தமிழர் என்ற அரசியல் அடையாளம் - சுகுணா திவாகர்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

மொழி அரசியல் குறித்த குரல்கள் தமிழ்ச்சூழலில் மீண்டும் மேலெழுந்துள்ளன.

‘மத்திய அரசு மீண்டும் மீண்டும் சமஸ்கிருதத்தையும் இந்தியையும் திணிக்கப் பார்க்கிறது. தமிழர்களின் தனித்த அடையாளங்களை அழிக்கப் பார்க்கிறது’ என்கிற குரலை, திராவிட இயக்கத்தவர்களும் தமிழ்த் தேசியவாதிகளும் எழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். இன்னொருபுறம் ‘இவை அத்தனையும் அரசியல் வார்த்தைகளே. இந்தியையும் சமஸ்கிருதத்தையும் எதிர்க்கும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்மொழி போற்றிப் பாதுகாக்கப் படவில்லை; தமிழ்வழிக் கல்வி அழிக்கப்படுகிறது’ என்கிற விமர்சனங்களும் எழுகின்றன. இந்த இரண்டு குரல்களிலும் நியாயங்கள் இல்லாமல் இல்லை.

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சமஸ்கிருதத்தையும் இந்தியையும் தேசியக் கலாசார அடையாளமாக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து செய்துவருகிறது. ஆட்சிக்கு வந்த சில நாட்களில் ‘சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படும்’ என்று முதல் அறிவிப்பை வெளியிட்டது. அதற்கான முதல் எதிர்ப்புக் குரல் தமிழகத்தில் இருந்தே எழுந்தது. சுதந்திர தின உரை முதல் ஐ.நா அவையில் ஆற்றும் உரை வரை மோடி இந்தியிலேயே பேசினார். இன்றும் ‘தூய்மை இந்தியா’ குறித்த விளம்பரங்கள் எல்லா மாநிலத் தொலைக்காட்சிகளிலும் இந்தியில் ஒளிபரப்பப்படுகின்றன. மத்திய தொழிலாளர் நலத் துறை சார்பில் அனுப்பிய சுற்றறிக்கையில், மத்திய அரசின் முக்கியத் தீர்மானங்கள், அரசாணைகள், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவேண்டிய அறிக்கைகள், அலுவலக ஒப்பந்தங்கள், உரிமங்கள், ஏல ஒப்பந்தப் புள்ளிக் கோரல் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் இந்தியில் வெளியிடுவதை மண்டலத் தலைமை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். அரசு அலுவலகங்களுக்கு வரும் கடிதங்களுக்கு கட்டாயம் இந்தி மொழியில்தான் பதில் அனுப்ப வேண்டும். அதிகாரிகளின் பணிக் கால ஆவணங்கள் அனைத்தும் இந்தி மொழியிலேயே இருக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் உயரதிகாரிகள் இந்தி கற்றுக்கொள்ள சிறப்பு வகுப்புகள் தொடங்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

`மாநிலப் பள்ளிகளில் சமஸ்கிருதத்தைக் கற்றுத்தர மாநில அரசுகள் முன்வர வேண்டும்’ என்றும், `விருப்பப்பட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கி ஆவன செய்து தருவோம்’ என்றும் மத்திய மனித வளத் துறை அமைச்சகம் அறிக்கைவிட்டது. இதன் அடிப்படையில் அரியானா மாநிலத்தில் முதன்முதலாக சமஸ்கிருத பல்கலைக்கழகம் அமைக்க, சுமார் 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2014-15-ம் ஆண்டில் அரசின் ஓர் அங்கமான சமஸ்கிருத பிரசார நிறுவனம் அதற்காக ஒதுக்கப்பட்ட தொகையில் 270 கோடி ரூபாய் செலவிற்கான கணக்கை இன்று வரை ஒப்படைக்கவில்லை என்று மாநிலங்களவையில் அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார். இருப்பினும் 2015-16-ம் ஆண்டு வரவு செலவுக் கணக்கில் சமஸ்கிருத பிரசார நிறுவனத்திற்கு மேலும் 740 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஐ.நா அலுவல் மொழியாக இந்தியை ஆக்க மத்திய அரசு முயற்சித்தது.

இப்படிப் படிப்படியாகத் தொடர்ந்த அறிவிப்புகளை அடுத்து, `மத்திய அரசு நடத்தும் கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் மூன்றாவது மொழிப்பாடமாக ஜெர்மன் இருந்தது நீக்கப்பட்டு, சமஸ்கிருதம் கொண்டுவரப்படும்’ என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவித்தார்.

இவையெல்லாம் சமஸ்கிருதம் என்ற தொன்மையான மொழியைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் என்று மட்டுமே புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில் சமீபத்தில் ஸ்மிருதி இரானி ‘வேதிக் போர்டு’ என்ற அமைப்பு உருவாக்கப்படும் என்றும் இதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு வேதக்கல்வி கற்றுத்தரப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். இன்னமும் சமஸ்கிருதத்தை வளர்ந்துவரும் அறிவியல் சூழலுக்கு ஏற்ப நவீனப்படுத்துவது போன்ற பணிகளில் மத்திய அரசு கவனம் செலுத்தவோ, அதற்காக நிதி ஒதுக்கவோ தயார் இல்லை. சமஸ்கிருத மொழியை வளர்ப்பது என்பதையும் தாண்டி தங்கள் அரசியல் கலாசார அடிப்படைகளான வைதீகக் கருத்துகளைக் கல்வியின் மூலம் புகுத்துவதையே மத்திய அரசு நோக்கமாக வைத்திருக்கிறது என்பதுதான் ஐயத்தைக் கிளப்புகிறது. ஏனெனில், தமிழகத்தில் எழுந்த இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது வெறுமனே மொழியுணர்வு சார்ந்தது மட்டும் இல்லை, ஏற்றத்தாழ்வுகளை வலியுறுத்தும் வைதீகக் கருத்துகளுக்கு எதிரான எதிர்ப்புஉணர்வும்கூடத்தான். அதனால்தான் ‘மொழிப்போராட்டத்தைக் கலாசாரப் போராட்டத்தின் ஒரு பகுதி’ என்றார் பெரியார்.

மேலும் பல ஆண்டுகளாகவே ‘தமிழைவிட சமஸ்கிருதம்தான் தொன்மையான மொழி. தமிழ்மொழியின் எழுத்து வடிவம், இலக்கண, இலக்கியங்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்தே உருவாகின’ என்கிற கருத்து தொடர்ந்து பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டுத் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் நாகசாமி எழுதிய ‘மிரர் ஆஃப் தமிழ் அண்ட் சமஸ்கிருதம்’ என்ற நூலும் இதே கருத்தை முன்வைத்தபோது, ஆய்வாளர் பொ.வேல்சாமி அதை விரிவான ஆதாரங்களுடன் மறுத்து எழுதியிருக்கிறார். ‘இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் குறிப்பிடும்படியாக இருந்த மொழிகள் தமிழ், பாலி, பிராகிருதம் மூன்று மட்டும்தான்’ என்று குறிப்பிடும் பொ.வேல்சாமி இந்த மொழிகள் பிராமி எழுத்து வடிவத்தில் எழுதப்பட்டதைச் சுட்டிக்காட்டுகிறார். ‘பிராமி எழுத்து வடிவத்தில் எழுதப்பட்ட சமஸ்கிருதக் கல்வெட்டு கி.பி. 2-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் கிடைக்கிறது. இதை எழுதியவர் குஜராத்தைச் சேர்ந்த அரசன் ருத்ரதாமன். ஆனால், அந்தக் கல்வெட்டின் காலத்துக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மொழியில் எழுதப்பட்ட பிராமி குறியீடுகள் பானை ஓடுகளிலும் மலைப்பாறைகளிலும் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன’ என்று சுட்டிக்காட்டுகிறார். கி.பி.5-ம் நூற்றாண்டில் தமிழுக்கு வட்டெழுத்து என்ற எழுத்து வடிவமும் சமஸ்கிருதத்துக்கு கிரந்தம் என்ற எழுத்து வடிவமும் உருவாக்கப்பட்டன என்று சொல்லும் பொ.வேல்சாமி சமஸ்கிருதத்துக்கான எழுத்து வடிவமான கிரந்தமும் தமிழகத்தில்தான் உருவாக்கப்பட்டது என்பதையும் ஆதாரங்களுடன் விளக்குகிறார். (`வரலாறு என்ற கற்பிதம்’ நூல் பக் 60 - 74) சமஸ்கிருதத்தைவிட தமிழ் தொன்மையான மொழி என்பதற்கும் செழுமையான மொழி என்பதற்கும் ஏராளமான ஆதாரங்கள் இருந்தாலும் ஆங்கில ஆய்வுகள் மூலம் சமஸ்கிருதமே மீண்டும் மீண்டும் தொன்மையான மொழியாகக் கட்டமைக்கப்படுகிறது. எனவே, இத்தகைய அரசியல் நோக்கங்களை எதிர்க்கக்கூடிய வரலாற்றுக் கடமை தமிழர்களுக்கு உண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick