போகன் சங்கர் கவிதைகள் | Poetry - Bogan Sankar - Vikatan Thadam | விகடன் தடம்

போகன் சங்கர் கவிதைகள்

ஓவியம் : ரமணன்

வர்கள் என்னை மெல்ல ஒரு பகா எண்ணாக மாற்றினார்கள்
அவர்கள் என்னை வேறொரு கிரகத்தின் வட்டப்பாதையில் பிணைத்தார்கள்
அவர்கள் என் மனைவியின் கண்களின் நிறத்தை மாற்றினார்கள்
அவளது காம்புகள் உறைந்து கல்போல் ஆகிவிட்டன
அவர்கள் என் தகப்பனுக்கும் எனக்கும் என் மகனுக்கும் வெவ்வேறு இடங்களில்
நிலமளித்தார்கள்

நான் சர்வதேச விமான நிலையங்களில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தேன்
இப்போது எனக்கு ஒவ்வொரு நாட்டின் விமானசேவைக் குறியீடும் தெரியும்
பாலித்தீன் பைகளில் உறையவைக்கப்பட்ட உணவுகளை உண்ணத் தெரியும்
நான் என் காதலிகளைக் கண்ணாடிச் சுவருக்கு மறுபுறம் வளர்த்தேன்
என் உறக்கத்தைக் கழிவறைகளில் வைத்துக்கொண்டேன்
என் கவிதைகள் சுவர் வாசகமாகிப்போயின
எனது பிரிய விலங்கின் பெயர் எனக்கு மறந்துபோனது
என்னை மூன்று நாடுகள் மறுதலித்தன
நான்காவது நாட்டில் குளிர் அதிகம் இருந்தது
அங்கு எனக்கு வினோத நோய்கள் வந்தன
நான் எல்லா வரிசைகளிலும் நீண்ட நேரம் நின்றேன்
நான் நின்ற எல்லா வரிசைகளுமே நீண்டவை
நான் நிற்கும்போதே கடிதம் எழுதப் பழகிக்கொண்டேன்
மண்டியிடவேண்டிய இடங்கள் / தருணங்கள் எவை என்று காணப் பழகிக்கொண்டேன்

நேரம் முக்கியமானது
ஓர் இனப்படுகொலைக்குத் தப்பும்போது அது இன்னும் முக்கியமானதாக மாறிவிடுகிறது
இங்கு வந்தவுடன் நான் இந்த மொழியில் மூன்று வார்த்தைகளை வேகமாகக் கற்றுக்கொண்டேன்
அகதி
குடியுரிமை
carbamazepine.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick