நல்ல திமிங்கிலம் - அ.முத்துலிங்கம்

விஞர் மனுஷ்யபுத்திரன் ஒரு திரைப்படத்தைப் பற்றி எழுதும்போது இப்படிச் சொல்கிறார்... ‘அதிலே நல்ல ஆசிரியர்கள், நல்ல டாக்டர்கள், நல்ல நண்பர்கள், நல்ல போலீஸ் ஆபீஸர்கள் எல்லோரும் வந்து போகிறார்கள்.’

நல்ல திமிங்கிலத்தைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. அது பற்றி அறியும் சந்தர்ப்பம் இன்று எனக்குக் கிடைத்தது.

அவருடைய பெயர் சுகப்பிரம்மம்.

வயது 53. வெள்ளை அரைக்கை சட்டை அணிந்திருந்தார். மெல்லிய வசீகரிக்கும் குறுந்தாடி. அன்று ரொறொன்றோவில் நல்ல வெயில். யன்னல் வழியாகப் பாய்ந்த வெளிச்சம் அவர் முகத்திலும் மேசையிலும் ஒளிப்பொட்டுகளைச் சிதறவிட்டது. பக்கத்தில் இருந்த மகளின் வயது 16. நீள்வட்டக் கண்ணாடி. சிரித்த முகம். பேசும்போது அடிக்கடி கீழே குனிந்து பார்த்தார். `நீலோற்பலம் போன்ற கண்கள்’ என்றுதான் எனக்கு சொல்லத் தோன்றியது. சரியாக 30 வருடங்களுக்கு முன்னர் சுகப்பிரம்மமும் அவருடன் படகில் வந்தவர்களும் அட்லான்டிக் சமுத்திரத்தில் உயிருக்குப் போராடியபோது, ஒரு கப்பல் தலைவர் அவர்களைக் காப்பாற்றினார். அவருக்கு நன்றி கூறுவதற்காக சுகப்பிரம்மம் தன் மனைவியுடனும், இரு மகள்களுடனும் 2,700 கி.மீ பயணம் சென்று அன்றுதான் திரும்பியிருந்தார். 

``இலங்கையிலிருந்து நேராக கனடா வந்தீர்களா?’’


``1983-ம் ஆண்டு, ஜூலை மாதம் ஓர் இரவில்  நாங்கள் எல்லாவற்றையும் இழந்தோம்.  அப்பாவின் புடவைக் கடையை  எரித்தார்கள்.  பிறந்த ஊரிலேயே அகதிகள் ஆக்கப்பட்டோம்.  எனக்கு வயது 21. எந்த நேரம் ராணுவம் வந்தாலும், என்னை பிடித்துக்கொண்டு போய்விடும். ஒரு குற்றமும் செய்யத் தேவைஇல்லை. தமிழனாக இருப்பதே குற்றம்தானே. என் மாமா வெளிநாடு புறப்பட்டபோது, என்னையும் அழைத்துப் போனார்.  கிழக்கு ஜேர்மனிக்கு விசா தேவை இல்லை. அங்கே விமானத்தில் போய், பின்னர் மேற்கு ஜேர்மனிக்குள் நுழைந்தோம். எங்களுக்காகக் காத்திருந்ததுபோல போலீஸ் எங்களைக் கைதுசெய்து, அகதி முகாமுக்கு அனுப்பியது. தங்குவதற்கு இடமும் படுக்கையும் உணவும் கிடைத்தாலும் அதுவும் ஒரு சிறைதான்.

சிலர் கள்ளக் கப்பலில் கனடா போகத் திட்டமிட்டார்கள். ஆளுக்கு  5,000 டொலர் கட்டவேண்டும். அதற்கும் மாமாதான் பணம் கொடுத்தார். கனடா பற்றி எனக்கு எதுவித அறிவும் கிடையாது. இரவு விமானத்தில் தூங்கிய சமயம் ஜேர்மனி வந்ததுபோல, கப்பலில் தூக்கம் போட்டால் கனடா வந்துவிடும் என்று நினைத்தேன்.

1986-ம் ஆண்டு ஜூலை மாதப் பின்னிரவில்  ரகசியமாக  வாகனம் ஒன்றில் புறப்பட்டோம். இருட்டிலே பிரமாண்டமான கப்பலின் உருவம் தெரிந்தது. ஆட்களின் முகங்கள் தெரியவில்லை. கப்பல்காரன் அவசர அவசரமாக எங்களைக் கீழ்த்தளத்துக்கு அனுப்பிவிட்டு, மேல்கதவை மூடினான்.  அது ஒரு சாமான் கப்பல். நான்கு பெண்கள், ஒரு கைக்குழந்தை உட்பட நாங்கள் 155 பேர். சாமான்கள் அடுக்கும் ஒடுக்கமான இடத்தில் நாங்கள் நெருக்கியடித்து உட்கார்ந்தோம்.

மூன்று நாட்கள் கப்பல் திகிலூட்டியபடி குலுக்கியது. எங்களுக்கு வேறு சிந்தனையே இல்லை. ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்துக்கு வீசி எறியப்பட்டோம். வாந்தி எடுத்து பின்னர், அதன் மேலேயே கிடந்தோம். ஒருவரும் எட்டிப் பார்க்க வில்லை. கதவு மறுபக்கம் பூட்டியபடியே கிடந்தது. ஆங்கில சினிமாப் படங்களில் அடிமைக் கப்பல்களைப் பார்த்திருந்தேன். அதேதான். கப்பல்  அமைதியடைந்த பின்னர் முதன்முறையாக மேல் கதவு திறந்தது. டின் உணவுகளும் தண்ணீரும் தந்த பின்னர் கதவு மூடிக்கொண்டது. ஆடு மாடுகளைக்கூட ஒருவர் கொஞ்சம் கருணையுடன் நடத்துவார். ‘பூட்ட வேண்டாம். எதற்காகப் பூட்டுகிறீர்கள்?’ என்று அலறியபோது செம்பட்டை  முடிக்காரன் ‘கதவு இருப்பது பூட்டுவதற்குத்தானே?’ என்றான்.

13 நாட்கள் கழிந்த நிலையில், ஒருநாள் மாலை கதவு திறந்து வெளிச்சம் பாய்ந்தது. எங்களை மேலே வரச் சொன்னபோது என்ன ஏது என்று கேட்காமல் இடித்துப் பிடித்துக்கொண்டு மேலே வந்தோம். மூட்டை முடிச்சுகளைத் தூக்கியபோது அவற்றை அங்கேயே விடச்சொல்லி கட்டளை பிறந்தது. கண்களைக் கூசிக்கொண்டு பார்த்தோம். செம்பட்டைத் தலைமுடிக்காரன் ‘கனடா, கனடா’  என்றான். மகிழ்ச்சி தொடங்கிய அதே கணம் அது முடிவுக்கும் வந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick