"திராவிட இயக்கங்களைக் கலைத்துவிடலாம்!”

சந்திப்பு: தமிழ்மகன், இளங்கோ கிருஷ்ணன் படங்கள் : கே.ராஜசேகரன்நேர்காணல் தொ.பரமசிவன்

தொ.பரமசிவன். தமிழ்ப் பண்பாட்டியலின் ஆய்வு முகம். ஆய்வாளர்கள் புத்தகங்களுக்குள் முகம்புதைத்து ஆய்வுசெய்து வந்த காலகட்டத்தில், ஆய்வு என்பது மக்களின் வாழ்வில் இருந்தும் பேச்சில் இருந்தும் பெறப்படவேண்டியது எனத் தெருவில் இறங்கியவர். கடந்த 40 வருடங்களாக, தமிழ் அறிவுச்சூழலுக்கு தொ.ப., அளித்த பங்களிப்புகள் சமகால சரித்திரம். மனிதருடன் உரையாடுவதே ஓர் அலாதியான அனுபவம். ஒரு குதிரைவீரனைப்போல விசைகொண்டு பயணித்தபடி செல்லும் பேச்சில், பண்பாட்டு அவதானங்கள் சட்டென மின்னலடிக்கும். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள், தமிழக வரலாறு, அரசியல், மதம், பண்பாடு என நீண்ட ஒரு மாலை நேரத்தில், பாளையங்கோட்டையில் அவரைச் சந்தித்து உரையாடியதில் இருந்து...

“உங்கள் குடும்பம், நீங்கள் பிறந்து வளர்ந்த சூழல் பற்றிச் சொல்லுங்கள்?”

‘‘நான் இதே தெருவிலேதான் பிறந்து வளர்ந்தேன். பத்து தலைமுறைகளாக என் முன்னோர் இதே இடத்திலேதான் வாழ்ந்து வந்தார்கள். நான் என் வீட்டின் மூலப்பத்திரத்தின் அடிப்படையிலேயே 10 தலைமுறைகள் என்று சொல்கிறேன். நான் வசிக்கும் இந்தப் பகுதிதான் நகரின் மையப் பகுதி. பாளையங்கோட்டை, ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கோட்டை நகரம். என் தாய்-தந்தை படிக்காதவர்கள். தந்தைக்கு கையெழுத்து மட்டும் போடத் தெரியும். பிற்பட்ட வகுப்பு, அதற்கு ஏற்ற சகல பலவீனங்களும் என் வீட்டில் இருந்தன. நான்தான் என் வீட்டின் முதல் பட்டதாரி.”

“உங்கள் கல்லூரிக்கால நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?”

“நான் படித்த காலம் என்பது தமிழகத்தில் அரசியல் கொந்தளிப்புகள் இருந்த காலம். காங்கிரஸ் என்ற ஆலமரம் மெள்ள சரிந்துகொண்டிருந்த காலமாகவும், தி.மு.க என்ற திராவிட இயக்கத்தின் அமைப்பு வளர்ந்துகொண்டிருந்த காலமாகவும் இருந்தது. அப்போது இருந்த மாணவர்களில் பெரும்பகுதி தி.மு.க-காரர்களாகவும், சிலர் காங்கிரஸ்காரர்களாகவும், வெகுசிலர் இந்திய கம்யூனிஸ்ட்காரர்களாகவும் இருந்தார்கள். அப்போது இருந்த அரசியல் சூழலால் எங்களுக்கு தினமும் உரையாடவும் சண்டையிடவும் விவாதிக்கவும் ஆனந்த விகடனிலும் குமுதத்திலும் துக்ளக்கிலும் செய்திகள் இருந்தன. நாங்கள் அனைவருமே அதில் அவரவர்க்கு என ஒரு தரப்பை எடுத்துக்கொண்டு விவாதித்தோம். அந்த விவாதங்கள் என்னை ஒரு பொறுப்புள்ள சமூக மனிதனாக மாற்றின. நான் ஒரு பெரியாரிஸ்ட்டாக, திராவிட இயக்கத்தவனாக மாற அந்த விவாதங்களும் பயன்பட்டன.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick