கிளி - சிபிச்செல்வன் | Poetry - Cibi Selvan - Vikatan Thadam | விகடன் தடம்

கிளி - சிபிச்செல்வன்

ன்று கிளிகளின் நாள்
இந்த ஊருக்கு கிளிவனம் எனப் பெயர்

கிளிகள் பறந்துபோனதால்
வனம் தன்னந்தனியாகத்
தேம்பியழுகிறது

இன்று கிளிகளின் நாள்
கொஞ்சம் பழங்களையும்
கொஞ்சம் கொட்டைகளையும்
கொஞ்சம் தானியக் கதிர்களையும்
ஒரு மண்பானையில் நீரையும் வைத்து காத்திருக்கிறது
கிளிகளின் நாள்

கிளிகள் வெகுதொலைவில் பறந்துபோயிருக்கின்றன
திரும்பிவர வெகுகாலம் ஆகும் என
பறவையியலாளன் சொல்லிக்கொண்டிருக்கிறான்.

கிளிகளற்ற ஊரில்
கிளிகளற்ற வனத்தில்
இன்று
கிளிகள் நாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்

கொஞ்சம் தானியங்களோடும்
கொஞ்சம் பழங்களோடும்
காத்திருக்கிறோம்
கூண்டுகளை மறைத்துவைத்துக்கொண்டு

கிளிகளின் நாள் கொண்டாடக்
காத்திருக்கிறோம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick