அகஉலகின் காட்சிமொழிக் கலைஞன்! - ராஜ்மோகன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ரிதுபர்னோ கோஷ் (1963-2013)

றுபதைக் கடந்த பிரபல இயக்குநர் அவர்.  தனது படைப்புகளில் தன்னை எந்த விதத்திலும் சமரசம் செய்துகொள்ளாதவர். கதை சொல்லும் உத்தியில் புதிய பாணியைக் கையாளுபவர். இவர் இயக்குகிறார் என்றால், அந்தப் படங்களுக்கு தேசிய அளவிலும் உலக அளவிலும் விருதுகள் நிச்சயம். அன்பான மனைவி. அறிவும் பண்பும் ஒருங்கிணைந்த மகன். தலைமுறையின் அடுத்த வாரிசைச் சுமந்தபடி அழகான மருமகள். மகிழ்ச்சியான வாழ்க்கை. திடீரென இயக்குநரின் வாழ்வில் நுழைகிறார் ஓர் இளம்பெண்.

இரவு உணவுக்கு குடும்பத்தோடு அமரும் போதெல்லாம் தொலைபேசி அழைப்பு வருகிறது. இயக்குநர் குற்றஉணர்வுடன் மகனையும் மனைவியையும் பார்க்கிறார். பதிலளிக்க மெளனமாக எழுந்து போகிறார். வயதான மனைவி, பொங்கும் உணர்ச்சிப்பெருக்குடன் மகனைப் பார்க்கிறார். தாயைப் பார்ப்பதா... தந்தையைக் கேட்பதா? மகனுக்கோ தர்மசங்கடம்.

இயக்குநரின் மனம் கவர்ந்த அந்தப் பெண், மகனின் வயதுடையவர். இயக்குநரின் படத்தில் நாயகியாக நுழையும் அவள், இயக்குநரின் மனதினுள்ளும் ஊடுருவிவிடுகிறாள். இதுவரை அமைதியாகச் சென்றுகொண்டிருந்த அவர்களின் வாழ்க்கையில் இனி என்ன நிகழும்... இன்னும் சில நாட்களில் பேரப்பிள்ளையைப் பார்க்கப்போகும் இந்த வயதான காலத்தில்?

இந்தக் கதையைப் படிக்கும்போது நம் ஊரில் சில இயக்குநர்களின் கதை நினைவுக்கு வருகிறதா? இது, வங்காள மொழியில் பிரபல இயக்குநர் ரிதுபர்னோ கோஷ் இயக்கத்தில் 2010-ம் ஆண்டில் வெளிவந்த `அபோஹோமான்’ படத்தின் கதை.

இந்தப் படத்தைப் பார்க்கும் அத்தனை மாநிலத்தவர்க்கும் அவர்களுக்குத் தெரிந்த ஒருவரை ஒப்பிட்டுப்பார்க்கும் மனோபாவம் எழும். இது வங்காள மொழியில் வெளியானபோது, `சத்யஜித் ரேவுக்கும் வங்காள நடிகை மாதாபி முகர்ஜிக்குமான உறவைப் பேசுகிறது’ என்று அங்கேயும் கிசுகிசுத்தார்கள்.

கதையை ஒரு நேர்கோட்டில் படிக்கும்போது மிகமிகச் சாதாரணமாகத் தோன்றும். சின்ன ஃப்ளாஷ்பேக்குகள், புதிய கதைசொல்லல் உத்திகள் மூலம் இதை ஓர் உலகத்தரமான படைப்பாக மாற்றியிருப்பார் கோஷ்.

ரிதுபர்னோ கோஷ், வங்காள மொழியில் ஒரு புது அலை இயக்குநர். சத்யஜித் ரேவுக்குப் பின்னரான வங்கமொழி சினிமாவில் புது முத்திரை பதித்தவர். மனித உணர்வுகளைத் திரையில் நுணுக்கமாகக் கையாளுவதில் முடிசூடா மன்னர் சத்யஜித் ரே. வங்காளத் திரையுலகில் ரேயைத் தொடர்ந்து மனித உறவுகளின் வினோதங்களையும் உணர்வுகளையும்  வாழ்வியலுக்கு மிக நெருக்கமாக விவரித்த ஒரே இயக்குநர் ரிதுபர்னோ கோஷ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick