தமிழ் - நம் நிலத்தின் கண்ணாடி - நக்கீரன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ரு மொழியின் பிறப்புக்கு அடிப்படை, அது பேசப்படும் நிலத்தின் சூழலியலே ஆகும். அவ்வகையில் பல்லுயிர்ச் செறிவுமிக்க நிலத்தில் தோன்றிய தமிழ்மொழி ஒரு சூழலியல் மொழி. இத்தகைய மொழியின் மீது தனக்கென்று தனித்த நிலமற்ற சமற்கிருதமும், பல்லுயிர்ச் செறிவற்ற நிலத்தில் உருவான ஆங்கிலமும் நிகழ்த்துகின்ற மொழி மேலாதிக்க வன்முறைகளும் அதன் எதிர்கால விளைவுகளும் என்னென்ன? 

சமற்கிருதமும் தமிழ்ச்சூழலும்

உயிரினங்களுக்கான அறிவியல் பெயர்கள் இலத்தீன் மொழியில் சூட்டப்படுவது மரபு. இது 1730-களிலேயே உயிரியலாளர் கார்ல் லின்னேயஸ் வகுத்த வழிமுறை. ஓர் உயிரினத்தின் உருவக்கூறுகளைக் குறிக்கும் இலத்தீன் மொழிச் சொல்லுடன், அது கண்டறியப்பட்ட இடத்தின் பெயரையோ, கண்டறிந்த ஆய்வாளரின் பெயரையோ, புகழ்பெற்ற ஒருவரின் பெயரையோ இணைத்து இப்பெயர் சூட்டப்படும். ஆனால், மேற்குத்தொடர்ச்சி மலையில் புதிதாகக் கண்டறியப்பட்ட இரு தவளைகளுக்கு இம்மரபை மீறி ‘Nasikabatrachus sahyadrensis, Philautus neelanethrus’ என சமற்கிருதப் பெயர்கள் சூட்டப்பட்டதைக் குற்றம் சாட்டுகிறார் உயிரியல் அறிஞரான க.யோகானந்த்.

இவற்றில் ‘நாசிகா (மூக்கு), சாயாத்ரி (மேற்குத்தொடர்ச்சி மலை), நீலா(ஊதா), நேத்ரா(கண்) முதலியவை சமற்கிருதப் பெயர்கள். ‘இத்தவளைகளைக் கண்டுபிடித்த இரு ஆய்வாளர்களும் மரபை மீற நினைத்தால், தம் தாய்மொழியான மலையாளத்திலோ, கன்னடத்திலோ, இல்லையெனில் திராவிட மொழிக் குடும்பத்தின் தொன்மை மொழியான தமிழிலோ பெயர் வைத்திருக்கலாமே... ஏன் சமற்கிருதம்’ என வினவும் யோகானந்த், ஏற்கெனவே சிந்து சமவெளி நாகரிகச் சின்னங்களில் இல்லாத உயிரினமான குதிரையை இந்துத்துவவாதிகள் தாமே உருவாக்கிக் காட்டியதைச் சுட்டி நம்மை எச்சரிக்கிறார்.

பண்பாட்டின் மீது முன்னரே தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியிருக்கும் சமற்கிருதம், மொழியைக் கருவியாக்கி இயற்கை அறிவியலையும் சூழலியலையும் தம் வசப்படுத்த முயல்கிறது. மாற்று மொழிகளை அழுத்தித் தன்னைச் சூழல் மொழியாகக் காட்டிக்கொள்ளும் இம்முயற்சி அபத்தமானது மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

மரங்களைக் காப்பாற்ற அவற்றைக் கட்டித்தழுவிப் போராடிய பழங்குடியினப் பெண்களின் போராட்டம் ‘சிப்கோ’ இயக்கம் என்றழைக்கப்படுகிறது. சிப்கோ என்பது சமற்கிருதத்தின் குழந்தையான இந்தி மொழிச் சொல். ஆனால், இப்போராட்டத்தை நடத்தியதோ பழங்குடியினப் பெண்கள். அவர்களுக்கு ஏது இந்தி? அவர்கள் இப்போராட்டத்துக்கு தங்களின் தாய்மொழியான ‘கார்வால்’ மொழியில் வைத்திருந்த பெயர் ‘அங்கலவாள்த்தா’. இச்சொல்லின் பொருள் ‘தழுவுதல்’. சிப்கோ என்ற இந்தி மொழிச் சொல்லுக்குப் பொருள் ‘ஒட்டிக்கொள்’ என்பதாகும்.  இராமச்சந்திர குகா கூறும் இவ்வுண்மையில் இருந்து ஒரு பழங்குடி மொழிச் சொல்லை இன்னொரு மொழிச் சொல் கைப்பற்றும்போது பொருள் மட்டுமல்லாது போராட்டத்தின் வரலாறே திரிவதை விளங்கிக்கொள்ளலாம். 

‘இப்படித் திரிந்த வரலாற்றின் ஒரு காட்சியை இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் காணலாம். அங்குள்ள கான் துறையால் கானகச் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரப் பலகைகளில், ‘இந்துக்களின் வேத நூல்கள் கூறுகின்றன. மரங்கள் இன்றி மகிழ்ச்சி இல்லை’ என்கிற வரிகள் காணப்படுகின்றன. இவ்விளம்பரம் மரங்களையும் காட்டையும் காப்பதற்காகவே அவதரித்தது இந்து மதம் என்ற பொய்த் தோற்றத்தை தருகிறது. ஆனால், மகாபாரதத்தின் ‘கந்தேவா வனச்சருக்கம்’ பகுதியில் காட்டுயிர்கள் கொல்லப்படுவதும், மரங்களுக்குத் தீ வைக்கப்படுவதும் வீரகாவியப் பண்பாக வருணிக்கப்படுவதுடன் சிந்து, கங்கை சமவெளிப் பகுதிகள் குறித்துப் பதியப்பெற்ற அக்காலத்தில் ‘காடுகள் அழிப்பதற்கானவை’ என்பதே இந்துக்களின் சிந்தனையாக இருந்தது’ என்கிறார் இராமச்சந்திர குகா. இவ்விடத்தில்தான் காட்டுயிர்களுக்குச் சமற்கிருதப் பெயர்கள் சூட்டப்பட்டதை இணைத்துப் பார்க்கவேண்டும்.

‘இந்திய அறிவரங்கில் ‘சமற்கிருத மயமாக்குதல்’ எனும் சொல்லாடல் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. ‘பாரத’ திருநாட்டில் அனைத்தையும் சமற்கிருத மொழிவழிப்பட்ட பண்பாட்டு ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ‘இந்து மானுடவியல்’ அறிஞர்கள் பயன்படுத்துகிற ஒரு பெயர்தான் சமற்கிருதமயமாக்குதல்’ என்கிறார் முனைவர். க. த. திருநாவுக்கரசு. ‘இந்தியப் பண்பாட்டின் தலையூற்றாய் விளங்குவது சமற்கிருத மொழி வழிப்பட்ட பண்பாடு. அதனுடைய தாக்கத்தினாலேயே இந்தியா முழுமையும் நாகரிகமும் பண்பாடும் வளர்ச்சியுறத் தொடங்கியது’ என்று கூறி இச்சொல்லை 1956-ம் ஆண்டில் முதன்முதலில் அறிமுகப்படுத்திய இந்திய மானுடவியல் அறிஞரான முனைவர் எம்.என்.சீனிவாசனின் நோக்கம் தெளிவானது. 
 
‘இனவழிச் சொல்லான ஆரியமயமாக்கல் என்கிற சொல்லைப் பயன்படுத்தாது, சமற்கிருதமய மாக்குதல் என்கிற மொழிவழிச் சொல்லை இவர்கள் தெரிவு செய்வதற்குப் பின்னே ஒரு வரலாறு மறைந்திருக்கிறது. ஆரியர்களே உலகில் ஆளப்பிறந்தவர்கள் என்கிற ‘ஆரியமயமாக்கல்’ சிந்தனையில் வேர்கொண்ட இட்லரின் போர் வெறியால் விளைந்த உயிர்ச்சேதத்தை நாம் அறிவோம். இந்நிகழ்வுக்குப் பின்னர் யுனெஸ்கோ நிறுவனம் ‘இனத்தூய்மைக் கொள்கை’யை முறியடிக்கும் பொருட்டு உலகின் பல பகுதிகளிலும் ‘இனத்தூய்மை என்பது கட்டுக்கதை’ என்கிற தலைப்பில் மாநாடுகளையும் கருத்தரங்குகளையும் நடத்தியது. இதன் தாக்கத்தால் ‘ஆரியம்’ அடக்கிவாசிக்க வேண்டிய நிலைக்கு ஆளான அதேநேரத்தில், தமிழகத்தில் திராவிட இனச் சிந்தனை முளைத்தெழுந்தது. எனவே, இக்காலகட்டத்தில் ஆரியம் இனவழிப் பண்பாட்டை ஒதுக்கி மொழிவழிப் பண்பாட்டைக் கைக்கொள்ளத் தொடங்கியது’ என்கிறார் திருநாவுக்கரசு.

தாழ்த்தப்பட்ட மக்களும் பழங்குடிகளும் உயர்சாதியினரின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதன் வழி தம்மை உயர் இனத்தவராக மேல்நிலையாக்கம் செய்யும் முயற்சியைச் சுட்டிக்காட்டவே ‘சமற்கிருத மயமாதல்’ என்கிற சொல் தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டது. இது பின்னர் பல்வேறு துறைகளுக்கும் தன்னை விரிவாக்கிக்கொண்டே வந்து தற்காலத்தில் சூழலியல் வரையிலும் வந்து சேர்ந்துள்ளது. ஆனாலும், சமற்கிருதமயமாக்குதல் என்கிற இச்சொல்லை, ஆசிய அறிஞர்கள் ஏற்றுக்கொண்டாலும் மேற்கத்திய அறிஞர்கள் பலர் ஏற்கவில்லை. அவர்கள் இன்றளவும் இதனை ‘பெரிய நெறி’ (Great Tradition) என்றே அழைக்கின்றனர். அதாவது சமற்கிருத வழிப்பட்ட எண்ணப்போக்கும் பண்பாடும் இப்பெயரால் அழைக்கப்பட, சமற்கிருதத்தின் தாக்கத்திற்கு இரையாகாத பிற மொழிகளின் எண்ணப்போக்கும், பண்பாடும் ‘சிறிய நெறி’ (Little Tradition) என்று எதிர்நிறுத்தப்படுகிறது. இச்சிறிய நெறியில்தான் தமிழும் தமிழர்களின் பண்பாடும் உள்ளடங்குகிறது.

தமிழர்கள் பழங்குடிகளைப்போலவே இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ்ந்தவர்கள். இயற்கை வளத்தையும் உயிரின வளத்தையும் வளம்குன்றா முறையில் தமது தேவைக்குப் பயன்படுத்தி வந்ததோடு, தம் பண்பாட்டுச் செயல்கள் வழி அதனைக் காத்து வந்தவர்கள். ‘ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) போன்ற அமைப்புகள் ‘பண்பாட்டு வளம்’ (Cultural Diversity) என்று இதனை அங்கீகரிப்பதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இதனைத் தம் வாழ்வாக வாழ்ந்தவர்கள் தமிழர்கள்’ என்கிறார் கு.வி.கிருட்டிணமூர்த்தி. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick