தமிழ் நாவல்வெளி - எஸ்.ராமகிருஷ்ணன் | Essays - The Century of Novels - S.Ramakrishnan - Vikatan Thadam | விகடன் தடம்

தமிழ் நாவல்வெளி - எஸ்.ராமகிருஷ்ணன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஒரு நூற்றாண்டின் சுவடுகள்ஓவியம் : ஹாசிப்கான்

சிறுகதை, கவிதை, நாவல், குறுநாவல் என நூற்றாண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட இலக்கிய வடிவங்களின் வரையறை இன்று முழுவதும் மாறியிருக்கிறது. நாவல் என்ற ஒரே சொல்லால் அழைக்கப்பட்டபோதும் 19-ம் நூற்றாண் டின் நாவலும், 21-ம் நூற்றாண்டின் நாவலும் ஒன்று இல்லை. வடிவம் மற்றும் உள்ளடக்கரீதியில் அடைந்துள்ள மாற்றமும் வளர்ச்சியும் பிரமிக்கத்தக்கவை.

நோபல் பரிசுபெற்ற எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸின் `தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவல் 50 மில்லியன் பிரதிகள் விற்றிருக்கின்றன. சமீபத்தில், ஜப்பானிய நாவலாசிரியரான ஹருகி முரகாமியின் ‘1Q84’ என்ற நாவல் 23 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி இருக்கின்றன.

ஒரு நாவல் உலக அளவில் புகழ்பெற்றுவிட்டால், அந்த எழுத்தாளர் அடையும் குறைந்தபட்ச தொகை 10 கோடி ரூபாய். திரைப்பட உரிமை, பிறமொழி உரிமை என்று எளிதாக அவர் 100 கோடி வரை சம்பாதித்துவிட முடியும். இதுபோலவே நாவலை எழுதுவதற்கு முன்பாகவே அதை யார் வெளியிடுவது எனப் பதிப்பகங்கள் ஏலம்விடுகின்றன, எவர் அதிகப் பணத்துக்கு ஏலம் எடுக்கிறார்களோ, அவர்களுக்கே நாவலை வெளியிடும் உரிமை தரப்படுகிறது.

நாவல் எழுதுவதற்கான நிதி உதவி செய்யும் அமைப்புகள் இருக்கின்றன. நாவல் வெளியீட்டை ஒட்டி உலகம் முழுவதும் எழுத்தாளர்கள் பயணம் செய்கிறார்கள். வாசகர்களைச் சந்தித்து, கையெழுத்துப் போடுகிறார்கள். உம்பர்தோ ஈகோவின் புதிய நாவல் வெளியாவது பற்றி நாளிதழின் முதல் பக்கத்தில் செய்தி வெளியாகிறது. முரகாமியின் புதிய நாவல் வெளியாவதை ஒட்டி, ஜப்பானியத் தொலைக்காட்சிகள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. அந்த அளவுக்கு நாவல்கள் உலகின் பிரதான இலக்கிய வடிவமாகக் கொண்டாடப்படுகின்றன.

ஆனால், தமிழ்நாட்டில் இதற்கு நேர் எதிரான சூழலே இருக்கிறது. இங்கே அதிகம் விற்பனையான நாவல் என்றால், அது 5,000  பிரதிகள் விற்றிருக்கும். நான் அறிந்து தனது புதிய நாவலுக்காக முன்பணம் பெற்ற ஒரு தமிழ் எழுத்தாளர்கூட கிடையாது. `தமிழகத்தில் குறைந்தபட்சம் 10 லட்சம் பேர் புத்தகம் படிக்கிறார்கள்’ என்கிறார்கள். ஆனால், 1,000 பிரதிகள்தான் நாவல் விற்பனை யாகிறது என்பது துரதிர்ஷ்டமே. சமீபத்தில், மலையாளத்தில் வெளியான கே.ஆர்.மீராவின் ‘அரச்சார்’ என்ற நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன. அரவிந்த் அடிகா, தனது நாவலை எழுத முன்பணமாக 50 லட்சம் ரூபாய் பெற்றிருக்கிறார்.

அகில் சர்மா என்ற அமெரிக்காவில் வாழும் இந்திய எழுத்தாளர் தனது `ஃபேமிலி லைஃப்’ நாவலுக்காக ‘டப்ளின் இம்பாக்’ விருது பெற்றிருக்கிறார். ஓர் இந்தியர் இந்த விருது பெறுவது இதுவே முதல்முறை. இதுவரை இரண்டே நாவல்களை எழுதியிருக்கிறார். விருதுத் தொகையாக  ஒரு லட்சம் யூரோ. அந்த நாவலோடு ஒப்பிட்டால் அதைவிட சிறந்த 100 நாவல்கள் தமிழில் உள்ளன. ஆனால், அவை எதுவும் உலகின் கவனத்துக்குள்ளாகவில்லை என்பதே ஆதங்கம்.

புதிய தமிழ்த் திரைப்படம் ஒன்றுக்கு, குறைந்தபட்சம் 1,000 விமர்சனங்கள் வெளியாகின்றன. ஆனால், தமிழில் பல முக்கிய நாவல்கள் ஒரு விமர்சனம்கூட எழுதப்படாமல் மௌனமாகப் புறக்கணிக்கப்படுகின்றன.

பொழுதுபோக்கு நாவல்கள், இலக்கியத் தரமிக்க நாவல்கள் என இரண்டுவிதமாக நாவலை முந்தைய காலங்களில் பிரித்திருந்தார்கள். இன்று இந்த இரண்டுக்குள் நிறைய உள்ளடுக்குகள் உருவாகியுள்ளன. பொழுதுபோக்கு நாவலுக்குள் தீவிரத்தன்மை கொண்ட படைப்புகளும் இலக்கிய நாவல்களுக்குள் சுவாரஸ்யமான பொழுதுபோக்குத்தன்மைகொண்ட எழுத்துவகையும் உருவாகியிருப்பது நம் காலத்தின் முக்கிய அம்சம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick