’ என்றும் குறிப்பிடுகிறார். ராஜபாட்டைகளில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களைப் பற்றி சரியான கணக்கு வைக்கப்பட்டிருந்ததோடு, அங்கு வழிச்செல்வோர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் கூறுகிறார் மெகஸ்தனீஸ்.

அசோகனின் கல்வெட்டு ஒன்று, `வழிச்செல்வோரின் நலன் கருதி, அரசன் வழிகளில் எல்லாம் கிணறு தோண்டச் செய்ததோடு, மரங்களையும் நடச்செய்தான்’ எனக் குறிப்பிடுகிறது. அர்த்தசாஸ்திரத்தில் எந்த எந்தச் சாலைகள், எவ்வளவு அகலத்தில் அமைக்கப்படவேண்டும் என்ற குறிப்பு இடம்பெறுகிறது.

பரதன் ராமனைச் சந்திக்க சித்திரக்கூடமலைக்குச் சென்றபோது, அவனுடன் சாலையைச் செப்பனிட பல கூலியாட்கள் சென்றதாக ராமாயணம் கூறுகிறது. அரசன் செல்லும் பாதையில் இருக்கும் குண்டு குழிகள், அரசன் செல்லும் பொருட்டே சரிபடுத்தப்படுவது என்பது காலகாலமாக நடந்து
வரும் ஒரு செயல் என்பது இந்த இடத்தில் கூடுதல் தகவல்தான். மற்றபடி, பயணப் பாதையைச் சரிப்படுத்துவது, மிக முக்கியமான பணியாக இருந்துள்ளது என்பதைக் கவனம்கொள்க.

`ஜாதகக் கதை’யில், புத்தர் சாலையைச் செப்பனிடும் வேலையில் அவரே ஈடுபட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அதிகாலையில் எழுந்திருந்து கையில் அமுக்குக்கட்டையையும் கோடாரியையும் எடுத்துக்கொண்டு வெளியில் செல்வார். நகரத்தின் சாலைகளிலும் சாலைகள் கூடுமிடங்களிலும் கிடக்கும் கற்களை அப்புறப்படுத்துவார். குறுகலான சாலைகளில் வண்டிகள் செல்லும்போது, வண்டிகளின் அச்சுக்களுடன் உராயும் மரம், செடி, கொடிகளை வெட்டி எறிவார். கரைகள் கட்டுதல், குளங்கள் வெட்டுதல், சத்திரம் கட்டுதல் போன்ற வேலைகளிலும் புத்தரும் அவருடைய சகாக்களும் ஈடுபட்டதாக `ஜாதகக் கதைகள்’ கூறுகின்றன.

மெளரியர்கள் காலம் தொடங்கி, முகலாயர்கள் காலம் வரை அனுமதிச் சீட்டு பெற்றே மக்கள் யாத்திரை செய்துள்ளனர். அனுமதிச் சீட்டு தரும் அதிகாரி, தரப்படவேண்டிய தொகை, அதிகாரிகளின் கடமைகள் பற்றிய குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன.

`காசியைச் சேர்ந்த அந்தணன் ஒருவன் கன்னியாகுமரிக்கு யாத்திரை வந்தான்’ என்ற குறிப்பு `மணிமேகலை’யில் இடம் பெற்றுள்ளது. தனிமனிதனின் நீண்ட ஒரு யாத்திரையைப் பற்றிய தொடக்ககாலப் பதிவு இது. இந்திய நிலப்பரப்பின் மேற் பகுதியில் தொடங்கி மையப் பகுதியை ஊடறுத்து, தென் கோடிக்கு வந்துசேரும் நெடிய பயணம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick