“ஒரு சோட்டா கவர்மென்ட்டுக்காக ஒருவன் நாவல் எழுதுவானா என்ன?!” - சந்திப்பு: சுகுணா திவாகர், வெய்யில்

நேர்காணல் ஜெயமோகன்படங்கள் : தி.விஜய்

மகாலத் தமிழ் இலக்கியத்தில் முக்கியமான எழுத்தாளர் ஜெயமோகன். நீண்டதொரு வெளிநாட்டுப் பயணத்துக்குப் பிறகு அப்போதுதான் ஊர் திரும்பி இருந்தார். அன்று மாலையே மீண்டும் ஒரு பயணமாம். நாகர்கோவிலில் அவரது இல்லத்தில் சந்தித்தபோது, உற்சாகமாக இருந்தார். இளங்காலை நேரம் அது. தேநீர் பருகியபடி, நேர்காணலுக்கான சம்பிரதாயங்களின்றி இயல்பாக உரையாடலுக்குள் நுழைந்தோம். சினிமா, கலை, இலக்கியம், அரசியல், மதம், வரலாறு என நீண்டுசென்ற கேள்விகளும் பதில்களும்...

‘‘ஒரு பக்கம் தமிழ் எழுத்தாளர்கள் என்றாலே குடி, கலகம், ஒழுங்கின்மை, மிகக்குறைவாக எழுதுவது என்று ஒரு தோற்றம் உண்டு. அதற்கு மாறாக நீங்கள் நிறைய எழுதுகிறீர்கள். திட்டமிட்ட நேர ஒழுங்குடன் இருக்கிறீர்கள். இது எப்படி சாத்தியமாகிறது?’’

‘‘நீங்கள் குறிப்பிடுகிற இலக்கியவாதிகளின் முகத்திற்கு ஒரு கலாசாரப் பின்னணி உண்டு. அறுபது, எழுபது காலகட்டம் வெறுமையும் விரக்தியும் நிறைந்த காலம். சுதந்திர இந்தியாவின் மீதான நம்பிக்கைகள் குலைந்திருந்த காலம் அது. கடுமையான வேலையில்லா திண்டாட்டம், அனைத்து அரசியல் நம்பிக்கைகளும் தோற்றுப்போகும் நிலை. அப்போதுதான் நக்சல்பாரி இயக்கம் தோன்றியது. இப்படியாக அந்தச் சோர்வு காலத்தை பிரதி பலிப்பதாகத்தான் அன்றைய இலக்கியம் இருந்தது.

மேலும், தமிழில் இலக்கியத்துக்கு எந்த மரியாதையும் கிடையாது. வாசிப்பவர்களும் குறைவு. ஒரு கதையை எழுதினால், அது பிரசுரமாக இரண்டு, மூன்று வருடங்கள் ஆகும் நிலையெல்லாம் இருந்தது. ஆக, ஒருவர் தனது வாழ்க்கையிலேயே 15 கதைகள்தான் எழுத முடியும். அரசியல் ரீதியான சோர்வு, யாரும் கவனிக்கவில்லை என்கிற விரக்தி ஆகியவற்றைத்தான் அன்றைய இலக்கியவாதிகள் பிரதிபலித்தார்கள்.

ஆனால், உலகளவில் முக்கியமான மாஸ்டர் எழுத்தாளர்கள் யாருமே இப்படி இருந்தவர்கள் கிடையாது. வரலாற்றை மாற்றியமைத்த படைப்பாளிகள் எல்லோருமே சலிக்காமல் பல வருடங்கள் உழைத்தவர்கள். டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, காப்ரியல் கார்சியா மார்க்வெஸ், தாகூர் இவர்களோடு தமிழில் எழுதியவர்களை ஒப்பிட்டால், மிகக் குறைவாகவே எழுதியிருக்கிறார்கள். என்னுடைய முன்மாதிரிகள் மேற்கண்ட  மாஸ்டர் எழுத்தாளர்களே ஒழிய, சோர்வு காலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. நான் எழுதவரும்போது அந்தச் சோர்வு காலம் முடிந்திருந்தது. எனக்குத் தனிப்பட்ட வாழ்வு சார்ந்த சோர்வு இருந்தது. அரசியல் சார்ந்த சோர்வு இருந்தது. ஆனால், நான் அவற்றிலிருந்து ஒரு தீவிரத்தையும் ஊக்கத்தையுமே உணர்ந்தேன். என்னுடைய முன்னுதாரணம் டால்ஸ்டாயோ தஸ்தாயெவ்ஸ்கியோதானே தவிர, வருடத்திற்கு இரண்டு மூன்று கதை, கவிதைகள் எழுதுகிறவர்கள் அல்ல!’’

‘‘தமிழில் வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் நீங்களோ, `வெண்முரசு’ போன்ற பெரிய படைப்புகளை எழுதுகிறீர்களே?’’ 

‘‘இது எத்தனை பேருக்குச் சென்று சேரும்... எத்தனை பேர் படிப்பார்கள்... அது என்னவிதமான மாற்றங்களை உருவாக்கும் என்கிற கணக்குகளோடு எழுதினால், என்னால் எதுவும் எழுதவே முடியாது. மோனியர் மோனியர்-வில்லியம்ஸ் என்ற ஜெர்மானிய அறிஞர் 36 வருடங்கள் சமஸ்கிருத அகராதிக்காக உழைத்திருக்கிறார். ஆனால், அதை முடிப்பதற்குள் அவர் இறந்துவிட்டார். அதற்கான புகழோ, பணமோ, அங்கீகாரமோ, எதுவுமே அவருக்கு வாழும்போது கிடைக்கவில்லை. ஆனாலும், அவர் அதை ஏன் செய்தார் என்றால், அதன் மூலம் கிடைக்கின்ற நிறைவு. ஆக, எந்த ஒரு படைப்பின் மீதும் அது தருகிற நிறைவுதான் முக்கியமே தவிர, உடனடியாக அது எத்தனை பேரைச் சென்று சேர்கிறது என்பதே அல்ல.

`வெண்முரசு’ எழுதத் தொடங்கும்போது, நான் எனது எட்டு நண்பர்களிடம் பேசினேன். ‘கடைசி வரை நீங்கள் எட்டு பேரும் வெண்முரசை முழுவதுமாக வாசிக்க வேண்டும்’ என்ற உறுதிமொழியை வாங்கினேன். இந்தக் குறைந்தபட்ச மனநிலையில்தான் எழுதத் தொடங்கினேன். ஆனால், இன்று `வெண்முரசை’ ஐம்பதாயிரம் பேர் படிக்கிறார்கள்.

அப்புறம் வரலாற்றுரீதியாக நீங்கள் கவனித்துப் பார்த்தால், வாசிக்கப்படக்கூடிய பக்கங்களும் அளவும் கூடுகிறதே தவிர குறையவில்லை. `சிலப்பதிகார’த்தை நீட்டி அடித்தால், அறுபது பக்கங்கள்தான் வரும். `கம்பராமாயணம்’, `பொன்னியின் செல்வனி’ல் பாதிதான் வரும். எப்பொழுது அச்சு இயந்திரம் வந்ததோ, அப்போதே நீங்கள் நீளநீளமாக வாசிக்க ஆரம்பித்துவிட்டீர்கள். அச்சில் இருந்து இணைய ஊடகத்திற்கு வரும்போது இன்னும் அதிக வாசிப்பிற்குத்தான் வருகிறீர்களே தவிர, வாசிப்புக் குறையவில்லை.

 `ஹாரி பாட்டர்’ போன்ற சிறுவர்களுக்கான கதைப்புத்தகம் இவ்வளவு விற்கும் என்று 20 வருடங்களுக்கு முன்பு உங்களால் சொல்லியிருக்க முடியுமா? சிறுவர்களுக்கு 200 பக்கமே அதிகம் என்பார்கள். ஆனால், 700 பக்கங்களுடன் புத்தகம் விற்கிறது. ஆக, வாசிப்பு அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. வாசிப்புக்கு ஏற்றவாறு வாசிப்பு ஊடகத்தை, தகுதியானதாக நாம்தான் மாற்ற வேண்டும்.’’ 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick