மனுஷ்ய புத்திரனின் பைத்திய நிலவுகள் - சாரு நிவேதிதா

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படங்கள் : பிரபு காளிதாஸ்

ருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம்... குற்றாலம் கவிதைப் பட்டறையில் நானும் நண்பர்களும் அருவியில் குளித்துவிட்டு காட்டு பங்களாவை நோக்கி வந்தோம்.  அடர்த்தியான காடு.  பங்களாவில் அமர்ந்து கொஞ்சம் குடித்துவிட்டு எங்கள் அறைகளுக்குத் திரும்பலாம் என்பது திட்டம். காட்டில் கும்மிருட்டு. தூரத்தில் பங்களா வெளிச்சம்.  கிட்டத்தில் போனால் தன்னந்தனியனாக சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் மனுஷ்ய புத்திரன்.  மாலை ஆறு மணியிலிருந்து அப்படி உட்கார்ந்திருக்கிறாராம். நாங்கள் போனபோது மணி பத்து. `இதோ வந்து அழைத்துப்போகிறோம்’ என்று சொல்லிச் சென்ற நண்பர்கள் மட்டையாகிவிட்டார்கள்போல. பிறகு நாங்கள்தான் அவர் தங்கியிருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றோம். அதுதான் மனுஷுடனான என் முதல் சந்திப்பு. 

அவர் கவிதைகள் எனக்குப் பிடிக்குமே தவிர, அவர் சுந்தர ராமசாமி பள்ளி என்பதால் அதிகம் நெருங்கியது இல்லை. 

பிறகு சில ஆண்டுகள் சென்று அவர் சென்னைக்கு வந்தபோது, அவரை ரயில் நிலையத்துக்குப் போய் சந்தித்த ஒரே எழுத்தாளன் நான்தான்.  (என் வாழ்வில் யாரையுமே நான் ரயில் நிலையம் சென்று வரவேற்றது இல்லை.) பிறகு, `உயிர்மை’  தொடங்கினார். `உயிர்மை’யின் முதல் இதழிலிருந்து ஒவ்வொரு மாதமும் பத்து ஆண்டுகள் எழுதினேன். அந்தப் பத்து ஆண்டுகளும் அவரை நான் சந்திக்காத நாள்... அவரோ, நானோ வெளியூர் சென்றிருக்கும் நாளாகத்தான் இருக்கும். பேச்சு... பேச்சு... பேச்சு. மாதத்தில் ஒருநாள் குடிப்போம்.  ஆனால், மனுஷுடன் குடிப்பது மிகவும் சலிப்பூட்டுகின்ற காரியம். உடல்நலம் பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் கண்ட இடங்களில் இருந்தும் சிக்கன், பஜ்ஜிகளை வாங்கிவரச் சொல்வார். எண்ணெய் சொட்டும் அந்த பஜ்ஜிகளைக் கொஞ்சமாக எடுத்துச் சாப்பிடுவேன். அதைவிடக் கொடுமையான சமாசாரம், ஒரு பெக்கை ஒன்றரை மணி நேரம் குடிப்பார். செஷன் நான்கு மணி நேரம் போனால், அவர் குடித்தது ஒன்றரை பெக்காக இருக்கும்.  அவர் போதையாகி நான் பார்த்ததே கிடையாது; ஒரே ஒருமுறை பார்க் ஷெரட்டனில் வைத்து ஆறு பெக் ஆகிவிட்டது. அன்று அவர் சொன்ன விஷயங்களை வெளியே சொன்னால், என் தலை உடம்பில் இருக்காது. 

மனுஷ்யபுத்திரன் படுகெட்டி, தந்திரசாலி என்றெல்லாம் பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதெல்லாம் தப்பு. ஒரு குழந்தையை ஏமாற்றுவதுபோல் அவரை ஏமாற்றிவிடலாம்.  ஒருநாள் அவரும் நானும் நண்பர் மனோஜும் அவருடைய அறையில் பேசிக்கொண்டிருந்தோம். `குடிக்கலாமா... என்னிடம் ஒரு அப்ஸலூட் வோட்கா இருக்கிறது’ என்றார் மனுஷ். சற்றும் யோசிக்காமல், `சரி’ என்றேன்.  (அப்போதெல்லாம் அப்படித்தான்!) ஒரு பெக் ஆயிற்று.  எறும்பு கடித்த மாதிரிகூட இல்லை.  இரண்டாவது பெக்கும் ஆயிற்று.  ஒன்றுமே இல்லை. `ஓ, மொடாக்குடியனாகி விட்டோம் போலிருக்கிறதே, ஒன்றுமே தெரியவில்லையே’ என்று லேசாக மனோஜிடம் கேட்டேன். `ஆமாம்’ என்றார் அவரும்.  மனுஷும் அதையே சொன்னார்.  உடனே தண்ணீர் கலக்காமல் குடித்தோம்.  பிறகுதான் தெரிந்தது, அவருடைய உதவியாளர் யாரோ (ஒருவரோ இருவரோ) போத்தலில் இருந்த வோட்காவைக் காலி செய்துவிட்டு அதில் தண்ணீரை நிரப்பி, மூடிவைத்துவிட்டார்கள் என்பது. பிறகு சில தினங்கள் சென்று, `அந்த நபர்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டீர்களா?’ என்று கோபத்துடன் கேட்டதற்கு, `அட நீங்க வேற, பாவம், அவங்கதான் என்னா பண்ணுவாய்ங்க?’ என்றார் சிரித்துக்கொண்டே.

இடையில் மனுஷின் கவிதைகள் பற்றி ஏராளமாக எழுதினேன். என் அளவுக்கு அவர் கவிதைகளைக் கொண்டாடியவர் யாரும் கிடையாது. அதைவிட முக்கியம், என்னுடைய `காமரூப கதைகள்’ நாவலில் அவர் இரண்டு மூன்று பெயர்களில் நாவல் முழுவதுமே வருகிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick