எம்.ஜி.ஆர்: நிஜமும் நிழலும் வேறு வேறு அல்ல - சுகுணா திவாகர்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியங்கள்: எஸ்.சிவகுமார், கார்த்திகேயன் மேடி

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டுவிழா தொடங்கிவிட்டது. ஒருவரின் நூற்றாண்டு கொண்டாடப்படும்போதும் அவர் மக்களின் மனதில் மறையாத ஆளுமையாக இருப்பது வரலாற்றில் அரிது. எம்.ஜி.ஆரோ இன்னும் பல ஆண்டுகளுக்கு மக்களின் மனதில் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஆளுமையாக இருக்கிறார். எம்.ஜி.ஆர் மறைந்து பல ஆண்டுகள் ஆகியும், ‘எம்.ஜி.ஆர் இறந்துவிட்டார்’ என்பதை நம்பாத மக்கள் இருந்தார்கள் என்பது கடந்தகால நிதர்சனம். இன்றுவரையும் எம்.ஜி.ஆர் உருவாக்கிய சின்னம் என்பதற்காகவே, இரட்டை இலைக்கு வாக்களிப்பவர்கள் உண்டு. எம்.ஜி.ஆர் மறைந்து கால்நூற்றாண்டு கடந்துவிட்டது. ஒரு புதிய தலைமுறையே அதற்குப் பிறகு உருவாகிவிட்டாலும், இன்னமும் எம்.ஜி.ஆர் படங்கள் ஏதேனும் திரையரங்குகளில் திரையிடப்படும்போது கணிசமான கூட்டம் கூடுகிறது. அவர் உருவாக்கிய அ.தி.மு.கவுக்கு அப்பாலும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள். எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையும் நினைவுநாளையும் எந்த எதிர்பார்ப்புமில்லாத அவரது ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். எல்லா நகரங்களிலும் எம்.ஜி.ஆரைப் போலவே தன் தோற்றத்தை மாற்றிக்கொண்ட ஒரே ஒரு ‘எம்.ஜி.ஆரை’யாவது நாம் சந்தித்திருப்போம். எம்.ஜி.ஆரின் சினிமாக்கள் குறித்தும் அவரது அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் நமக்குப் பல விமர்சனங்கள் இருந்தாலும், நேரடியான அர்த்தத்தில் ‘மக்கள் தலைவர்’ என்ற வார்த்தைக்கு உண்மையில் பொருந்திப்போகிறவர், எம்.ஜி.ஆர்.

சினிமா எம்.ஜி.ஆரையும் அரசியல் எம்.ஜி.ஆரையும் சுலபத்தில் பிரித்துப் பார்த்துவிட முடியாது. இன்றளவும் தி.மு.க-வின் பொதுக்கூட்டங்களிலோ அல்லது கருணாநிதி பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங்களிலோ நாகூர் ஹனீஃபா போன்ற தி.மு.க. பாடகர்களின் கட்சிப் பாடல்கள் ஒலிக்கும். ஆனால், அ.தி.மு.க கூட்டம் என்றாலும் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா என்றாலும் தெருக்கள்தோறும் எம்.ஜி.ஆர் படப்பாடல்களே ஒலிக்கும். ‘சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகளும் மது அருந்தும் காட்சிகளும் இடம்பெறக் கூடாது’ என்று கடந்த சில பத்தாண்டுகளாக எதிர்ப்புக்குரல்கள் எழுகின்றன. புகையிலை குறித்த எச்சரிக்கை அறிவிப்புகளுக்குப் பிறகே நாம் இப்போது எந்தவொரு படத்தையும் பார்க்க முடியும். இதற்கெல்லாம் முன்னோடி எம்.ஜி.ஆர்தான். ‘புகை, மது காட்சிகள் தடை செய்யப்படுவது கலை சுதந்திரத்தைப் பாதிக்கும் நடவடிக்கை’ என்ற குரல்கள் இன்னொரு பக்கம் எழுகின்றன. ஆனால், எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை சினிமா என்பதை ஒரு பொறுப்புள்ள கலை ஊடகமாகப் பார்த்தார். பெண்களையும் சிறுவர்களையும் தமது ரசிகத் தளமாகக் கொண்ட எம்.ஜி.ஆர், இந்தத் தணிக்கையின் மீது அதிக ஆர்வம்கொண்டவராக இருந்தார்.

நான் ‘எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித்: பிம்பங்களுக்குப் பின்னால்...’ கட்டுரையில் எழுதியிருந்ததைப்போல, எம்.ஜி.ஆரின் படங்கள் என்பவை உருமாற்றப்பட்ட நீதிக்கதைகள்தான். நீதிக்கதைகளுக்கும் இலக்கியத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. நீதிக்கதை, நேர்கோட்டில் கதை சொல்வது; வாழ்க்கையைக் கறுப்பு வெள்ளையாகப் பார்த்து இது சரி, இது தப்பு என்று சொல்லும். இறுதியில் நீதி வென்றால்தான் அது நீதிக்கதை. இலக்கியமோ, வாழ்க்கையின் பல சிக்கலான பரிமாணங்களைப் பேசும். நீதி வெல்வதும் தோற்பதும் இலக்கியத்தின் கையில் இல்லை. ஆனால், தெளிவாகவே எம்.ஜி.ஆர் தன் படங்களை நீதிக்கதைகள் பாணியிலேயே அமைத்துக்கொண்டார். ஒரே நேரத்தில் நீதிக்கதைகள் சொல்பவராகவும் நீதிக்கதையின் முதன்மைப் பாத்திரமாகவும் எம்.ஜி.ஆர் இருந்தார் என்பதுதான் ஆச்சர்யம். எம்.ஜி.ஆரின் நீதிப் படங்களுக்கும் அதன் மூலம் அவர் உருவாக்கிய பிம்பங்களுக்கும் மக்களிடத்தில் அவர் சொல்ல நினைத்த விஷயங்களுக்கும் உதவியவர்கள் பலர். ஆனால் மக்களோ, அதை எம்.ஜி.ஆரின் படைப்பாகவே புரிந்துகொண்டனர். ‘சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா’ பட்டுக்கோட்டையார் பாடலாக இருந்தாலும், மக்கள் அதை ‘எம்.ஜி.ஆர் பாட்டாக’வே பார்த்தனர். பட்டுக்கோட்டை, மருதகாசி, கண்ணதாசன், வாலி, எம்.எஸ்.விஸ்வநாதன், டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா என்று பலரின் உழைப்பு இருந்தாலும் மக்களைப் பொறுத்தவரை எல்லாமே ‘எம்.ஜி.ஆர் பாடல்கள்’தான். அதை எம்.ஜி.ஆரே எழுதி, எம்.ஜி.ஆரே பாடியதாகத்தான் மக்கள் நினைத்தனர். இந்த வகையில் நீதிக்கதைகளை உருவாக்குபவராகவும் நீதிக்கதைகளின் முதன்மைப் பாத்திரமாகவும் எம்.ஜி.ஆரின் இரட்டைப் பிம்பங்கள் மக்கள் மனதில் பதிந்துபோயின.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick