கலைஞன், மக்களுடன் உரையாட வேண்டும் - சந்ரு

சந்திப்பு: வெய்யில், இளங்கோ கிருஷ்ணன் - படங்கள்: ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்

வீன ஓவிய உலகில் அன்பினாலும் மரியாதையாலும் ‘மாஸ்டர்’ என்று அழைக்கப்படுகிறவர், ஓவியர் சந்ரு. ஓவியம், சிற்பம், கவிதை, சிறுகதை, சிற்றிதழ்களுடனான இயக்கம் எனத் தனது கலை, இலக்கிய எல்லையை மனம்போல விரித்துக்கொண்டவர். சென்னை ஓவியக் கல்லூரியின் முன்னாள் முதல்வர். தொடர்ந்து, நவீன ஓவியவெளிக்குத் தனது பங்களிப்பைச் செய்துவருபவர். ‘ஒரு கலைஞன், தனது கலை குறித்து மக்களிடம் உரையாட வேண்டும்’ என்று விரும்பும் சந்ருவை, சென்னை பெரம்பூரில் உள்ள வீட்டில் சந்தித்தோம்...

பேரக் குழந்தைகளைப் பெயர் சொல்லி அழைத்துக்கொண்டே நுழைந்தவர், வாங்கி வந்த இனிப்புப் பலகாரங்களை அவர்களிடம் கொடுத்தார். சட்டையைக் கழற்றி ஓரமாகப் போட்டுவிட்டு, வியர்வை பளபளக்க வந்து அமர்ந்தார். 

“ஓவியத்துக்கும் உங்களுக்குமான முதல் தொடர்பு எப்படி ஏற்பட்டது? எப்போது ஓவியர் ஆக வேண்டும் என முடிவுசெய்தீர்கள்?”

“பிறவிக் கலைஞன் என்கிற கருத்தில் எனக்கு எப்போதும் உடன்பாடு இல்லை. எல்லா சிறுவர்களையும் போலவே நானும் வரைந்தேன். சக மாணவர்கள், ஆசிரியர்கள் ஊக்குவித்தார்கள். என் தாய்மாமா கே.பி.சிவம் ஒரு ஆர்ட்டிஸ்ட். நல்ல ஆளுமை. ஓவியர் என்ற பிம்பத்தின் மீது எனக்கு விருப்பம் உருவாக, அவர்தான் முதல் காரணமாக இருந்தார்.

ஒருநாள் பள்ளி இடைவேளையில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, அங்கு ஒரு கார் வந்து நின்றது. கார் கதவை ஒயிலாகத் திறந்துவைத்துக்கொண்டு, அதில் கால்வைத்தபடி ஒருவர் காகிதத்தில் ஏதோ வரையத் தொடங்கினார். அவரைச் சுற்றிலும் பலர் நின்றுகொண்டிருக்க, அவர்களுக்கு அந்தப் படத்தைக் காட்டி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். அந்தக் காட்சி என்னை ரொம்பவே பாதித்தது. இதே மாதிரி ஓவியனாகி, கார் வாங்கி அதைத் திறந்துவைத்துக்கொண்டு நாமும் ஓவியம் வரைய வேண்டும் என அப்போது முடிவு செய்துகொண்டேன். விவரம் தெரிந்த பிறகுதான் அவர் ஓவியர் அல்ல, ஆர்க்கிடெக்ட் இன்ஜினீயர் என்று அறிந்தேன். முடிவுசெய்தது எல்லாம் சரிதான். ஆனால், இன்று வரை கார் வாங்க முடியவில்லை (வாய்விட்டுச் சிரிக்கிறார்).”

“ஓவியக் கல்லூரியில் எப்படிச் சேர்ந்தீர்கள்?”

“ஒருமுறை வேலை முடிந்து எனது மாமாவும் அவரது சகாக்களும் பேசிக்கொண்டிருந்தார்கள். ‘லைஃப்,’ ‘இல்லஸ்ட்ரேடட் வீக்லி’ போன்ற பத்திரிகைகளின் மையத்தில் வெளியாகும் நவீன ஓவியங்களைப் பற்றிப் பேச்சு வந்தது. அப்போது ஒருவர், ‘நாமும் மாஞ்சு மாஞ்சு காலண்டருக்குப் படம் போடுறோம். ஆனால், நூறு ரூபாகூட சம்பாதிக்க முடியலை. இந்த ஓவியங்கள் எல்லாம் லட்சக்கணக்குல விக்குது. வருங்காலத்துல நம்ம காலண்டர்கள்லேயேகூட இது எல்லாம் வந்தாலும் வரும். நம்ம பையன் ஒருத்தனை இந்த மாதிரி ஓவியங்களைப் பற்றி படிக்க அனுப்பணும்’ என்று சொன்னார். ‘யார் பேச்சையும் கேட்காத ஒரு பய வேணுமே’ என யோசித்தவர், ‘இவந்தான் சரியான ஆளு’ என என்னைக் கைகாட்டினார். ‘நானும் ரௌடிதான்’ என வண்டி ஏறிவிட்டேன். ஓவியக் கல்லூரியில் படிக்கும் விருப்பத்தில் அல்ல, சென்னை நகரத்துக்கு வரும் ஆவலிலேயே இங்கு வந்தேன்.” 

“கல்லூரி அனுபவம் எப்படியிருந்தது?”

“கலை என்றால் என்ன என்பதை எனக்கு இந்த அகாடமிக் இன்ஸ்டிட்டியூஷன் கற்றுத்தரவில்லை. ஆனால், எது கலை இல்லை என்பதை அறிந்துகொள்ள இந்தக் கூடாரங்கள் எனக்கு உதவின. கல்லூரியில் இரண்டாம் ஆண்டில் மிகக் குழப்பமான மனநிலைக்கு ஆளானேன். வாழ்வு என்னோடு அப்படிச் சூதாட்டத்தை ஆடிக்கொண்டிருந்தது. வாழ்வதா, சாவதா என்கிற நிலைக்குச் சென்றேன். இறுதியில், வாழ்வது என்ற முடிவுக்கு வந்தேன்.

கலை பற்றிய தேடல் மிகுந்தது. ‘எது கலை’ என்கிற கேள்வி தீவிரமாக எழுந்தது. ஊரில் இருந்தவரை என்னை ரவிவர்மாவாக நினைத்துக்கொண்டிருந்தேன். கல்லூரியோ, ‘பிக்காஸோதான் உலக ஓவியன்’ என்றது. நான் இரண்டில் இருந்தும் விலகினேன். அப்படியானால் நான் யார்? எனக்கு ‘நான்’ என்பதே ரகசியமாக இருந்தது. ஆமாம், I am the Secret. இதுவரை, யார் கையும்படாத சீக்ரெட். அங்கு இருந்து எனக்கான ஓவிய உலகைத் தேடத் தொடங்கினேன்.”

“அப்படியானால், கல்லூரிக் காலத்தில் எந்த ஆசிரியரும் உங்களுக்குக் கலையைக் கற்றுத் தரவில்லையா, உங்களைக் கவரவில்லையா?”


“இருந்தார்கள். ஏ.பி.சந்தானராஜ் சார் இருந்தார். அவர் ஒரு ரியல் மாஸ்டர். அவரிடம் ஒரு கலைஞனுக்கான அடிப்படைத் திறன் இருந்தது. அதாவது, பார்த்ததைப் பார்த்ததுபோலவே நுட்பமாக வரைவதும், அதே சமயம் அதை இல்லாமல் அழித்து, ஆக்குவதும் அவரால் முடியும். அதற்கு எல்லாம் ஓர் ஆளுமை வேண்டும். ஒரு வீட்டைக் கட்டி அழிப்பதை விளையாட்டாகச் செய்வது குழந்தைகளுக்கும் நல்ல கலைஞனுக்கும் மட்டுமே கைகூடும். அவர் அசல் கலைஞனாக இருந்தார்.

அப்புறம், முனுசாமி சார் பற்றிச் சொல்ல வேண்டும். உலகமயப் போக்கு (Globalization) தொடங்கிய காலம் அது. உலகம் முழுக்க மூன்றாம் உலக நாடுகளின் கலாசாரத்தின் மீது மேற்கின் வலுவான ஆதிக்கம் தொடங்கியிருந்தது. இதில் இருந்து நாம் எப்படி மீள்வது? கலை வழியாக நாம் அதன் மீது எப்படித் தாக்குதல் தொடுப்பது? நமக்கான புதிய பாதைகளை எப்படிக் கண்டறிவது எனப் பல முக்கியமான திறப்புகளை, உரையாடல்கள் வழியாக எனக்குள் உண்டாக்கியவர் அவர்.

எல்லோரையும் தாண்டி, என் தோள்மேல் கைபோட்டு வளர்த்தவர் என்று மகிழ்ச்சியோடும் உரிமையோடும் நான் சொல்ல விரும்புவது, கன்னியப்பன் சார். கலைக்கான எல்லா மூலக்கூறுகளும் நம்மைச் சுற்றிலும், நமது வாழ்விலும்தான் இருக்கின்றன என்று உணர்த்தியவர். அவரது மாணவன் என்று சொல்லிக்கொள்வதில் எனக்குப் பெருமை உண்டு.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick