அவர்தான் கியாரெஸ்தமி - செழியன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

எது சினிமா?

‘ஓடுகிற உங்கள் கேமராவை முதலில் நிறுத்துங்கள். இப்போது உங்களைச் சுற்றிலும் நிகழ்கிறதே... அதுதான் சினிமா’ என்றார் கியாரெஸ்தமி. தன்னியல்பில் நிகழ்கிற ஒன்றை ஒரு முன் தயாரிப்போடு பதிவுசெய்ய முடியாது. ஏனெனில், உண்மையை அணுகும்போது உங்கள் இருப்பு மறைந்திருக்க வேண்டும். அதன் இயல்போடு நீங்கள் கரைந்துவிட வேண்டும்.

அப்படி இல்லாமல் ஸ்டோரி போர்டுகளோடும் மூன்று நிலைகள்கொண்ட அச்சடிக்கப்பட்ட திரைக்கதைகளோடும் பக்கம் பக்கமாக எழுதிய உரையாடல்களோடும் திரைப்படத்தை அணுகினால், அதில் நீங்கள் கதை சொல்லலாம்; பார்வையாளனைச் சிரிக்கவைக்கலாம்; பயமுறுத்தலாம்; இருக்கை நுனிக்குக் கொண்டுவரலாம்; பதைபதைப்புக்கு ஆளாக்கலாம். இதெல்லாம் சினிமா என்று நீங்கள் நம்பினால்,  மன்னிக்க வேண்டும்; அது சினிமா இல்லை. நீங்கள் எவ்வளவு அழகாக, உணர்வுபூர்வமாக எடுத்திருந்தாலும் நீங்கள் எடுத்திருப்பது புலிவேஷமிட்ட ஒருவரைத்தான்... நிஜமான புலியை அல்ல என்பதுதான் கியாரெஸ்தமி தன் திரைப்படங்கள் வழியே சொல்கிற விஷயம். ஏனெனில், `திரைப்படம் என்கிற அற்புதமான கலை, வெறுமனே கதை சொல்வதற்கு அல்ல’ என்று கியாரெஸ்தமி நம்பினார்.

ஒருமுறை கேரளா போயிருந்தபோது, காட்டுக்குள் ஒரு யானையையாவது படம் எடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் நான் இருந்தேன். எங்கள் வாகனம் ஒலி எழுப்பாமல் மெதுவாக நகர்ந்தது. நான் இரண்டு பக்கமும் காட்டுக்குள் பார்த்துக்கொண்டே வந்தேன். கொஞ்ச நேரம் கழித்து யானையின் அசையும் காதுகள் இலைகளில் ஊடாகத் தெரிந்தன. நான் காரை நிறுத்தி, இன்ஜினை அணைக்கச் சொல்லிவிட்டு கதவு சாத்தும் சத்தம்கூடக் கேட்காமல் மெதுவாக நடந்தேன்.

நடந்து இடப்பக்கம் நகர்ந்தால், முழு யானையையும் படம் எடுத்துவிடலாம். அந்தக் கணத்தின் பரவசத்தை இப்போது என்னால் வார்த்தையில் விவரிக்க முடியவில்லை. மெதுவாக இடப்பக்கம் நகர்ந்தேன். முழு யானையும் தெரிய, வேகமாக மூன்று படங்கள் எடுத்தேன். தயங்கி முன்னால் நகர்ந்து இன்னொரு படம் எடுக்கலாம் என நெருங்குகையில்தான் பார்த்தேன். யானை கட்டிக்கிடந்தது. பாகன் மரத்தடியில் படுத்து கால்மேல் கால் போட்டு பீடி புகைத்துக்கொண்டிருந்தான்.

எனக்குச் சிரிப்பு வந்தது. அந்த ஏமாற்றம் அவமானமாகவும் இருந்தது. கியாரெஸ்தமியின் `க்ளோஸப்’ படத்தைப் பார்க்கையில் எனக்கு இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது. ஏற்கெனவே காட்சி பிரித்து, உரையாடல் எழுதி, இதுதான் என்று கட்டிவைக்கப்பட்ட ஒரு கதையைப் படம் எடுப்பதில் என்ன சவால் இருக்க முடியும்? எனவேதான் கியாரெஸ்தமி சர்வதேச சினிமாவின் ஆதர்ச இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார்.

‘புதிதாக நீங்கள் எந்தக் கதையைச் சொல்ல முடியும். உலகில் சொல்லாத கதை என்று எதுவும் இருக்கிறதா? எனவே, சினிமாவின் வேலை கதை சொல்வது அல்ல. அது ஒரு கவிதையின் வடிவம். எனவே, திரைப்படத்தில் நான் சொல்ல நினைப்பது கவிதைதான்.’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick