ஐடி உலகம்: நிஜமும் கற்பிதங்களும் - விநாயக முருகன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

முதன்முதலில் சினிமாவை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டபோது, திரையில் ரயில் வரும் காட்சியைப் பார்த்து மக்கள் பயந்துபோய் அரங்கைவிட்டு வெளியே ஓடினார்கள் என்று கேள்விப்பட்டுள்ளோம். அதுதான் கணிப்பொறித் துறை  இந்தியாவுக்கு வரும்போதும் நடந்தது. அந்தக் காலக்கட்டம் இப்போதும் நன்றாக நினைவில் உள்ளது.

80-களின் மத்தியில் அரசு வங்கி ஊழியர்கள் கணிப்பொறி வந்தால் தங்களுக்கு வேலை போய்விடும் என்று, அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம், தொடர்போராட்டம் நடத்தினார்கள். ஆனால், வரலாறு வேறுவிதமாக மாறியது. கணினிகள் ஒவ்வோர் அலுவலகத்திலும் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்தன.

கணிப்பொறித் துறை இந்தியாவுக்கு வந்தபோது பண்பாட்டு ரீதியாக ஏற்படுத்திய தாக்கங்களையும் குறிப்பிட வேண்டும். குறிப்பாக பி.பி.ஓ என்ற சேவை இந்தியாவுக்குள் வந்தபோது, கலாசாரக் காவலர்கள் அந்தத் துறை குறித்து உருவாக்கிய கற்பிதக் கதைகள் ஏராளம். ஐடி ஊழியர்கள் என்றாலே, `அவர்கள் கட்டற்றப் பாலியல் சுதந்திரம் கொண்டவர்கள், வார இறுதிநாட்களில் குடித்துவிட்டு அழகான இளம்பெண்களோடு ஆட்டம் போடுபவர்கள்’ என்று சாதாரண மக்களின் பொதுப்புத்தியில் பதியவைக்க முயன்றபடி இருந்தனர். தமிழ் சினிமாக்களிலும் ஐடி இளைஞர்களின் கதாபாத்திரங்களையும் அப்படி ஒழுக்கக்கேடாகத்தான் காட்டினார்கள் அல்லது அம்மாஞ்சியாகக் காட்டினார்கள்.  ஆனால், எல்லாத் துறைகளிலும் இருப்பதுபோலத்தான் ஐடி துறையிலும் சில விதிவிலக்குகள் உள்ளன என்பதை மக்கள் புரிந்துகொள்ளவே 20 ஆண்டுகள் தேவைப்பட்டன.

ஈழப் பிரச்னையில் இருந்து சமீபத்தில் சென்னையில் வந்த வெள்ளப்பெருக்கு வரை எத்தனையோ நாட்டு நடப்புகளில் இந்தத் துறையில் பணியாற்றும் இளைஞர்கள்தான் தோள்கொடுத்து நின்றார்கள். அதே நேரம் எந்தவித சமூகப் பொறுப்பற்றும் எந்தவித அரசியல் ஆர்வமும் இல்லாமல், தமிழகத்தில் எத்தனை தொகுதிகள் உள்ளன என்பது போன்ற சாதாரணத் தகவலைகூடத் தெரிந்துவைத்திராத இளைஞர்களும் இதே துறையில்தான் இருக்கிறார்கள். இது ஐடி துறைக்கு மாத்திரமே இருக்கிற பிரத்யேகக் குணம் அல்ல. இன்று எல்லா இளைஞர்களுக்குமே இருக்கிற பொதுவான சமூகக் குறைபாடு.

எந்தப் புதுத் தொழில் நுட்பமோ, வேலைவாய்ப்போ வரும்போது, அது சமூகத்தின் புறச்சூழலிலும், பண்பாட்டு ரீதியிலும் சில சாதகமான, பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். கிட்டத்தட்ட அதே கதைதான் ஐடி துறையிலும் நடக்கிறது. ஆனால், ஊதிப் பெரிதாக்கப்பட்டு அதிகக் கவனத்துக்கு உட்படுத்தப்படுகிறது. 

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தகவல்தொழில்நுட்ப உலகத்தில் ஒரு புரட்சி நடந்துகொண்டே இருக்கும். உதாரணமாக Y2K. 2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் எங்கும் அந்தப் பிரச்னையைச் சரிசெய்யும் ஆட்கள் தேவைப்பட்டார்கள். கோபால், மெயின்ஃபிரேம் போன்ற தொழில்நுட்பங்கள் படித்திருந்தால், அடுத்த நாளே அமெரிக்காவுக்குச் சென்றுவிடலாம். அப்படிச் சென்றவர்கள் லட்சக்கணக்கில் மாதச் சம்பளம் வாங்கினார்கள். 2000-ம் ஆண்டில் ஜாவா வந்தது. 2005-ம் ஆண்டில் இ-காமர்ஸ் எனப்படும் மின்னணு வணிகம் கொடிகட்டிப் பறந்தது. பிறகு 2010-ம் ஆண்டில் மொபைல் தொழில்நுட்பம். இப்போது கிளவுட் டெக்னாலஜி. மற்ற தொழில்துறைகளைவிட ஐடி துறை தனித்து நிற்கவும் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் பணியாற்றவும் காரணமே,  மாறிக்கொண்டிருக்கும் இந்தத் தொழில்நுட்பம்தான். எல்லாத் துறைகளுக்கும் ஓர் ஆரம்பக்கால கட்டம் இருக்கும். பிறகு பொற்காலம் என்று ஒன்று இருக்கும். பிறகு, பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் சுமாராக ஓடிக்கொண்டிருக்கும். இறுதியாக அந்தத் துறை வீழ்ச்சி அடைந்து வேறு ஓர் அலை வீசும். கணிப்பொறித் துறையின் ஆரம்ப காலம் என்பது, 80-களின் இறுதியில் இருந்து 90-களின் ஆரம்பம் வரை. பொற்காலம் என்பது 90-களின் மத்தியில் இருந்து 2010-ம் ஆண்டு வரை.  ஆனால், இன்றைய நிலைமை அப்படி இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick