அங்கிருந்து வரும் குரலை அலட்சியம் செய்யாதீர் - லிபி ஆரண்யா

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படங்கள்: அ.குரூஸ்தனம்

 

கீழே விழுந்து முட்டியைத் தரை நக்கி வைக்க, மண்ணைத் தெள்ளி புண்ணை சொஸ்தப்படுத்தியபடி, கீழே சரிந்த மிதிவண்டியை நிமிர்த்தி மனந்தளராது ஊடுகால் விடும் சாகசத்தின் சிறுபிள்ளை களைத்தான் பணிந்து ஏற்றுக்கொள்ளும் திமிர்ந்த மிதிவண்டிகள். மிதிவண்டிகளைக் காமுறும் பால்யத்தில் வீட்டிற்கு மிதி வண்டியுடன் வருபவர்கள் தெய்வங்கள்தான்.

வண்டியை வாசலில் விட்டுவிட்டு உள்ளே தெய்வம் பேசிக்கொண்டு இருக்கையில், மிதிவண்டியை நைஸாகக் கிளப்பிக்கொண்டு போகும் சாகசம் அலாதியானது.

அளவில் பெரிய மிதிவண்டி படும் வதை சொல்லி மாளாது. ஊனமுறாமல் வீடு திரும்பும் வண்டிகள் புண்ணியம் செய்தவை. மிதிவண்டிகளை ஓட்டும் பெரியவர்கள்தான் அவற்றைக் குழந்தைகளின் கைகளில் சிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், ஊடுகால் விட்டு டக்கடிக்கும் சிறுசுகளிடம் சிக்கி மிதிவண்டி சிரமப்படவே செய்யும்.

தமிழ் இலக்கியப் பரப்பில், கிட்டத்தட்ட இதேபோலத்தான் ‘விமர்சன மிதிவண்டி’ பூட்டப்படாமல், அனாதையாக, பொறுப்பற்று, மழையிலும் வெயிலிலும் வெகுகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. அதை ஓட்டிச் செல்லவேண்டிய பெரியவர்கள் என்ன ஆனார்கள் என்றும் தெரியவில்லை. விளைவு? அவ்வழியாகப் போகும் வரும் சிறுபிள்ளைகள் எல்லாம் அதைத் தள்ளிக்கொண்டு போய் ஊடுகால் விட்டு தெருத்தெருவாக டக்கடித்துக் கொண்டிருக்கின்றன.

அப்படியான ஒரு சிறுபிள்ளையின் செய்கையாகவே நானும் இங்கு பலரும் ஜல்லியடித்த சாலைகளில் ‘விமர்சன மிதிவண்டியை’ உருட்டியபடி இருக்கிறோம். ஆனாலும், சுவரில் சாத்தி வைத்து விமர்சன மிதிவண்டியைத் துருவேறப் பண்ணுவதைக் காட்டிலும் குரங்குப்பெடல் போட்டு வண்டியை நகர்த்திக்கொண்டிருக்கும் சிறுபிள்ளையின் செய்கை நமது காலத்தின் அறமாகிறது. இந்த எளிய அறத்தின் வெளிச்சத்தில் வைத்தே ரமேஷ் பிரேதனின் கவிதைகள் குறித்து நானும் பேசும்படியாகிறது.

ரமேஷின் கவிதைகள் பற்றி எழுத ‘மனநோயர்  காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன்’ என்ற நூலை மீள்வாசிப்பு செய்தேன். மூன்று கவிதை நூல்களின் பெருந்தொகையாகத் தொகுக்கப்பட்ட இந்தத் தொகுப்பை வாசிக்கையில், நான்கு வழிச்சாலையைக் குறுக்காகக் கடக்கும் சிறுநத்தையின் தீராத்தொலைவு அவஸ்தையை உணரும்படியானது. வாசிப்பு சுகம் தரும் கவிதைகள் அல்ல இவை. பதற்றத்தையும் துயரத்தையும் குற்றஉணர்வையும் பரிதாபத்தையும், பேதலிப்பையும் வாசிப்பவனிடத்தில் சரித்துப்போகும் தொந்தரவு மிகுந்த கவிதைகள் இவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick