தமிழ்நாட்டின் டப்ளின் திருவண்ணாமலை - பவா செல்லதுரை | Essays - Thiruvannamalai - TN's Dublin - Bava Chelladurai - Vikatan Thadam | விகடன் தடம்

தமிழ்நாட்டின் டப்ளின் திருவண்ணாமலை - பவா செல்லதுரை

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படம் : நோயல் கார்க்கி

ட்டக்களத்தை விட்டகன்று, வெகுதூரம் விலகிவந்து, வெற்று மைதானத்தை வெறித்துப் பார்க்கும் ஆட்டக்காரனுக்கு மட்டுமே பழைய நினைவுகள் அலை மாதிரி மேலெழுந்து வந்து அவனை அலைக்கழிக்கும்.

நான் என் காலடியில் ஸ்பரிசத்திலிருக்கும் பந்தோடேயே, என் மைதானம் புதைத்து வைத்துள்ள நினைவுகளை மீட்டெடுக்கிறேன். காலமோ, வருடமோ, தேதியோ ஒருபோதும் ஒரு கலைஞனின் நினைவுகளில் தங்குவது இல்லை. எம்.டி.வாசுதேவன் நாயர் தன் ‘இறுதி யாத்திரை’ நாவலில்  “வியாபாரிக்கு வெறும் எண்கள் போதும், எழுத்து எதற்கு?” எனக் கேட்டு, என்னைப் புரட்டிப்போட்டிருக்கிறார்.

80-களின் பிற்பகுதிகள்தான்  தமிழ் இலக்கியம் உச்சத்துக்குச் சென்ற காலம் என்பது என் கணிப்பு. தமிழகத்தின் சகல திசைகளிலிருந்தும் எழுத்தாளர்களும், கவிஞர்களும், கலைஞர்களும் பெரும் உக்கிரத்தோடு இயங்கிய நாட்கள் அவை. என்னைப்போல கல்லூரியில் படித்து முடித்தும் வேலையற்றவர்களாக அலைந்தும் திரிந்தும் நாட்களை நகர்த்திய பலரையும் மனப்பிறழ் வாளர்களாக மாற்றாமல் காப்பாற்றியது, அப்போது சிறு பத்திரிகைகளில் வெளிவந்த காத்திரமான படைப்புகள் மாத்திரமே.

‘புது யுகம் பிறக்கிறது’ என்ற சிறு பத்திரிகையில் வந்த பாதசாரியின் ‘காசி’ இன்றளவும் என்னைப் பிறாண்டுகிறான். கோவை ஞானியின் ‘நிகழ்’, எஸ்.வி.ஆரின் ‘இனி இன்று’ எல்லாம் அப்போது தமிழுக்குக் கிடைத்த பொக்கிஷங்கள்.

இவை எங்களுக்குள் ஏற்படுத்திய பேரலைகள் அடங்காதவை. அதை எங்கள் சக மனிதர்களுக்கு எப்படியாவது கடத்திவிட வேண்டுமென்ற எங்கள் யத்தனிப்பே, திருவண்ணாமலையில் நாங்கள் தொடங்கிய ‘கலை இலக்கிய இரவு’ என்ற சிறு முயற்சி.

எல்லாப் பெரும் நிகழ்வுகளும் வரலாறும் இப்படி ஏதோ ஒரு மூலையில் உருவான சிறு பொறி மட்டுமே. 

ஒரு திருமண மண்டபத்தில் ஐநூறுக்கும் குறைவானவர்களோடு ஆரம்பித்தது எங்கள் முதல் கலை இரவு. ஐந்தடிக்கும் குறைவான உயரமேயுடைய ஓர் ஆய்வு மாணவனாக கே.ஏ.குணசேகரன் என்ற பாடகனின் பாடல்கள், பலநூறு மனிதர்களை உள்ளிழுத்து வந்தது. கையில் ஓர் உடுக்கையோடு அவன் எழுப்பிய உணர்வுப் பெருக்கில் அம்மண்டபம் தளும்பியது.

கொண்டாட்டமும் இசையும் நிரம்பிய அந்த இரவில்தான், எங்கள் அடுத்த நிகழ்வுக்கான நிகழ்விடம் நான்கு பக்கமும் சுவர் எழுப்பப்பட்ட ஒரு மண்டபம் அல்ல என்றும், அது ஒரு திறந்தவெளி மைதானமாக பல ஆயிரம் மனிதர்களை சங்கமிக்கவைக்கும் அதன் நீளமும் அகலமும் அளவிட முடியாததாக இருக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick