நின்று வெல்லும் நீதி - அண்டர்கவர் இதழியல் - கவிதா முரளிதரன்

ரவு 9:30 மணி. அதிகம் பரிச்சயம் இல்லாத நகரில் தனியாகத் தங்கியிருக்கும் அந்த இளம் பெண்ணுக்கு அந்த நேரத்தில் ஒரு குறுந்தகவல் வருகிறது. தன்னை உடனடியாக வந்து சந்திக்கும்படி தகவல் அனுப்புகிறார், அந்த மாநிலத்தின் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் காவல்துறை அதிகாரி. தன்னுடைய கடைசி இரவாக அது இருக்கக்கூடும் என்கிற முடிவுக்கு வருகிறார் ராணா அயுப். அப்போதைக்கு அவரது அடையாளம் `மைதிலி தியாகி’. இந்தியாவின் மிக முக்கியமான புலனாய்வுப் பத்திரிகையாளர்.

2010-ம் ஆண்டில் `தெஹல்கா’ இதழில் ராணா எழுதிய புலனாய்வுக் கட்டுரைகள் காரணமாக போலி என்கவுன்ட்டர் வழக்கின் உண்மை வெளிவந்து, அதில் பா.ஜ.க தலைவர் அமித் ஷா கைது செய்யப்படும் அளவுக்கு நிலைமை பரபரப்பானது. அதோடு தனது பணி முடிந்துவிட்டதாக ராணா நினைக்கவில்லை. ஆனால், அதன் பிறகு குஜராத்துக்குள் ராணா அயுப்பாக நுழைய முடியாது. எனவே, தனது பெயர், புற அடையாளங்கள் வரை அனைத்தையும் மாற்றிக்கொண்டு அமெரிக்க ஆவணப்பட இயக்குநராக குஜராத்திற்கு வருகிறார்.

‘மைதிலி தியாகி’ என்கிற பெயரில் முதல் நாள்தான் அவர் அந்தப் பெண் அதிகாரி உஷா ராதாவைச் சந்திக்கிறார். அடுத்த நாள் அவசர அழைப்பு வரவும், தனது உண்மை அடையாளத்தை அவர் கண்டுபிடித்திருக்கக் கூடும் என்று அஞ்சுகிறார் ராணா. ஆனால், அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் ஓர் இளம் பெண்ணுக்கு தனது மாநிலத்தின் பெருமையைக் காட்ட வேண்டும் என்று நினைத்த அந்த அதிகாரி, அவரை மிகச்சிறந்த உணவகத்துக்கு அழைத்துச் செல்கிறார். எந்தவிதத்திலாவது உஷாவுடனான உரையாடல்கள் தனக்கு உபயோகமானதாக இருக்கும் என்று முடிவுக்கு வரும் ராணா, அடுத்த நாள் படம் பார்க்க அழைப்பு வரும்போது கேமரா பொருத்தப்பட்ட தனது பிரத்யேகமான குர்தாவை அணிந்து செல்கிறார். தெஹல்காவின் புலனாய்வை அடிப்படையாகக்கொண்டு உருவான `No One Killed Jessica’ திரைப்படத்தைக் காண அந்த மல்டிபிளெக்ஸுக்குள் நுழைந்தபோது இன்னோர் ஆபத்து காத்துக்கொண்டிருந்தது. அங்கிருந்த மெட்டல் டிடெக்டர் ராணாவின் சின்னஞ்சிறிய கேமராவை காட்டிக் கொடுத்துவிடும் ஆபத்து. ஆனால், உஷாவை அடையாளம் காணும் பாதுகாப்பு அதிகாரி, அம்மாதிரியான பரிசோதனைகள் இல்லாத வாயில் வழியாக அவர்களை உள்ளே அழைத்துச் செல்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick