‘குக்கூ' என்காதோ கோழி - இசை | Sugumaran - Vikatan Thadam | விகடன் தடம்

‘குக்கூ' என்காதோ கோழி - இசை

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படங்கள் : ரா.ராம்குமார்

மாம்... அவர் என் வாத்தியார். வாத்தியார்தான்; குரு அல்ல. குருவெனில், அவர் ஆடைகளைத் துவைத்துப்போட வேண்டும்; வனத்தினில் புகுந்து உள்ளதிலேயே நல்ல பழங்களாகப் பறித்து வந்து பசியாற்ற வேண்டும்; மடிதனில் கிடத்தி உறங்கவைக்க வேண்டும்; அப்போது ஒரு வண்டு நம் தொடையை ஆழத் துளைத்து மறுபுறமாகப் பறந்து போனாலும், பற்களைக் கடித்துக்கொண்டு, முகத்தை முந்நூறு கோணலாக்கி அவர் நித்திரையைக் காக்க வேண்டும்; எல்லாம் செய்துவிட்டு கடைசியாக கமண்டல நீரால் சாபமும் வாங்க வேண்டும். வாத்தியாரெனில் இருக்கும் இரண்டு தலையணைகளை ஆளுக்கொன்றாக வைத்துக்கொள்ளலாம்.

“ஏனோ கால் வலிக்கிற மாதிரி இருக்கு...” என்று வாத்தியார் முனகினால், “நல்லா தூங்கி எந்திருச்சா எல்லாம் சரியாப் போயிடும்... பேசாமப் படுங்க...” என்று அதட்டித் தூங்கவைத்துவிடலாம். அதாவது நம் தலையணையை அவர் காலணையாக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் இளஞ்சேரல், பொன்.இளவேனில், செல்வராசு, கணேசன் ஆகிய நண்பர்களுடன் `பாரதி இலக்கியப் பேரவை’ என்ற அமைப்பை உருவாக்கி, எங்கள் ஊரில் இலக்கியம் வளர்த்துவந்தோம். அது வைரமுத்துவின் முறுக்கு மீசையிலிருந்து நாங்கள் ஒவ்வொருவராக இறங்கத் தொடங்கியிருந்த பருவம். மனுஷ்ய புத்திரனின் `இடமும் இருப்பும்’ புத்தகம் எப்படியோ கைக்கு வந்து சேர்ந்தது. படித்தோம்; ஒன்றுமே விளங்கவில்லை. ராத்திரி கூடிய சபை இரண்டாகப் பிரிந்து நின்று வாதிட்டது.

“இது ஏதோ ஏமாற்று வேலை... இவை கவிதைகளே அல்ல...” என்று ஓர் அணியும், “இல்லை... சுஜாதாவெல்லாம் சும்மாவா சொல்லுவாரு... நமக்குத்தான் அறிவு போதவில்லை...” என்று இன்னோர் அணியும் வாதிடத் தொடங்கி, வாதம் நீண்டு நீண்டு பல டீ-க்களுடன் விடிந்தது. “இன்றோடு நட்பே முடிந்துவிட்டது” என்று எண்ணும் அளவுக்கு காரசாரமான விவாதம். சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், அன்று நான் அந்தக் கவிதைகளுக்கு எதிர் அணியில் நின்று பிரதான வீரனாகத் தொண்டை கிழியக் கத்தினேன் என்பதுதான். அப்போதுதான் சுகுமாரனின் `சிலைகளின் காலம்’ தொகுப்பும் வாசிக்கக் கிடைத்தது. அங்கங்கே கொஞ்சம் கொஞ்சமாகப் புரிவதுபோல் தோன்றியது. ‘அவன் எழுதுகையில்’ என்கிற பாரதியைப் பற்றிய கவிதையை வாசித்தபோது வெறுமனே புரிவது மட்டுமல்ல, பரவசமாகவும் இருந்தது. கவிதையின் மர்மப் பிரதேசங்களை நோக்கி ஒரு சின்ன ஜன்னல் திறந்தது. அந்தக் கவிதையின் பரவசம் மற்ற பல கவிதைகளையும் துலங்கச் செய்தது. `பாட்டி மணம்’ என்கிற கவிதை என் பாட்டியை நினைத்துக்கொண்டு வாசிக்கும்போது வெகு எளிய கவிதைபோல் தோன்றியது.

`உங்கள் குசுவிற்கு நீங்களே மூக்கைப் பொத்துவதுண்டா?’ என்கிற கேள்வியின் அதிரடி தெளிவாக விளங்கியது. பிறகு `இடமும் இருப்பும்’ தொகுப்பைத் தேடி வாசித்தேன். இப்போது பல கவிதைகள் எவ்விதச் சிக்கலும் இல்லாமல் அனுபவமாவதை உணர முடிந்தது.

இப்படியாக சுகுமாரன் எங்கள் ஆதர்ஷ கவியாக ஆகிப்போன தருணத்தில்தான் பொன்.இளவேனிலின் தங்கைக்குத் திருமணம் வந்தது. பத்திரிகையில் சுகுமாரனின் கவிதை ஒன்றை அச்சிட்டோம். திருமண அழைப்பிதழ் என்பதால் மங்களகரம் தேவைப்பட்டது. எனவே மழை பற்றிய கவிதை ஒன்றை அச்சிட்டோம். `என்பதால் மழை’ என்கிற கவிதை அது.

`மழை பிடிக்கும் எனக்கு –
    ஏனெனில்
    நீர்க்கம்பிகளின் மீட்டலில்
    இலை நடனம் நிகழும்
    .........................................
    மழை பிடிக்கும் எனக்கு
    ஏனெனில்
    மூடப்பட்ட பிள்ளைப் பருவத்தின்
    ஞாபகக் கதவைத் திறக்கும்’
    ...........................................


பின்னொரு நாளில், “நீர்க்கம்பி, ஞாபகக் கதவு, மனச்சுவர் போன்ற உருவகங்களை வாசிக்கையில், மெல்லிய சலிப்பைத் தருகின்றன” என்று அவரிடம் சொல்லியிருக்கிறேன். “தமிழில் எனக்குப் பிடித்த ஒரே ஒரு கவிஞர் பெயரை மட்டும் சொல்லச் சொல்லிக் கேட்டால், நான் அவரது பெயரைச் சொல்ல மாட்டேன்” என்றும் சொல்லியிருக்கிறேன். ஆனால், எனது வாத்தியார் அவர்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. எப்போதும் அவரே என் முதல் வாசகர்.

என் முதல் தொகுப்பு 2002-ம் ஆண்டில் வெளியானபோது, அந்தத் திருமண அழைப்பிதழையும் புத்தகத்தோடு இணைத்து அவருக்கு அனுப்பியிருந்தேன். அவரது முகவரியை எப்படிப் பெற்றேன் என்பது நினைவில்லை. 22/04/2002 தேதியிட்டு அவர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஒரு எழுத்தாளரிடமிருந்து நான் பெற்ற முதல் கடிதம் அது. அந்தக் கடிதத்தின் இறுதி வரிகள்...

`எழுத்திற்கு நான் பயின்றதும் பயன்படுத்துவதுமான சூத்திரம்...  `தெளிவுறவே அறிந்திடுதல்; தெளிவு தர மொழிந்திடுதல்...’ - இது உங்களுக்கும் பயன் தரலாம்.’ உண்மையில் அந்தச் சூத்திரம் எனக்கு நிறையவே பயன் தந்தது.

நாம இலக்கியத்துக்குள்ள நுழையறப்ப யார் மூஞ்சியில முழிக்கிறோம்கிறது ரொம்ப முக்கியம். நான் வருகையில் எதிர்நின்று கொண்டிருந்த சுகுமாரனுக்கு என் எல்லா எழுத்து முயற்சிகளிலும் பங்கு இருக்கிறது. இது முன்பு சுகுமாரன் குறித்து நான் எழுதியது. ஆம்... நான் வருகையில் ஜிப்பாவும் சிகரெட்டுமாக அவர்தான் நின்றுகொண்டிருந்தார். சந்தேகமே இல்லாமல் அது என் நல்லூழ்.

அந்தக் கடிதத்தில் அவர் எழுதியிருந்த இன்னொரு வரி... `இதே கவனத்துடன்  தொடர்ந்தால், உங்களிடமிருந்து செறிவான கவிதைகள் நிச்சயம் வெளிப்படும்.’

நான் 2014-ம் ஆண்டு `இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது’ பெற்றபோது கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் பாதுகாத்து வந்த அந்தக் கடிதத்தின் ஒளிநகல் ஒன்றை, பெரும் பரிசொன்றை அளிப்பதன் உவகையோடு அவருக்கு வழங்கினேன். எனக்கு வழங்கப்பட்ட இரண்டு விருதுகளின் தேர்வுக்குழுவில் அவர் இடம்பெற்றிருந்தார். அது என் அல்லது அவரது துரதிர்ஷ்டம். என் நிமித்தம் அவர் ஏராளமான வசைகளை வாங்கிக் கட்டிக்கொண்டார். `இந்த மனுஷன் தன் வாழ்க்கையிலேயே அதிகமாக வாங்கிய வசைகள் பாவம்... நம் நிமித்தம்தான்’ என்கிற எண்ணம் எனக்கு இருந்தது. இல்லை... இது இலக்கியத்தில், கவிதையில் அவர் உறுதியாக நம்பும் ஒன்றின் நிமித்தம் பெறுகிற வசைகள். எப்படியாயினும், யாருக்காகவேனும் இதை அவர் பெற்றுத்தான் ஆக வேண்டும்  என்று உணர்ந்துகொண்ட தருணத்தில், அந்தப் பெருமையைத் துறந்துவிட்டேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick