அவளுக்கு வெயில் என்று பெயர் - சா.தேவதாஸ்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியங்கள்: மணிவண்ணன்

தமிழச்சி தங்கபாண்டியனின் கவிதை நூலை முன்வைத்து

விதை, கட்டுரை, விமர்சனம் எனத் தொடர்ந்து இயங்கிவரும் தமிழச்சியின் இந்தக் கவிதைத் தொகுப்பு அழகியலாய் நகைக்கிறது, தார்மீகமாய்ச் சீறுகிறது; சில இடங்களில் சிணுங்குகிறது, பிற இடங்களில் ஆவேசம்கொள்கிறது; மரபு - தொன்மங்களுக்குள் ஆழ்ந்து, இக்கணத்துப் பிரக்ஞைத் தெறிப்புக்கு அந்த அவசத்தைக் கொண்டுவந்து சேர்ந்துவிடுகிறது. நெரூடா போல காதலில் கரையவும் செய்கிறது, சிக்கல்களை முன்வைக்கவும் செய்கிறது, இழிவுகளைக் கண்டு காறி உமிழ்கிறது, மேன்மைகளைப் போற்றுகிறது.

‘கம்பளிப்பூச்சிகளாக வந்தவைகளைப் பட்டாம்பூச்சிகளாகத்தானே பறக்கவிட முடியும்?’

என்றொரு படிமம் ஒரு முரண் நிலையை முன்வைத்தால்,

‘விடுதலையின் சிறகுகளை எதில் நெய்தாலென்ன -வானம் கருணைமிக்கது’

என்னும் வரிகள் ஒரு நுட்பத்தைப் பேசுகின்றன.

‘சேர்தலின் ஈரமும் பிரிதலின் உக்கிரமும் வெயிலும் வெயில் சார்ந்த காதலுமே கரிசல்’


எனத் தனது பூமியை அடையாளங்காட்டி, ‘நான் வெயிலுகந்தவள்’ என்று தன் மரபைத் தன்னில் ஏற்றிக்கொள்வது கவிதையின் இயங்குதளத்தை விரிவுபடுத்துகிறது; ஆழங்காணச் செய்கிறது. சமூகம் தன்னைச் சக்கையெனப் பிழிந்து எறிய, தேவாலயப் பிரார்த்தனை இனி உதவாது / மீட்காது எனப் பிரக்ஞை பற்றியெரிய, பட்டன் ரோஸ் செடியைப் பராமரிக்கவே விரும்புகிற ஒருத்தியைப் பார்க்க முடிகிறது.  இந்தப் பார்வையின்/அனுபவத்தின் உச்சமாக நாலு வரிகள் பீறிடுகின்றன:

‘கனன்ற சுருட்டணைக்கக் காறித்துப்பினாள் பேச்சிசூல் ரத்தம் பனங்காடெல்லாம்.

மண்டியிட்டுத் தேம்பும் கருப்பனின்கண்ணீரில் கண்மாய் தளும்பத் தொடங்கியது’


இந்தப் பேச்சி இன்றைய கிராமத்திலும் உலவுகிறாள்; நகரின் நடைபாதையிலும் நாறிக்கிடக்கிறாள்; மரபில் சிறுதெய்வமாய் சிம்மசொப்பனம் தருகிறாள். தன் கவிதைக் குரலுக்கு ‘பேச்சி’ என்று பெயரிட்டு, அபலையாய்ப் பலிகொள்ளப்படும் இன்றைய யுவதியின் ஓலத்திலிருந்து பனங்கிழங்கு ருசிக்கும் அன்றைய மூதாட்டி வரை தமிழச்சியால் செறிவாகச் சித்தரிக்க முடிவது ஒரு தனித்தன்மை; தனிச்சிறப்பு.  இந்தப் பேச்சி அறிவுத்திறமும், உணர்வுத் தீவிரமும் நிரம்பியவள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick