பேனாப்டிகன் அடைப்பிடத்திலிருந்து... - ஸ்ரீஷங்கர்

ஓவியம் : ரமணன்

ணிவற்றவர்களுக்கான அடைப்பிடத்தின்
உள் வட்டப் பாதையில்
கழியுடன் நிற்கும் அதிகாரியின் கண்கள்
அவனை ஊடுருவிப் படியெடுக்கின்றன
மென்வெக்கை பரவும் காற்றில் இலைகள் சலசலக்க
வரிசையில் அமர்ந்திருக்கும்
சகவாசிகளின் உட்கிடக்கைகள் முடக்கப்படுகின்றன
ஒழுங்கில் வழங்கும் உணவை மறுப்பதும்
விழிப்பில் இரவுகளுடன் அமர்ந்திருப்பதும்
அவனிடம் அணில்கள் உரையாடுவதையும்
எழுதுவதை
மேலும்
முதியமரங்களின் உச்சிகளைக் காண்பது போன்றதான
பணிவற்ற நடத்தைகளைப் பட்டியலிட்டு
இனி மீறும்போது
மறைந்திருக்கும் உன் மூவனின் புதைபடிவத்தை
அழித்தொழிப்பேன் உன்னிலிருந்து என்று
எச்சரிக்கிறார்
இமைத்திராத அவர் கண்களின்
மீச்சிறு அசைவில் அங்கிருந்து நகர்கிறான்
யாவும் பின்
தம் சுவாசித்தலுக்குத் திரும்புகின்றன.


(பேனாப்டிகன் (Panopticon): கைதிகள் முற்றிலும் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படும் வட்ட வடிவச் சிறை).
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick