விசை - ஸ்ரீதர்ரங்கராஜ்

கோயிலுக்கு முன்பாக அந்தத் திடல் இருந்தது அல்லது திடலின் ஓர் ஓரத்தில் அந்தக் கோயில் கட்டப்பட்டிருந்தது என்றும் சொல்லலாம். கொடைக்காலங்களில் மட்டும் சாமியிறக்கவும், நேர்ச்சைப் பலிகளுக்காகவும், தீமிதி போன்ற விஷயங்களுக்காகவும் மக்களால் புழங்கப்படும் அது, வருடத்தின் மற்ற நாட்களில் எங்களுக்கான விளையாட்டுத் திடலாகும். சாயங்கால நேரத்தில் கோயில் முன் மண்டபத்தில் உட்கார்ந்து பெரியவர்கள் சிலர் அரட்டையடிப்பது உண்டு. அவர்களுக்கெல்லாம் அதுதான் சந்திப்புக்கான இடம். வாரச்சந்தை திங்கள்தோறும் கோயிலுக்குப் பக்கத்திலுள்ள முக்கியச் சாலையில்தான் நடக்கும். அது சமயம் பூசாரிக்குக் கொஞ்சம் வருமானம் உண்டு. கிராமத்தின் அடையாளங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக நெடுஞ்சாலையின் காரணமாக மாறிக் கொண்டிருந்த ஊர்களில் ஒன்றான எங்கள் ஊரைச் சுற்றியிருந்த எல்லாக் கிராமங்களுக்கும் சேர்த்து, ஒரே சந்தை அது என்பதால், கொஞ்சம் கூட்டம் இருக்கும்.அப்போது சிலர் நெடுஞ்சாலையிலிருந்து கிளைக்கும் கோயில் சாலையிலும் திடலிலும் கடை வைப்பதுண்டு.

மாலையில் பள்ளி முடிந்து நண்பர்களோடு திடலில் நானும் தம்பியும் இறங்கினோம் என்றால், நேரம் போவதே தெரியாமல் விளையாடுவோம். செல்வராஜு வந்தானென்றால் பேட்டும் பந்தும் கொண்டுவருவான். வீசப்படும் பந்து கண்ணுக்குத் தெரியாமல் போகும் வரை விளையாடுவோம், இல்லையென்றால், அப்பா அழைத்துப்போக வரும் வரை. வீட்டுக்கு அழைத்துப்போக எப்போதும் அப்பாதான் வருவார். வந்தால், எங்களைக் கையில் பிடித்தபடி அவருடைய சகாக்கள் யாருடனாவது பேசிக்கொண்டிருப்பார். அதுவரையில் பொறுமையாக விளையாடிக் கொண்டிருந்த தம்பி, ‘போலாம்ப்பா’ என்று அனத்த ஆரம்பிப்பான். அப்பாவின் கை பலத்தில் அவர் அகன்ற பாதத்தில் கால் வைத்து, அவர் கை முன்னும் பின்னும் போகிற தூரம் வரை வட்டம் அடிப்பேன். அப்படி விளையாடும்போது தம்பி அவர் தோளிலிருந்து முன்பக்கமும் பின்பக்கமும் மாறிமாறிக் குதூகலமாக என்னைப் பார்ப்பான். இவ்வளவுக்கும் அப்பாவின் பேச்சு தடைபடாது. அவராக ‘ச்சரி வர்றேன்’ என்று சொல்லிக் கிளம்பும்போது, அவர் கையைப் பற்றியபடி ஓட்டமும் குதியுமாக வீடு வந்து சேர்வோம். அப்பா எப்போதும் தம்பியைத்தான் தூக்கிக்கொள்வார். ‘என்னியத் தூக்குப்பா’ என்றால், `நீ வளந்துட்டல்ல, தம்பிதான சின்னப்பய’ என்பார். அப்போதெல்லாம் தம்பி மேல் கோபமாக வரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick