உன் கூட்டாளிகள் சரியில்லை - லிபி ஆரண்யா

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

மு.சுயம்புலிங்கத்தின் கவிதைகளை முன்வைத்து

`பாரதியிடம் இருந்து தொடங்கும் தமிழ் நவீனக் கவிதை...’ என இந்தக் கட்டுரையைத் தொடங்கினால், நீங்கள் வள்ளலாரையோ அன்றி வேறொருவரையோ நவீனக் கவிதையின் தொடக்கப் புள்ளி என மறுக்கலாம். அதற்கான நியாயங்களையும் நீங்கள் சொல்லக்கூடும். கவிதை குறித்த எந்த ஒரு வாக்கியமும் தனக்கான எதிர்வாக்கியத்தை உடன் அழைத்துவரும் இயல்பு கொண்டதாகவே உள்ளது. கவிதை குறித்த பேச்சில் தீர்க்கமான ஒரு வாக்கியத்தை உருவாக்குவது எளிது அல்ல. கவிதையைப் போலவே கவிதை குறித்த பேச்சும் வரையறைகளை அழித்தெழுதும்  குணம்கொண்டது.

பாரதிக்குப் பிந்தைய  தமிழ்க் கவிதைப் போக்கு பல்வேறு கருத்தியல்களால் கிளைத்து, சகல திசைகளிலும் வளர்ந்தது. பரஸ்பர முரண்களால் நிகழ்ந்த சண்டைகளும் சச்சரவுகளும் நவீனக் கவிதை விருட்சத்தின் அடியுரமாயின. வெக்கையான உரையாடல்களின் வழியேதான் தமிழ் நவீனக் கவிதை  தனது உக்கிரமான பயணத்தைத் தொடர்ந்தும் வருகிறது. அதற்காக கவிதை எனும் மொழியின் உச்சநிலை வினையை கவிதையியல்தான் நிகழ்த்துகிறது என்று நம்புவது அபத்தம். சில நேரங்களில் கவிதையியல், கசிந்து பெருகும் கவிதையின் ஊற்றைத் தூர்த்துவிடும் துர்காரியத்தைச் செய்யலாம். கவிதையியலை கவிதையின் படைப்புச் செயற்பாட்டிற்கான வினையூக்கி என்ற அளவில் பராமரித்துக் கொள்வது ஒரு படைப்பாளியின் முன்னுள்ள சவால்தான். இந்தப் புரிதலின் அடிப்படையில் ஆதியிலிருந்து காலாதிகாலமாய்த் தொடரும் கலை Vs அரசியல் என்ற தீராமுரணை அணுகலாம்.

நமது சாலையின் மருங்கில் இரண்டு காபி கடைகள் உள்ளன. வலப்பக்கமாய் உள்ள கடையின் முகப்பில் இப்படி எழுதிப் போட்டிருக்கிறார்கள்... `அரசியல் சிக்கரி கலக்காத தூய கலை காபி இங்கே கிடைக்கும்’. நம்மால் வலது பக்கம் திரும்ப முடியுமா என்ன? இடது பக்கக் கடையில் காபி குடிக்கலாம் என்றால், அங்கே... `காபித் தூள் கலக்காத தூய அரசியல் சிக்கரி பானம் கிடைக்கும்’ என்று பீதியூட்டுகிறார்கள். அரசியலும் கலையும் ஒன்றுடன் ஒன்று சேராத வஸ்துக்கள் அல்ல என்று நம்புகிறவர்கள் என்ன செய்யலாம்? இரண்டு கடைகளுக்கும் மத்தியில் நடுரோட்டில் புதிய கடை போடவேண்டியதுதான்.

தூய கலைக்கோஷ்டி சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த அதே காலத்தில்தான், கவிதை என்பதே அரசியல் செயல்பாடுதான் என்ற புரிதலுடன் திராவிட, மார்க்சியக் கருத்தியலாளர்கள் நம்பிக்கையோடு இயங்கிக்கொண்டிருந்தனர். இதில் நல்லதும் கெட்டதுமாக நிறைய நடந்தன. கவிதைவெளி ஜனநாயகமாக்கப்பட்டது. வானம்பாடிகளின் உச்சமான நற்செய்கை அதுதான்.

பிற்பாடு மிகையுணர்ச்சியும் பாசாங்கும் கொண்டதாக அரசியல் கவிதைகள் நீர்த்துப்போயின. `கவிதைகள் மட்டும்தானா... அதை எழுதியவர்கள்?’ என நீங்கள் எழுப்பும் கேள்வியைப் பொதுவில்வைத்துவிட்டு நான் மு.சுயம்புலிங்கம் கவிதைகள் பக்கம் நகர்கிறேன். அது எனக்கு ஆசுவாசம் அளிக்கிறது. 

சுயம்புலிங்கத்தின் கவிதைகள் வரிக்கு வரி அரசியல் பேசுபவைதான். அதுவும், தான் நம்புகிற இடதுசாரி அரசியலை. ஒளித்து, மறைத்துப்  பூடகமாக அல்ல, மிக வெளிப்படையாகப் பேசுபவை. தமிழ்ச் சூழலில் இடதுசாரி அரசியல் கவிதைகளை, நிறுவனம் சார் இடதுசாரிக் கவிதைகள் என்றும் நிறுவனம் சாராத இடதுசாரிக் கவிதைகள் என்றும் ஒரு வசதிக்காகப் பிரித்துக்கொள்ளலாம். இதில் முந்தைய வகைமைக் கவிதைகள் பொதுவாகக் கோஷத்தின் துடி கொண்டவை.

`எழு! நிமிர்! கரங்களை இணை! முஷ்டியை உயர்த்து!’ என்பன போன்ற கூட்டு உடற்பயிற்சிக்கான கட்டளை வாக்கியங்கள் இல்லாமல் இந்தக் கவிதைகளின் ஆன்மா சாந்தியடைவது இல்லை. `நான் தடைகளைத் தகர்ப்பேன்! எதிரிகளைப் பந்தாடுவேன்! பூமியைப் புரட்டுவேன்! முகமூடியைக் கிழிப்பேன்!’ என்பனபோன்ற செய்வினை வாக்கியங்களைச்  சில கவிதைகளில் பார்க்கலாம். `இவைபோன்று நமது கவிதைகளுக்கு நாமே செய்வினை வைத்துக்கொள்ளக் கூடாது’ என்று தோழமையோடு நாம் சொல்ல வேண்டியிருக்கிறது. இதில் விதிவிலக்காக நல்ல கவிதைகளும் இங்கேயிருந்து வந்திருக்கின்றன என்ற உண்மையை மறைத்தால், நமது வாயில் கொப்பளம் வந்துவிடும்.

இரண்டாவது வகைமையான நிறுவனம் சாராத இடதுசாரிக் கவிதைகள் ஒப்பீட்டளவில் வீரியமான கவிதைகளாக இருக்கின்றன. அவ்வாறான பல கவிதைகளை, பல கவிஞர்களைத் தமிழில் குறிப்பிட இயலும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick