கதைகளின் கதை - போக்கிரி - சு.வெங்கடேசன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியங்கள்: ஜி.ராமமூர்த்தி

‘போக்கிரித்தனம் பண்ணாதே’ என்று சிறுவயதில் பெற்றோரிடம் திட்டு வாங்காமல் வளர்ந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா? சரி, நாம்தான் நமது குழந்தைகளை, `போக்கிரிப் பயலோட சேராதே’ என்று எச்சரிக்காமல் வளர்க்கிறோமா? `உங்க பையன் போக்கிரிகளோடயும் காலிப்பசங்களோடயும் சேர்ந்து சுத்துறான் சார், கண்டிச்சு வளருங்க!’ என்று பக்கத்து வீட்டுக்காரருக்கு இலவச ஆலோசனை கூறுவதைத் தவிர்த்திருக்கிறோமா? காதலி காதருகே வந்து, `போடா போக்கிரிப் பயலே’ எனச் செல்லமாகத் திட்டிப்போனதைச் சொல்லிப் பெருமைப்படும் நண்பனைக் கண்டு பொறாமைகொள்ளாமல் இருந்திருக்கிறோமா?... இப்படி வரிசையாகக் கேள்விகள் எழுப்பினால் வருகின்ற பதில், `இல்லை’ என்பது மட்டும்தான்.

`திருவிழாவில் போக்கிரித்தனம் செய்தவர்களைக் காவல்துறை விரட்டிப் பிடித்தது’ என்பது நாம் அதிகமுறை செய்தித்தாளில் பார்க்கும் தலைப்புகளில் ஒன்று. ரஜினியின் `போக்கிரி ராஜா’-வில் தொடங்கி விஜயின் `போக்கிரி’ வரை சினிமாப் படங்களின் பெயர்களில் நிலைகொண்டுள்ளனர் போக்கிரிகள்.

`போக்கிரி’ என்ற சொல் நமது வாழ்க்கை முழுவதும் பரவிக்கிடக்கிறது. இந்தச் சொல்லை ஒருமுறைகூட உச்சரிக்காத நபர்கள் அநேகமாக யாரும் இருக்க மாட்டார்கள். எல்லோரும், தலைமுறை தலைமுறையாகச் சொல்லிப் பழக்கப்பட்ட இந்தச் சொல்லுக்கு என்ன அர்த்தம்... யார் இந்தப் போக்கிரி... போக்கிரித்தனம் என்றால் என்ன... எனக் கேள்விகள் எழுப்பினால் கிடைக்கிற பதிலைத் தாங்கிக்கொள்ள மனவலிமை வேண்டும்.

`போக்கிரி’ என்பது, குறிப்பிட்ட ஒரு தொழிலைச்செய்த மக்கள் கூட்டத்தின் பெயர். அவர்கள் எண்ணிக்கையில் எவ்வளவு  இருந்தனர் என்பது தெரியவில்லை. ஆனால், எண்ணற்றோர் இருந்தனர். 19-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் அவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக அழிக்க முடிவெடுத்தது கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவம்.

கண்ணில்படுகிற போக்கிரிகள் எல்லோரையும் எந்த நேரத்திலும், சுட்டுக் கொல்லும் அனுமதியைத் தனது ராணுவ வீரர்களுக்கு வழங்கியது அன்றைய கும்பெனி ராணுவம். ராணுவத்தினரின் துப்பாக்கிகள், போக்கிரிகளை நோக்கிச் சுடத் தொடங்கின. அடர்ந்த காட்டுப் பகுதியின் தனித்த சாலைகளில் போக்கிரிகளின் கடைசி காலடி மிஞ்சி இருக்கும் வரை தோட்டாக்கள் சீறிப் பாய்ந்துகொண்டே இருந்தன. சரிந்து விழும் போக்கிரியின் அலறல், இந்திய நிலப்பரப்பெங்கும் கவனிப்பாரற்று காற்றில் கரைந்தது.

இவ்வளவு பெரிய அழித்தொழிப்பை அவர்களின் மீது நிகழ்த்தக் காரணம் என்ன... அப்படி அவர்கள் என்னதான் தவறு செய்தார்கள்? இந்தக் கேள்விக்கு பிரிட்டிஷார் சொன்ன பதிலை முதலில் தெரிந்துகொள்வோம்.

போக்கிரிகள், நாடோடிகளாகத் திரிந்த கொலைகாரக் கூட்டம். மிக ரகசியமாக தங்களின் வாழ்வை அமைத்துக்கொண்டவர்கள். சாலைகளில் போகும் பயணிகளைக் கொல்வதை மட்டுமே தொழிலாகக் கொண்டவர்கள். சாதாரண கைக்குட்டையைவைத்தே மரணத்தொழிலைச் செய்பவர்கள்.
கைக்குட்டை, அல்லது கைத்துணிதான் இவர்களது கொலைக்கருவி. துணியின் ஒரு முனையில் ஈயக்குண்டு வைக்கப்பட்டு முடிச்சிடப்பட்டிருக்கும். மற்றொரு முனையை விரல் இடுக்கில் பிடித்தபடி மொத்தத் துணியும் உள்ளங்கைக்குள் மறைந்திருக்கும். ஒருவனைக் கொலைசெய்யத் தீர்மானித்து விட்டால்,   கண்ணிமைக்கும் நேரத்தில் கைத்துணியை அவர்களின் கழுத்துக்கு வீசுவார்கள். அது ஒரு சுற்று சுற்றி, ஈயக்குண்டிருக்கும் பகுதி இவர்களின் இன்னொரு கைக்கு வரும். ஒரு இழுவையில் பின்புற மூளைக்குச் செல்லும் கழுத்து நரம்பும், முன்புற தொண்டைக்குழியும் நெறிபட்டு, தாக்குதலுக்கு உள்ளானவன் கணப்பொழுதில் சரிந்து விழுவான்.

வெட்டரிவாள், கத்தி, ஈட்டி போன்ற ஆயுதங்களோடும், கொலைக்கருவிகளோடும் ஒருவன் உலவினால், மற்றவர்கள் எளிதில் அவனைக் கண்டறியலாம். ஆனால், சின்னஞ்சிறு கைத்துணியை உள்ளங்கையில் சுருட்டி வைத்திருக்கும் ஒருவனை அடையாளம் காண்பது எளிதல்ல. எனவே, சாலையில் செல்லும் பயணி யார்... போக்கிரி யார் என்ற வேறுபாட்டையே அறிய முடியவில்லை. எனவே, போக்கிரி எனச் சந்தேகப்படுகிற எல்லோரையும் அழிப்பதுதான் ஒரே வழி. போக்கிரிகள் பிறவிக் குற்றவாளிகள். குற்றம் அவர்களது ரத்தத்தில் கலந்துள்ளது. அது பரம்பரை பரம்பரையாக வருவது. அவர்களைத் திருத்த முடியாது; அழிப்பது ஒன்றுதான் தீர்வு என முடிவெடுத்த பிரிட்டிஷார் 1830-ம் ஆண்டு `போக்கிரி ஒழிப்பு சட்டத்தை’ கொண்டுவந்தார்கள். இந்தச் சட்டம், போக்கிரி எனச் சந்தேகப்படும் யாரையும், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் சுட்டுக் கொல்லும் அதிகாரத்தை கும்பெனி ராணுவத்துக்கு வழங்கியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick