தங்கை பிடித்த முயல் - சபரிநாதன்

கைக்குழந்தையாக என் தங்கை ஓயாமல் சிறுநீர் கழிப்பாள்
பள்ளிக்கூடத்தில் அவளது ஷு லேஸ்கள் சும்மா சும்மா அவிழும்
ஒவ்வொரு முறையும் நான்தான் முடிச்சிட வேண்டும்
அவளது வீட்டுப்பாடக் கணக்குகளுக்கு குடும்பமே சேர்ந்து விடைதேட வேண்டும்
குறைந்தது மூன்று அலைபேசிகளையாவது பயன்படுத்தினாள்
முகநூலில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் கொண்ட அவள்
முப்பத்தைந்து மதிப்பெண் வாங்குவதற்காக
நான்கைந்து டுடோரியல் ஏறி இறங்கினாள்
அவ்வப்போது பரிசுப்பொருட்களைப் போட்டு உடைப்பாள்
பின்னர் கண்ணைத் துடைத்தவாறு சொல்லுவாள்
‘எனக்கான ஒருவன் எங்கோ பிறந்திருக்கிறான்’
அவளுக்கு உடனேயே வேலை கிடைத்தது ஒரு பண்பலை நிலையத்தில்
ஒருவழியாக அன்று வீட்டிற்கு ஒரு கட்டழகனைக் கூட்டிவந்திருந்தாள்
படியத் தலைவாரியிருந்த அவன் சாப்பிடும்போது பேசவே இல்லை
தண்ணீர் அருந்தவில்லை
அவன் தட்டை அப்புறப்படுத்திய அம்மா கண்களால் சுட்டிக் காட்டினாள்
ஒரு பருக்கைகூட சிந்தியிருக்கவில்லை
அப்பா சத்தம்போட்டு சிரித்தார்.
நான் அவனது தோளைத் தட்டிக்கொடுத்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick