விருந்தினர் இல்லம் - ஜே.பி.சாணக்யா | Story - J.B.Chanakya - Vikatan Thadam | விகடன் தடம்

விருந்தினர் இல்லம் - ஜே.பி.சாணக்யா

ஓவியம் : கார்த்திகேயன் மேடி

ந்த மாளிகை ஒருவகையில் எல்லாவற்றிலிருந்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டு, புவியியல் அமைப்பில் பூமியைப்போலவே கடலாலும் மலைகளாலும் சூழப்பட்டிருந்தது. `ஒருவர் மட்டுமே அந்த மாளிகையின் அருகில் தங்கியிருக்கிறார்; சாதாரண உரையாடல்கூட அவரிடம் சாத்தியமில்லை’ என்றார்கள். அதிகமும் ஆழ்ந்த தனிமையை நேசிக்கும் எனக்கு அது உதவியாகத்தான் இருக்குமென்று அவர்களுக்குச் சொன்னேன். அங்கு சாப்பிடுவதற்கு உணவுவிடுதி எதுவும் இல்லை  எனவும்  எனக்கு  அறிவுறுத்தினார்கள். அது ஒன்றும் எனக்குப் புதிதில்லை. நன்றாக நடக்க விரும்பும் எனக்கு, அது நிச்சயம் தொந்தரவாக இருக்கப்போவதில்லை.

ஆழ்ந்த ரேகைகளைப்போல் நெற்றியில்  கிடக்கையாகக் கோடுகள் படிந்திருந்த கிழவர், கேட்டின் ஒரு பக்கத்தை அநாயசமாகத் திறந்து தள்ளினார். நான் யூகித்தேன்... `இவர்தான் அந்தக் காவலாளியாக இருக்க முடியும்.’ நல்ல வெளிர்மஞ்சள் முறுக்கு மீசையின் முனைகளில் வெற்றிலைப்பாக்குக் கறைகள் ஒட்டியிருந்தன. பரிசுத்தமான நரையில் கச்சிதமான தாடி அவருக்குக் கம்பீரமான அழகைக் கூட்டின. அந்த வயதிலும் திடகாத்திரம் மிளிரும் உடம்பில் வெண்ணிறத் துண்டும், கணுக்கால் தெரியுமளவுக்கு வேட்டியும் சாதாரண செருப்பும் அணிந்திருந்தார். குரோட்டன்ஸ்களால் பகுக்கப்பட்டிருந்த காருக்கான சிமென்ட் பாதை, மாளிகை முகப்பின் முன்பாக எழும்பியிருந்த உயரமான தூண்களுக்கு நடுவில், அகலமும் நீளமுமான படிக்கட்டின் முன்பு சென்று நின்றது.

கம்பீரமான மரங்களின் பசுமையோடு வீற்றிருக்கும் அந்த மாளிகை, கடந்துசெல்லும் எல்லாவற்றையும் ஆழ்ந்துபார்க்கும் உயிரூட்டப்பட்ட ஒன்றைப்போல இருந்தது அல்லது மாளிகை குறித்த முழுமையில் அது திளைத்திருந்ததும் காரணமாக இருக்கலாம். அசலான பிரமாண்டத்தைத் தனக்குள் வைத்திருக்கும் ஓர் அனுபவசாலியின் முழுமை என்றும் அதைக் குறிப்பிடலாம். நிச்சயமாக, மனிதர்கள் உருவாக்கிய எத்தனையோ அழகான மாளிகைகளில் அதுவும் ஒன்றில்லை.

இரண்டாள் உயரமும் ஆறடி அகலமும் கொண்ட இரட்டைக்  கதவை, படிக்கட்டு ஏறி தள்ளித் திறந்தார் கிழவர். வீட்டின் மேற்கூரையில் குடையைப்போல் கவிழ்க்கப்பட்ட கண்ணாடிக் கூம்பின் வழியே, வானத்து வெளிச்சம் மழையைப்போல் தரையிறங்கிக்கொண்டிருந்தது. வெளிச்சம் ஏற்படுத்திய வெப்ப உணர்வுக்கு எதிராக உள்ளே இதமான குளிர்ச்சி நிரம்பியிருந்தது. அத்தனை பெரிய மாளிகையில் அந்த ‘வயதான இளைஞர்’ தவிர யாருமில்லை. நான் எனது பொருட்களைத் தூக்கி வந்தபடி அவரைப் பார்த்துச் சிரித்தேன். அவர் புன்னகைத்தபடி என்னை ஊடுருவிப் பார்த்தார். எனக்கான அறையைத் திறந்து குளிர்சாதனத்தை இயக்கிவிட்டு சிரித்தபடி சென்றுவிட்டார்.

கதவை உட்புறமாகத் தாழிட்டேன். அறையின் ஒழுங்கும் சுத்தமும் என்னைக் கவர்ந்தன. சராசரிக் கூடத்தின் அளவிலிருந்து வேறுபட்ட உயரமும் அகலமும் கொண்ட பெரிய படுக்கையறை.  இரண்டு கைகளையும் நீட்டினால் விரியும் அளவுள்ள குளிர்சாதனப் பெட்டி. ஆளை விழுங்கும் ‘க்யூன் சைஸ்’ கட்டில். எனக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மரமேசை மற்றும் மேசை விளக்கு தவிர வேறு எதுவும் இல்லை. ஒப்புக்கொண்டு வந்திருக்கும் திரைக்கதை பணி முடியும் வரை இதுதான் எனக்கான அறை. நான் அங்கு மிகச்சிறிய பொருளாக ஆகி இருந்தேன். சன்னல் வழியே பார்த்தேன். ஆயுள்கூடிய மரங்கள் கண்களை நிறைத்தன. அதன் அடர்த்தியான நிழலே மன அமைதியைத் தருவதாக இருந்தது.

சுவரையொட்டி மேலே செல்லும் அகலமான வளைவான பளிங்குப் படிக்கட்டு மாடிக்கு அழைத்துச்சென்றது. பிரமாண்டமான பன்னிரண்டு படுக்கை அறைகள் (நான் மெனக்கெட்டு எண்ணினேன்). ஒரு நவீன சமையலறை. எந்த அறையிலும் கூடத்திலும் ஒரு பொருளும் இல்லை. எல்லாமும் வெறிச்சென்றிருந்தன. குளியலறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணாம்சம் பொருந்தியதாக இருந்தன. இரண்டு பெரிய நீராவிக் குளியல் அறைகள். இரண்டு மாடிகளுக்கு மேலே, மேலும் மேலும் மாடிகள் இருக்கலாம் என யூகித்தேன். அங்கிருந்து பிரகாசமான கடல் ஒரு மறைப்புமின்றி வெள்ளை நீர்ப்பரப்பைப் போல் வானத்துச் சரிவில் சேர்ந்திருந்தது. கடலைப் பார்த்த பிறகுதான் நான் அலைகளின் சத்தத்தையே உணர்ந்தேன். அது ஒரு மென்சத்தம். கவனித்தால் மட்டுமே கேட்க முடிகிற தொலைவில் இருந்தது. மாளிகையின் தொடர்ச்சியாக மரங்களின் அடர்த்திக்கும் மத்தியில் பல கட்டடங்கள் ஆங்காங்கே இருப்பதைப் பார்த்தேன். ஒருவகையில் இதை உருவாக்க நினைத்த மனிதனின் தேவையை நினைத்தேன். அது அவரவர் வாழ்க்கை சார்ந்தது என விலகிக்கொண்டேன்.

அதிகமும் துப்புரவுப் பணியாளர்கள், மாளிகையின் பராமரிப்பாளர்கள் சிறிய கேட்டின் வழியே வந்தனர். நுழையும்போது அவர்களைப் பார்க்க முடிந்தது. பின்பு அவர்களின் பணிநிமித்தமாக இங்கே எங்கேயோ மறைந்துபோனார்கள்.

பின்புறச் சுற்றுப்படிக்கட்டு நம்மைத் தாழ்வாரத்தின் இடதுபுற கீழ் முகப்புக்கு  அழைத்துவருகிறது. அங்கே அதுவரை கவனித்திராத நிலைக்கண்ணாடி ஒன்று சுவரில் பொருத்தப்பட்டிருந்தது. பிரவுன் நிறத் தடித்த சட்டமிட்ட அக்கண்ணாடி ஒரு சுவரைப்போலவே நீளமும் அகலமும் கொண்டிருந்தது. அதை நெருங்க நெருங்க அதன் முன் இருக்கும் அனைத்துக் காட்சிகளும் அதனுள் விரிவடைந்து கொண்டிருந்தன. என் உருவம் பார்த்தேன். கண்ணாடியைக் கண்டுபிடித்தவன்தான் இவ்வுலகின் ஆகச்சிறந்த உன்னதத்தைக் கண்டுபிடித்தவன்  என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்? நான் அம்மாளிகைக்குச் சிறிதும் பொருத்த மற்றவனாகத் தெரிந்தேன். சிகையை ஒதுக்கி, சட்டையைச் சரிசெய்து, முகம் துடைத்து, அம்மாளிகைக்குத் தகுதியுடைய உருவத்தைத் தர முயற்சித்துப் பார்த்தேன். தோல்வியை ஒப்புக்கொள்ள நேரம் எடுத்துக் கொள்ளவில்லை.
 
ஏன் அக்கண்ணாடி முன்பு அவ்வாறு நடந்துகொண்டேன்? அபத்தங்கள் நிறைந்த மனித வாழ்வின் சில தருணங்களில் அதுவும் ஒன்றுதான். பல வருடங்களுக்கு முன்பு ஆரம்பகட்ட நகர வாழ்க்கையின்போது, பணிநிமித்தமாக நட்சத்திர ஹோட்டல் களுக்குச் சென்றபோதெல்லாம் இவ்வாறு நடந்துகொள்ள முயற்சித்திருக்கின்றேன். எப்படிக் கழுவினாலும் ஏழ்மை மறைந்து விடாத எனது முகத்தில், அந்த ஹோட்டல்கள் என்னை ஏற்றுக்கொண்டதே இல்லை. நகரத்தின் பிரமாண்டத்தோடு பொருத்திக் கொள்ள விரும்பிய - அறியாமையுடன் நடந்துகொண்ட - நாட்கள் அவை.
பின்னாட்களில் எனக்கும் அந்தப் பகட்டான இடங்களுக்குமான உறவைத் தெளிவாக்கிக் கொண்டபோது அவ்விஷயங்களில் இருந்து மிக இயல்பாக விலகியிருக்க முடிந்தது.

ஓரிடத்தில் நன்றாக உறங்க முடிந்தாலே அவ்விடத்திற்கும் எனக்கும் ஒத்திசைவு சரியாக இருப்பதாக உணர்ந்துவிடுவேன். எந்தச் சிரமமும் இன்றி முற்றிலும் புதியதோர் இடத்தில் நிறைவுகொள்ளும் அளவுக்குப் பகலுறக்கம். ஆழ்ந்து நீராடியதுபோல் புத்துணர்வைப் பெற்றிருந்தேன். கண்டிருந்த உவப்பான கனவை நினைவுகொள்ள முடியவில்லை.

திரைப்படத்தின் தயாரிப்பாளரும் அவரது சகோதரரும் பிற்பகலில் வெள்ளைநிற லேண்ட்ரோவர் காரில் வந்தார்கள். காரை விட்டு இறங்கியதும், மாளிகையை ஒரு சிறிய வீட்டைப் பார்ப்பதுபோல் பார்க்க முயன்று, மிகவும் அண்ணாந்து பார்க்க நேர்ந்தது. குளிர் கண்ணாடியைக் கழற்றிவிட்டு முகச் சுருக்கத்துடன் ஊஞ்சலில் வந்து அமர்ந்தார். என்னோடு எனது சௌகர்யங்கள் குறித்து சிறிது உரையாடினார். தயாரிப்பாளரின் சகோதரர் மாளிகையை வியந்து நோக்கிக்கொண்டிருந்தார். அவருக்கும் சொந்தமாக அப்படி ஒரு மாளிகை என்ற கனவு உற்பத்தியாகி இருக்கலாம். அவர் அந்தக் கண்ணாடியால் கவரப்பட்டவர்போல் அங்கே சென்று தன்னைப் பார்த்தார்; தலையைக் கோதினார். கால் சொக்காய்களில் இரண்டு கைகளையும் நுழைத்து, குல்லாயைச் சரிசெய்து நாவை ஈரப்படுத்தினார். ஒரு கதாநாயகனுக்கு இணையாகத் தன்னை முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் நின்று பார்த்தார். பின்பு தயாரிப்பாளருடன் வந்து ஊஞ்சலில் அமர்ந்தார்.

தயாரிப்பாளர் எழுந்து மாளிகையின் சுற்றுக்கூடத்தை நோக்கி கம்பீரமாகச் சென்றார். செல்லும்போது இருந்த உற்சாகம் திரும்பியபோது இல்லை. கண்ணாடியில் சட்டையைச் சரிசெய்து, காலரை இழுத்துவிட்டு, தங்கச்செயின் புரள அப்படியும் இப்படியும் அசைந்து பார்த்தார். நிஜத்தையும் பிம்பத்தையும் ஒருசேர நான் கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர்கள் தங்களைக் கட்டடத்தின் உரிமையாளராகக் காட்டுவதற்கு அல்லது மாளிகைக்குப் பொருத்தமான நபர்களாகத் தங்களைத் தாங்களே நம்பிக்கொள்வதற்கு என்னென்னவோ செய்துகொண்டிருந்தார்கள். தயாரிப்பாளர் பல நூறு கோடி ரூபாய் சொத்துகள் கொண்டவர்தான். அவர் நிச்சயம் அந்த மாளிகைக்குப் பொருத்தமாகத்தான் இருப்பார் என்ற எனது எண்ணம் உண்மையாகவில்லை. ஆனாலும் தன்னுடைய செல்வத்துக்குப் பொருத்தமான ஒரு மாளிகையில்தான் இருக்கின்றோம் என்பதை இறுதிவரை பொருத்திவிட முயன்று தோற்றுப்போனார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick