பெயர் வைக்கும் பேறு - மகுடேசுவரன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

மிழ் மொழியை பல்லாயிரமாண்டுகள் மூத்த மொழி என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதில் ஐயமில்லை. மூத்த மொழியின் பெருமை மூப்போடு நின்றுவிடுவதன்று. இளமைக்கு இளமையாய்ப் புதிதாகிக்கொண்டே செல்லும் அதன் சொல்லாட்சித்  திறத்தோடும் தொடர்புடையது. இடைக்காலத்தில் தமிழுக்குள் நுழைந்த வடமொழிச் சொற்கள் மிகுதியினும் மிகுதியாகி, மலையாளம் என்றொரு மொழியைத் தோற்றுவித்ததை அறிவோம்.

வரலாறு முழுக்கவே பண்பாட்டுப் படையெடுப்புகளும் குடியேற்றங்களும் நிகழ்ந்துகொண்டேயிருந்த நிலம் தமிழ் நிலம், சீரான இடைவெளியில் கடலினை நோக்கி வரையப்பட்ட வரிக்கோடுகளாய்த் தொடர்ச்சியான ஆறுகள் பாயும் தென்னாடு, சிந்து, கங்கைச் சமவெளியைவிடவும் உயிர்ப்பான வாழ்நிலம் என்பதை நம் வரலாற்றாசிரியர்களே கூற மறந்துவிட்டனர். எல்லாப் படையெடுப்புகளும் குடியேற்றங்களும் ஏற்பட்ட பின்னர் நின்று நிதானமாக நிகழ்த்தப்படும் அயல் மகரந்தச் சேர்க்கைகளில் ஒன்று மொழிக் கலப்பாகும்.

தொன்றுதொட்டு பரந்த நிலப்பரப்பில் வழங்கிவரும் வழக்காற்று மொழியை எந்தப் பேரரசாலும் மாற்றிவிட முடியாது என்றாலும் ஒரு மொழி தன் மக்களோடு கொண்டிருக்கும் நாத்தொடர்பைக் கொஞ்சம் கொஞ்சமாக மொழிக்கலப்பு என்ற பெயரால் நெடுநாட்கள் முயன்றால் அறுத்தெறிந்துவிடவும் முடியும். அந்த நோயரிப்பு தமிழில் எப்போதும் நிகழ்ந்துகொண்டேதான் இருந்தது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் வடமொழிச் சொற்கள் காணப்பட்டன. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழுக்குள் வடமொழிச் சொற்கலப்பு நன்றாக வேர்பிடித்துவிட்டது. பெருவழுதி, பல்யானைச் செல்கெழு குட்டுவன், செங்கண்மாத்துவேள் நன்னன், முடத்திருமாறன், நெடுஞ்செழியன், செங்குட்டுவன் என்று பழங்காலத் தமிழ்வேந்தர்கள் பெயரிருக்க, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய மன்னர்கள் இராஜராஜன், இராஜேந்திரன், விஜயாலயன், ஆதித்தன், சுந்தரபாண்டியன் என்றானார்கள்.

மொழிக்கலப்பை முழுமையாய் ஆராய்ந்ததில் நான் கண்டறிந்த உண்மை என்னவென்றால், பெயர்ச்சொற்கள்தாம் தமிழுக்குள் கலந்தனவேயன்றி வினைச்சொற்களில் அவ்வளவாய்க் கலப்பேற்படவேயில்லை என்பதுதான். `வாசித்தான்’, `பிரகாசித்தது’, `ஜெயித்தான்’ என்று சிற்சில வினைச்சொற்கலப்புகளைக் காண முடிகிறது. ஆனால், பெயர்ச்சொற்களின் கலப்பு ‘களைபெருகிக் காடழிக்குமோ’ என்னுமளவுக்கு இருக்கிறது.

மொழிக்கலப்பு ஏற்பட்டதிலிருந்து இன்று வரை பெயர்ச்சொற்களில் புகழ்ச்சிப் பொருள்களை ஏற்றியதால்தான் அவற்றை நாம் சூட்டிக்கொண்டோமோ என்று ஐயுறுகிறேன். `இராஜாக்களுக்கெல்லாம் இராஜன்’, `இராஜாக்களின் இந்திரன்’ என்று புகழ்விளியாய் அமைந்த பெயர்ச்சொற்களை மறுக்க மனம் வருமா? அவ்வாறிருக்கையில் தமிழில் இடப்படும் பெயர்ச்சொற்கள் இயற்கை விளியாய் அமைந்திருந்தன. கரிகாலன், கூன்பாண்டியன் என்று மன்னர் பெயர்களே அவர்களின் இயற்கையை உள்ளபடி கூறுவதாய்த்தாம் உள்ளன. இந்தப் பெயர்க்கலப்பின் தற்கால விளைவு என்னவென்றால், தமிழகத்தில் நூற்றுக்குத் தொண்ணூற்றைவர்க்குப் பிறமொழிப் பெயர்களே வழங்குகின்றன. இப்படியொரு சீர்கேடு உலகில் எம்மொழி யினர்க்கும் நேர்ந்திருக்காது. நமக்கு நேர்ந்திருக்கிறது.

என் தாயாருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஐம்பதாண்டுகளுக்கு முந்திய தலைமுறையின் வளமான எடுத்துக்காட்டு அவர். ஒருநாள் பக்கத்துவீட்டுக் குழந்தையை மடியில் வைத்துக் கொஞ்சிக்கொண்டிருந்தார். ‘கிசுர் கிசுர்’ என்று குழந்தையை அழைத்தார். குழந்தையைப் புதுவித மாய்க் கொஞ்சுகிறாரே என்று `அதென்னம்மா கிசுர்?’ என்று கேட்டேன். ‘அதுதான் குழந்தை பேரு’ என்றார். கிசுர் என்றா பெயர் வைக்கிறார்கள்? இத்தனைக்கும் அக்குழந்தையின் பெற்றோர் தென்மாவட்டத்தின் எளிய தமிழ்க்குடியினர். பிழைப்பின்பொருட்டு இவ்வூருக்கு வந்திருக்கிறார்கள். மாலையில் அக்குழந்தையின் தந்தையிடமே கேட்டுவிட்டேன். ‘என்ன குழந்தைக்குக் கிசுர்னா பேரு வெச்சிருக்கீங்க?’ அவர் சிரித்துக்கொண்டே ‘அது கிசுர் இல்லீங்க. கிஷோர்’ என்றார்.

தென்மாவட்டத் தமிழர் ஒருவர் தம் பிள்ளைக்கு கிஷோர் என்று பெயர் வைக்கிறார். அப்பெயர்க்கு என்ன பொருள் என்று அவருக்கும் தெரியாது, அழைக்கின்றவருக்கும் தெரியாது.  இதை எழுதுகின்ற இந்நொடி வரை எனக்கும் அந்தப் பெயரின் பொருள் தெரியாது. இதுதான் இன்றைய நிலை. அதுமட்டுமில்லை, கிசுர் என்று பெயர்வைக்க இயலாது என்பதில் உறுதியாய் இருக்கும் நான், கிஷோர் என்றும் பெயர்வைக்க இயலாது என்பதில் உறுதியாய் இல்லை. ‘ஓ. கிஷோரா… நல்ல பேரு’ என்று சொல்லவேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இணையத்தில் என்னோடு உரையாடும் நண்பர்கள் தம் குழந்தைக்குச் சூட்ட நல்ல தமிழ்ப்பெயராகக் கூறும்படி என்னிடம்  வேண்டுகோள் வைப்பார்கள். ‘பரவாயில்லையே… ஒரு குழந்தைக்குப் பெயர்சூட்டும் நிலையில் இருக்கின்றோம்… நம்மை நம்பி எத்தனை பெரிய உதவி யைக் கோருகிறார்கள்..!’ என்று மகிழ்வேன். நன்கு ஆராய்ந்து ஐந்தாறு தமிழ்ப் பெயராகக் கூறுவேன். ‘இல்லை ஐயா… `ப’, `யே’, இல்லாவிட்டால் `வூ’ ஆகிய எழுத்துகளில் தொடங்கும் பெயராக வேண்டும்’ என்பார்கள்.

‘அடடா… இதை முதலிலேயே கூறக் கூடாதா…’ என்றபடி மேலும் தேடுவேன். `ப’-வில் தொடங்கும் பெயர்களைக் கண்டுபிடித்துவிடலாம். `யே’-வில் தொடங்கும் பெயருக்கு நான் எங்கே போவேன்? பிறகுதான் எனக்கே தோன்றும், `யே’ அல்லது `வூ’ என்னும் எழுத்துகள் சொல் முதலெழுத்தாகத் தோன்ற மாட்டா என்பது.  என்னிடம் பெயர் சூட்டக் கோரிய நண்பர்க்கு இதை விளக்குவேன்.

‘என்னங்க இப்படிச் சொல்றீங்க… யேசுதாஸ்னு பெரிய பாடகர் இருக்கா ருல்ல…’ என்று என்னை உள்பெட்டி வழியாகவே மேலும் கீழும் பார்ப்பார்.

‘அது தமிழ்ப்பெயர் இல்லைங்க… யேசு, தாஸ் இரண்டுமே வெவ்வேறு மொழிங்க…’ என்பேன். பாரதிதாசன், கண்ணதாசன் என அவர் அடுத்த பெயர் களுக்குத் தாவினால் என்னிடம் விடையில்லை என்பதால் பயந்தபடியே இருப்பேன். நல்ல வேளையாக, தாஸ், தாசன் இரண்டுக்கும் உள்ள ஒற்றுமையை அந்நண்பர் அறிந்திருக்க மாட்டார்.

‘சரி, `ப’-வில் தொடங்கும் பெயர்களையே சொல்லுங்க…’ என்பார். நான் சில பெயர்களைச் சொல்வேன். அவருக்கு நிறைவில்லாமல், `நீயா நானா’ கோபிநாத்போல் ‘வேற… வேற…’ என்பார். `ப’-வில் தொடங்கும் தமிழ்ப் பெயர்கள் அனைத்தையுமே ஏறத்தாழச் சொல்லி முடித்திருப்பேன். இப்படியே நீளும் உரையாடல் ஒரு கட்டத்தில் ‘சரிங்க… வேற ஏதாச்சும் இன்னும் நல்ல பெயராகத் தோன்றினால் சொல்லுங்க…’ என்பதாய் முடியும். நான் எழுந்து சென்று தண்ணீர் குடிப்பேன். பின்னொரு வாய்ப்பில் அந்நண்பரைக் காண நேர்ந்தால் நானே சென்று வலிந்து கேட்பதுண்டு. ‘பாப்பாவுக்கு என்ன பேரு வெச்சீங்க?’

அவர் ‘பரிபிக்‌ஷிதான்னு வெச்சுட்டோம்’ என்பார்.

தமிழ்ப்பெயர்களின் பட்டியல் ஒன்றைப் போட்டுப் பார்த்தோமெனில் ஆணுக்கு ஆயிரம் பெயர்கள், பெண்ணுக்கு ஆயிரம் பெயர்கள் தேறுவதே குதிரைக் கொம்புதான். நண்பர் கேட்டவாறு `ப’ என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ்ப் பெண் பெயர்கள் சிலவற்றைக் கூறுங்கள் பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick