சமூக ஊடகங்கள் - ஒரு குறுக்குவெட்டுப் பார்வை - கார்ல் மார்க்ஸ்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம் : ஹாசிப்கான்

மூக ஊடகங்களில் தொடர்ந்து புழங்குவதால், எனக்கு இப்போதெல்லாம் மிகப் பெரிய சந்தேகமே வந்துவிடுகிறது. அவை உண்மையிலேயே சமூக ஊடகங்கள்தானா, சமூகத்துக்கும் அவற்றிற்கும் நிஜமான தொடர்பு எதுவும் உண்டா என்று. ஏனெனில், அவை ஒரு குறிப்பிட்ட மக்கள் திரளை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துவதுபோல் தோன்றுகிறது. அதில் வெளிப்படும் கருத்துகள்கூட வெகுஜன மனநிலையுடன் பெரும்பாலும் ஒத்துப்போவதில்லை. ஆனால், சமூகத்தின் சில அதிர்வுகளை உடனடியாக அவை பிரதிபலிப்பதால், அவற்றை முழுக்கவும் நிராகரிக்கவும் முடிவதில்லை. சமூகத்தின் சிதிலமடைந்த சன்னலைப்போல தோற்றம் கொள்கின்றன சமூக ஊடகங்கள். நேரடியான ஓர் உதாரணத்தின் மூலம் இதைச் சொல்ல வேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம்... `சமூக ஊடகங்கள் நிஜமாகவே சமூகத்தை அப்பட்டமாகப் பிரதிபலிக்கின்றன என்றால், இந்நேரம் மக்கள் நலக் கூட்டணிதான் ஆட்சியமைத்திருக்க வேண்டும்.’

அரசியல் தவிர்த்த பெரும் சலனம் ஏற்படுத்தக்கூடிய ஒரு நிகழ்வின்போது, சமூக ஊடகங்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன என்று கவனித்தால், நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. உதாரணமாக, சமீபத்தில் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு பெண் மென்பொறியாளரின் கொலை. இந்தச் செய்தியை, சமூக ஊடகங்களில் தொடரும்போது ஒரு மனநோய் விடுதிக்குள் நுழைந்துவிட்டதைப்போல இருந்தது. நமது சமூகம் உண்மையிலேயே இந்த அளவுக்கு சிதறுண்ட சமூகமா என ஆச்சர்யமாக இருந்தது. முக்கியமாக இரண்டு விஷயங்கள் அதில் கவனத்தை ஈர்த்தன.

ஒன்று, சாதிய சமூகமாக நாம் எவ்வளவு தூரம் பிளவுபட்டிருக்கிறோம் என்பது. இரண்டாவது, பெண்கள் குறித்த பார்வைகளில் பொதுச் சமூகம் எவ்வளவு பின்தங்கியிருக்கிறது என்பது. இவை வெறும் போதாமையாக மட்டும் அல்லாமல் சீரழிவாகவும் இருக்கின்றன என்பதுதான் கவலைக்குரியது. எவ்வளவு படித்தவர்களாக இருந்தாலும், நல்ல வேலையில் இருப்பவர்களாக இருந்தாலும் சாதியைக் கைவிட முடியாமல் தவிப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதில் டாக்டர்கள், இன்ஜினீயர்கள்கூட விதிவிலக்குகள் அல்ல. இன்னொரு புறம் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கும் மொன்னையான சாதி மறுப்பு வாதம். சாதியை மறுப்பது என்பது, சாதியே இல்லை என்று சாதிப்பது அல்ல; சாதியின் இருப்பை நேர்மையாக ஒப்புக்கொண்டு அதைக் களைவதற்கான செயல்களை முன்னெடுப்பது. இந்த இடத்தில்தான் நாம் நம்புகிற இளைஞர் திரள் எவ்வளவு பாழடைந்திருக்கிறது என்பது தெரிகிறது. இளைஞர் திரள் என்று சொல்கிறபோது பெண்களையும் சேர்த்தேதான் சொல்கிறேன்.

பெயருக்குப் பின்னால் சாதியை பின்னொட்டாகச் சேர்த்துக்கொள்ளும் பழக்கம் வழக்கொழிந்து போயிருக்கும் தமிழகச் சூழலில், சாதியைப் போட்டுக்கொள்வது என்பது ஏதோ நாகரிகம்போல முன்வைக்கப்படுகிறது. அதில் என்ன தவறு இருக்கிறது என்று இளைஞர்கள் கேட்பதையும் பார்க்க முடிகிறது. இந்தக் கேள்வி ஏதோ ஒரு கலகம் போல முன்வைக்கப்படுகிறது. உற்றுப்பார்த்தால், அந்தக் குரலின் பின்னுள்ளது அரசியல் தெளிவின்மைதான். சாதி என்று வருகிறபோது அங்கு ஓர் அதிகாரப் படிநிலை வந்துவிடுகிறது. குறிப்பிட்ட சாதிகளுக்கான ‘புனிதம்’ வந்துவிடுகிறது. இறுதியாக பிறப்பின் மூலம் வரும் தகுதி உறுதிசெய்யப்படுகிறது. அவ்வாறு செய்யப்படும்போது ஒரு பகுதி மக்கள் திரளின் போதாமையும் சுட்டப்படுகிறது. இங்கு போதாமை என்பது பிறப்பால் வரும் போதாமை. எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத வெறுமை அது. ஆக, இது வெறும் ஃபேஷன் மாத்திரம் அல்ல; அதன் பின்னுள்ளது ஆழமான அரசியல். ஆக இங்கு தேவைப்படுவது நுண்ணுணர்வுடன் கூடிய புரிதல்.

எந்த அச்சமும் அற்ற மூர்க்கமான சாதியவாதம் சமூக ஊடகங்களில் தயக்கமில்லாமல் முன்வைக்கப்படுகிறது. யாராவது அரைவேக்காட்டுத்தனமாக உருவாக்கி உலவவிடும் ஒற்றை வரிகூட எல்லாரையும் பதற்றப்படுத்துகிறது. பொருட்படுத்தத்தக்க ஆட்கள்கூட அந்தச் செய்தியைக் குறித்து தங்களது கருத்தைத் தெரிவிக்கிறார்கள். சமூக ஊடகங்களில் எதை நிராகரிக்க வேண்டும் என்கிற தெளிவு இல்லையென்றால், நமக்குப் பைத்தியம் பிடிக்கும். அதில்தான் பிரபலங்களும்கூட கோட்டைவிடுகிறார்கள்.  இத்தகைய வன்முறைகளில் அடையாளமற்ற ‘போலிக் கணக்குகளின்’ பங்களிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள் உள்ளிட்ட எளிய இலக்குகளைக் குறிவைத்து அவர்கள் பரப்பும் வதந்தியும் வன்மமும் பாதிக்கப்பட்டவர்களைத் தற்கொலையை நோக்கித் தள்ளுவதையும் காண முடிகிறது. சமீபத்திய உதாரணம் வினுப்ரியா. மார்ஃபிங் செய்யப்பட்டு ஆபாசமாக உலவவிடப்பட்ட அவரது புகைப்படம் அவரை சாவை நோக்கித் தள்ளியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick