நீர்மையான எருமைகள் - யவனிகா ஸ்ரீராம் | Poetry - Evanika Sriram - Vikatan Thadam | விகடன் தடம்

நீர்மையான எருமைகள் - யவனிகா ஸ்ரீராம்

ஓவியம்: மருது

ல்லாம் கொஞ்ச காலம்தான் ஆகியிருந்தது

அலெக்ஸாண்டரின் காலணிகளைத் தேடி

வந்திருந்தான் ஒருவன்

பழுப்புக் கண்களும் சிறகுபோன்ற தாடியும்

இரும்புக்குமிழ் பொருத்திய பிரம்பு ஒன்றையும்

கையில் வைத்திருந்தான்

அந்தக் காலணி

யாக்கர் எனும் எருமைத் தோலால்

இருபத்திரண்டு லேயர்கள் அடுக்கி

மிருக நரம்புகளால் பிணைக்கப்பட்டு

குதிகாலுக்குப் பக்கவாட்டில்

ஐந்து மொகரா தங்க இலட்சினையும் பொறித்து

பறவைக் கொழுப்புகளால்

மேனி துலங்கப் பதப்படுத்தப்பட்டது என்றான்

ஆக, ஒரு ஜோடி உறுதியாய்

இங்கேதான் கண்டுபிடித்துக் கொண்டுபோவேன் என்றவனிடம்

குதிரை வியாபாரிகள்

தங்கள் உதட்டைப் பிதுக்கினார்கள்

நாயுடன் வேட்டையாடுபவர்கள்

வேகமாய் ஓடி மறைய

கடல் அலை மோதும் பெரும் பாறைகளிடம் போய் கேள் என்றான்

ஒரு அவுரி வணிகன்

அலுத்துப்போனவன்

ஏறத்தாழ இரண்டாயிரம் ராத்தல்

எலும்புக்கூடுகள் கொண்ட

பழம்குழி ஒன்றையும் அகழ்ந்து தேடினான்

காலணித் தொழிலாளி ஒருவன்

எங்கள் எருமைகள் மெல்லிய சருமத்துடன்

வீட்டுப்பெண்கள் மேய்க்குமளவு சாதுவானவை என்றான்

இரண்டு பட்டுக் கிழிகளில்

பல நூறு ஓட்டைக்காசுகளும்

களிம்பேறிய செம்புச் சல்லிகளோடு

குதிரைப்பவுன் ஐந்து இருந்தும்

அக்காலணிகள் அவனுக்குக்குக் கிடைக்கவில்லை

இறுதியில்

அவன் கொண்டுபோனது

ஊர் சிரிக்க

கைப்பிடி அளவு வேம்புக்கொத்துகளும்

ஒரு மஞ்சள் துண்டும்

ஒரு பொதி

எருமைச் சாணமும்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick