அடுத்து என்ன? - எஸ்.ராமகிருஷ்ணன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படம் : பிரபு காளிதாஸ்

`ஒற்றைக்கால் மனிதன்’ என்றொரு அறிவியல் புனைகதை எழுதிக்கொண்டிருக்கிறேன். சிறார்களுக்கான நாவல். பிரபஞ்சத்தில் பூமி தோன்றும்போது சிறிய துண்டு உடைந்து தனிக் கிரகம் ஆகிவிடுகிறது. அதன் பெயர் `விசித்ரா.’

சின்னஞ்சிறிய அந்தக் கிரகத்திலும் மனிதர்கள் வசிக்கிறார்கள். ஆனால், அவர்கள் நம்மைவிடவும் 100 ஆண்டுகள் முன்னால் வசிக்கக்கூடியவர்கள். இப்போது அங்கே 2116-ம் வருடம் நடந்துகொண்டிருக்கிறது

அவர்கள் ஒரு கை, ஒரு கால் உள்ள மனிதர்கள். அந்தக் கிரகத்தில் மனிதர்களின் ஒரே வேலை கண்டுபிடிப்புதான். புதிதுபுதிதாக எதையாவது கண்டுபிடித்துக்கொண்டே இருப்பதுதான் அவர்கள் வேலை.

அந்தக் கிரகத்தை ஒரு சொல்தான் ஆட்சி செய்கிறது. அந்தச் சொல் உயிருள்ளது; அதற்கு உருவம் கிடையாது; குரல் மட்டும் உண்டு. அந்தக் கிரகத்தில் மனிதர்களுக்குப் பசிக்காது. அவர்கள் பிறக்கும்போது வாழ்நாளுக்கான சக்தி உடலில் சேகரிக்கப்பட்டுவிடும். ஆகவே, உணவு தேடி அலையவேண்டிய வேலை  இல்லை. அறிவை சேகரிக்க பள்ளி, கல்லூரிகளுக்குப் போய்ப் படிக்கவேண்டியது இல்லை. தேவையான அறிவை ஒரு நிமிடத்தில் மூளையில் பதிவுசெய்யும் அதிநவீனத் தொழில்நுட்பம் அவர்களிடம் இருந்தது.

அந்தக் கிரகத்தில் மனிதர்களின் வயது ஐந்து நிறங்களைக்கொண்டது. பிறந்தது முதல் 12 வயது வரை நீல நிறத்தில் இருப்பார்கள்.

பதின்வயது பருவம் ஆரஞ்சு வண்ணம்; இளைஞர்களின் வயதை பச்சை நிறத்தில் குறித்தார்கள். நடுத்தர வயது மனிதர்கள் மஞ்சளையும், வயதானவர்கள் சாம்பல் நிறத்தையும்கொண்டு அடையாளம் காணப்பட்டார்கள், அந்தந்த வயதில் உடல் தானே நிறம் மாறிவிடும். சோப்பு நுரை போன்ற வடிவில் பெரியதான செயற்கைக் குமிழ் ஒன்றுதான் அவர்களின் வீடாகயிருந்தது.

குழந்தைகள் பிறந்தவுடன் ஓர் எழுத்தில் பெயர்வைக்கப்படுவார்கள். அவர்கள் நிறம் மாற மாற, பெயரில் ஒவ்வோர் எழுத்தாகச் சேரத் தொடங்கும். முதுமையில் ஐந்து எழுத்து பெயருடன் அவர்கள் வாழ்வார்கள். அந்தக் கிரகத்தில் மனிதர்கள் சராசரியாக 200 வருடங்களுக்கும் மேலாக வாழக்கூடியவர்கள். முடிவில் அவர்கள் ஒருநாள் புகையாக மறைந்துவிடுவார்கள்.

பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட விண்கலம் ஒன்று திசைமாறி இந்தக் கிரகத்துக்கு வந்து சேர்கிறது. அந்த விண்கலத்தில் இருந்த இரண்டு விஞ்ஞானிகள் இறந்துகிடக்கிறார்கள். ஆனால், அந்த விண்கலத்திலிருந்து விசித்திரமான உருவம் ஒன்று வெளிப்படுகிறது. அதன் பெயர் `உலோகி’. அது நிமிடத்தில் பல்கிப் பெருகி விசித்ரா கிரகத்தை ஆக்கிரமிக்கத் தொடங்குகிறது.

அமைதியாக வாழ்ந்துகொண்டிருந்த அந்தக் கிரகத்தை உலோகிகள் சிதைக்கத் தொடங்குகிறார்கள். இதனால் அங்குள்ள மனிதர்களின் உடலில் இருந்த உயிர்சக்தி வேகமாகக் குறைய ஆரம்பிக்கிறது. இந்த அபாயத்திலிருந்து கிரகத்தைக் காப்பாற்ற முயற்சிக்கிறான் யூ என்ற சிறுவன். அவனுக்குத் துணைசெய்வதற்காக விண்கலத்தில் இருந்த பூனை வடிவ ரோபோ ஒன்று உதவிசெய்கிறது. அவர்கள் இணைந்து எப்படி விசித்ரா கிரகத்தைக் காப்பாற்றுகிறார்கள் என்பதே நாவலின் கதை.

தொலைக்காட்சியில் வெளியாகும் கார்ட்டூன் படங்களை விஞ்சும்படியான கற்பனை இருந்தால் மட்டுமே, இன்று குழந்தைகளை நம் பக்கம் இழுக்க முடியும். அதுதான் சிறார் நாவல்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்.

இந்த நாவல் இரண்டுவிதங்களில் வெளியிடப்பட உள்ளது. ஒன்று, அச்சு வடிவம். மற்றது, கிராஃபிக் நாவல் வடிவம். அதில் அழகிய சித்திரங்களுடன் வெளியிட முயற்சிகள் மேற்கொண்டுவருகிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick