எதிரிகளின் நண்பர் எம்.ஜி.ஆர்! - தமிழ்மகன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

றுப்புக் கண்ணாடி, வெள்ளைத் தொப்பி, முழுக்கை சட்டை - வேட்டி... இது எம்.ஜி.ஆரின் அரசியல் அடையாளம். கொல்வதற்கு வரும் எப்பேர்ப்பட்ட வில்லனையும் ஓர் அலட்சியப் புன்முறுவலுடன் எதிர்கொள்வது அவருடைய சினிமா அடையாளம். இதைத் தாண்டி இவருடைய அரசியல், சினிமா அடையாளங்களைக் கண்டெடுப்பது அவசியம்... சுவாரஸ்யம்!

சினிமா, அரசியல் ஆகிய இரண்டு துறைகளிலும் ஒரே நேரத்தில் அவர் உச்சம் தொட்டார். இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. அதில், இரண்டுக்குமான பொதுச்சரடு ஒன்றை உணர முடிகிறது.  ‘தனக்கு எதிரிகளே இல்லாமல் பார்த்துக்கொள்வார்’ என்று பொதுப்புத்தியில் எம்.ஜி.ஆரைப் பற்றிய ஒரு சித்திரம் உண்டு. அதற்கு மாறான இன்னொரு அம்சமும் அவரிடம் இருந்தது.

எதிரிகளை அரவணைத்துக்கொள்ளும் ஓர் உத்தி அது. உத்தியா அல்லது பண்பா என்கிற கேள்வி வந்தால், பண்பு என்று ஒப்புக்கொள்வதிலும் எனக்கு ஆட்சேபனை இல்லை. எம்.ஜி.ஆரைப் பொதுவெளியில் கடுமையாக விமர்சித்தவர்கள் எனப் பட்டியல் இட்டால், அதில் கருணாநிதி, கண்ணதாசன், ஜெயகாந்தன், தமிழ்வாணன் ஆகியோரை முக்கியமான ஆளுமைகளாகச் சொல்லலாம். கிண்டல் செய்து எழுதுவதை எழுத்தாளர் சாவி போன்றவர்கள் செய்தனர். எம்.ஜி.ஆருக்கு இருந்த மக்கள் மற்றும் அரசியல் செல்வாக்கின் முன்னால், பலர் தொடர்ந்து அவரை விமர்சிக்க முடிந்ததை அவரிடமிருந்த ஜனநாயகப் பண்பின் அடையாளம்என்றுதான் சொல்ல வேண்டும். ஒருமுறைகூட அதற்கு அவர் எதிர்வினை ஆற்றியதே இல்லை. அவற்றை எல்லாம் கவனிக்கத் தவறியவர்போல இருந்தார். அப்படி எதிர்த்த சிலரை பின்னாளில் தனக்கு அருகில்கூட வைத்துக்கொண்டார். தன்னைச் சுட்ட எம்.ஆர்.ராதாவைக்கூட ஒருபோதும் வெறுத்துப் பேசியது இல்லை. ‘அரங்கமும் அந்தரங்கமும்’ எனும் தொடராக எம்.ஜி.ஆரின் இன்னொரு பக்கங்களை கண்ணதாசன் எழுதினார். ‘அரிதார மேடையில் இருந்து அரசியல் மேடைக்கு வந்தவர்’ என்று விமர்சித்தார். ஆனால், அரசியல் மேடையில் உச்சம் தொட்டு அரியணை ஏறியதும், தன்னை விமர்சித்த கண்ணதாசனை அரசவைக் கவிஞர் ஆக்கினார் எம்.ஜி.ஆர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick