நல்ல குற்றவாளிகள் - பா.திருச்செந்தாழை

ஓவியம் : செந்தில்

ல்ல குற்றவாளிகள்

குழந்தைகளுக்கே அஞ்சுகின்றனர்

அவர்களின் பாசி நிறக் கண்களுக்கு.

கூர்மினுங்கும் ஆயுதங்களை

தங்களின் ஒப்பனையைச் சரிசெய்யும்

கண்ணாடியென முடக்கிவிடும்

அவர்களின் பாரதூரமற்ற அழகியலுக்கு.

நல்ல குற்றவாளிகளை

குழந்தைகளே முதலில் மன்னிக்கின்றனர்

சிறிய சாக்லேட்களுக்காக முத்தமும் ஈந்து

கொடுங்காயங்களை தாதியின் கருணையுடன் நீவுகின்றனர்

நல்ல குற்றவாளிகள்

எல்லாக் குற்றங்களுக்குப் பிறகும்

மறைந்துவிடவே முயல்கின்றனர்

இந்த நகரிலிருந்து

இந்த நிகழ்காலத்திலிருந்து.

குழந்தைகளே அவர்களுக்கு மறைவிடம் செய்கின்றனர்

பீரோக்களின் முதுகுப்பகுதி

முதிய மரங்களின் வேர்ப் பிளவுகள்.

கார்ட்டூன் சித்திரமிட்ட பள்ளிக்கூடப் பைகளினுள்

குற்றமும் தண்டனையுமற்ற இளந்துறவிகளோ

வெண்கல விளக்குகளைப்போல மௌனிக்கின்றனர்.

பின்னொரு தினத்தில்

தோட்டாக்கள் குதறிய

நல்ல குற்றவாளிகளின் உடலை

செய்தித்தாள்கள் உண்கின்றன

அறிவுஜீவிகள் உண்கின்றனர்

இன்னுமின்னுமென ஜனத்திரளும் சப்புக்கொட்டுகிறது.

உறங்காத கண்களும் லேசான தாடியுடனும்

இறந்தகாலத்தின் புன்னகையின் சிறுதுளியை மட்டும்

கறுப்புவெள்ளைப் புகைப்படத்தில் சிந்திக்கொண்டிருக்கும்

குற்றவாளி... (வயது 27) என்பவனுக்கு

பள்ளிச்சிறுமி வைத்த பெயர்தான்...

‘நல்ல குற்றவாளி.’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick