நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இம்ப்ரஷனிஸம் முதல் அலை

தொழில் புரட்சியின் விளைவாகப் பிறந்த நவீன யுகத்தின் கலை வடிவமாகத் தோன்றியது, நவீன ஓவியம். அதன் முதல் அலையாக எழுந்தது ‘இம்ப்ரஷனிஸம்’ என்ற கலை இயக்கம். படைப்புப் பொருள்ரீதியாகவும் வெளியீட்டுப் பாணிரீதியாகவும், அது தொழில்மயமாகவும் நகரமயமாகவும் உருமாறிய பாரீஸ் நகரில் முகிழ்த்த கலை வடிவம். அது காலத்தால் தீர்மானிக்கப்பட்டது. அதற்கு முந்தைய யதார்த்த ஓவிய மரபானது, புகைப்படக் கலையின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் பின் புதிய சாத்தியங்களை இழந்தது. அதன் காரணமாக, ஓவியக் கலை பெரும் சவாலை எதிர்கொண்டது. புதிய சிந்தனைகளோடும், வெளியீட்டு நுட்பங்களோடும் அது இந்தச் சவாலை எதிர்கொண்டு புத்தெழுச்சி பெற்றது.  அபாரமான பாய்ச்சல்கள் நிகழ்த்தப்பட்டன. அதுவரை, தோற்றத்தைப் பிரதிபலித்த ஓவியக் கலை புதிய சிந்தனைக்கு ஆளானது. ‘தோற்றத்தைப் பிரதிபலிப்பது அல்ல; மாறாக, தனதான உலகைத் தோற்றப்படுத்துவது’ என்ற அடிப்படை நியதி உருவானது.

முதல் அலையாக உருவாகிய இம்ப்ரஷனிஸ இயக்கத்துக்கு முந்தைய யதார்த்த ஓவிய மரபானது, நிகழ்கால வாழ்வியக்கத்தை தத்ரூபமாகச் சித்தரித்தது. எனில், இம்ப்ரஷனிஸம் தம் கால வாழ்வியக்க சலனத்தின் ஒரு கணத்தை வெகு அநாயசமாக, ஓவியக் கலை மரபின் கூறுகளைப் புறக்கணித்து ஒரு மனப் படிமமாக வசப்படுத்தும் முனைப்பு கொண்டதாக அமைந்தது. 1860 முதல் 1910 வரையான 50 ஆண்டுகள், தோற்றம் - வளர்ச்சி - தேய்வு என நீடித்தது.

தூய, சுதந்திரமான ஓவிய ஆக்கமென்பது அதன் நோக்கமாகவும், பொருளாகவும், வெளிப்பாடாகவும் இருந்தது. பொருளும் வண்ணமும் ஒளியும் இசைமை பெறுவதை அடிப்படையாகக்கொண்டது. வண்ணத்திலும், வண்ணத்தில் ஒளியின் ஜாலத்தை வசப்படுத்துவதிலும் இம்ப்ரஷனிஸவாதிகள் தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொண்டனர். இம்ப்ரஷனிஸ பாணி ஓவியங்களை வண்ணங்களின் ஓசை என்றோ, இம்ப்ரஷனிஸவாதிகளின் இசை என்றோ கொள்ளலாம். அவர்களுடைய இந்தக் கண்டுபிடிப்புகள் எவ்வித விதிமுறைகளுக்கும் கட்டுப்படாமல் அவதானிப்பு மற்றும் உள்ளுணர்வின் மூலமாக அமைந்தன.

1874-ல் இம்ப்ரஷனிஸவாதிகள் கூட்டாகச் சேர்ந்து தங்கள் முதல் கண்காட்சியை பாரீஸ் நகரில் நிகழ்த்தினார்கள். நட்புக்கும் தோழமைக்கும் கூட்டியக்கச் செயல்பாட்டுக்கும் இந்த இயக்கம் பெயர் பெற்றிருந்தது. அதன் விளைவாக அமைந்ததுதான் முதல் கண்காட்சி. இம்ப்ரஷனிஸ இயக்கத்தின் சிந்தனையாளரும் முன்னோடிப் படைப்பாளியும் மேதையுமான கிளாடு மோனே (1840 -1926)யின் ‘Impression: Sunrise’ (மனப்பதிவு: சூரியோதயம்) என்ற ஓவியம் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றது.

1878-ல் அவர்கள் மீண்டும் கூட்டாக நடத்திய மூன்றாவது கண்காட்சிக்கான பொதுத் தலைப்பாக அந்த ஓவியத்தின் தலைப்பான ‘இம்ப்ரஷன்’ என்பதையே முன்வைத்தார்கள். அதுவே அவர்கள் இயக்கத்துக்கான பொதுப் பெயராகவும் ஆகியது. அதுவே, அந்த இயக்கம் இம்ப்ரஷனிஸம் எனப் பெயர் பெறவும் காரணமாயிற்று.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick