சிறுகதையின் வழிகள் - தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு - ஜெயமோகன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கட்டுரை

`ஒரு பண்பாட்டுச் சூழலில், குறிப்பிட்ட இலக்கிய வடிவம் ஏன் உருவாகிறது?’ என்ற வினா, அவ்வடிவத்தில் எழுதப்படும் அனைத்துப் படைப்புகளையும் புரிந்துகொள்வதற்கான முதல் திறவுகோலாக அமைய முடியும். உதாரணமாக, பெரும்பாலான நாட்டுப்புறப் பாடல்கள் ஏதேனும் தொழிலுடன் இணைந்ததாக உள்ளன. அத்தொழிலின் இயல்புக்கேற்ப அவற்றின் வடிவம் அமைந்துள்ளது. ஆகவே, கணிசமான நாட்டுப்புறப் பாடல்கள் ஒன்றிலிருந்து ஒன்று தொற்றி ஏறுவனவாகவும், எத்தனை நேரம் வேண்டுமென்றாலும் ஒரு குறிப்பிட்ட கருவை நீட்டிக்கொண்டு போகும் தன்மைகொண்டதாகவும் உள்ளன. அவற்றுக்கேற்ப சுழன்றுவரும் சொல்லாட்சியோ அல்லது உரையாடல் அமைப்போ அவற்றுக்குள்ளது.

பின்னர், சங்கப் பாடல்கள் போன்ற செவ்வியல் வடிவங்கள் உருவாகிவந்தபோது, அவை நிகழ்த்துக்கலைகளின் ஒலி வடிவமாக இருந்தன. சங்கப் பாடல்களில் உள்ள செறிவான மொழியமைப்பும், நுட்பமாகக் குறிப்புணர்த்தும் தன்மையும் ஓர் அரங்கில் பாணனும் விறலியும் நடித்து, தங்கள் கற்பனை மூலம் பலவாறாக விரித்தெடுப்பதற்குரியவை. இன்றுகூட கதகளி போன்ற செவ்வியல் கலை வடிவத்தில், அவற்றின் வரிவடிவப் பாடல்கள் மிகச் சுருக்கமானவையாகவும் நடிகனின் மனோதர்மத்தைக் கோரி நிற்பவையாகவும் இருப்பதைக் காணலாம். பின்னர் எழுதி வாசிக்கப்படும் வடிவம் வந்தபோது, நான்கு நான்கு வரிகளாக அமைந்த செய்யுட்கள் உருவாகிவந்தன. 

காப்பியம் என்னும் இலக்கிய வடிவம், சமூக உருவாக்கத்தின் ஒரு வளர்ச்சிக் காலகட்டத்தில் உருவாகிவந்தது. ஒரு சமுதாயம் தன்னுடைய பல்வேறு பண்பாட்டுக்கூறுகளை வளர்த்தெடுத்த பின், அவற்றை ஒன்றுடன் ஒன்று பின்னி முடைந்து ஒற்றைப் பெரும் பண்பாட்டு வெளியாக ஆகும்போது, அவற்றுக்கு காப்பியம் தேவைப்படுகிறது. பெருங்காப்பியங்கள் என்பவை, முதன்மைக் குணமாக தொகுப்புத்தன்மை கொண்டவை. உதாரணமாக, `சிலப்பதிகாரம்’ போன்ற மிகச்சிறிய காப்பியத்திற்குள்ளாகவே `வேட்டுவவரி’, `கானல்வரி’ போன்ற வெவ்வேறு நிலப் பகுதிகளின் பாடல்களும் அவற்றை இணைக்கும் பொதுவானதொரு கதைப்போக்கும் இருப்பதைக் காணலாம்.

நவீன இலக்கியம் தோன்றியபோது, அதனுடன் இணைந்து உருவாகிவந்த ஒரு வடிவம் சிறுகதை. சிறிய கதைக்கும் சிறுகதைக்கும் அடிப்படையில் உள்ள வேறுபாடு, இலக்கிய வாசகன் அறிந்ததே. பண்பாட்டில் என்றும் இருப்பது சிறிய கதை என்னும் வடிவம். நீதிக்கதை, தேவதைக்
கதை எனப் பல வடிவங்கள் அதனுள் உள்ளன. அவை ஒரு மையத்தை வலியுறுத்தும் கதை வடிவுகள். சிறுகதை என்பது அம்மையத்தில் ஒரு திருப்பத்தை, ஒரு முடிச்சை முன்வைக்கும் வடிவமாக உருவாகிவந்தது. எட்கர் ஆலன் போ,  ஓ.ஹென்றி போன்ற முன்னோடிகளால் வேடிக்கையும் வியப்பும் ஊட்டும் வாசக அனுபவத்துக்காக உருவாகி வந்த அக்கலை வடிவம், மிகச்சில ஆண்டுகளிலேயே உலகளாவிய செல்வாக்குப் பெற்றது.

`எந்த ஒரு கலை வடிவமும் அது உருவான முதல் தலைமுறையிலேயே, அதன் மிகச்சிறந்த செவ்வியல் படைப்புகளை அடைந்துவிடும்’ என்று ஒரு கூற்று உண்டு. காவியங்களோ, ஓபராவோ, சிம்பனியோ... அனைத்தும் இதையே காட்டுகின்றன; திரைப்படம்கூட. சிறுகதையும் விதிவிலக்
கல்ல. இன்றும் சிறுகதையின் பெரும் படைப்புகளாகக் கருதப்படுபவை செக்காவ், மாப்பசான் போன்ற முன்னோடிகளால், சிறுகதை என்ற வடிவம் உருவான ஆரம்பகாலத்திலேயே உருவாக்கப்பட்ட படைப்புகள்தான்.

சிறுகதை என்னும் வடிவம் ஏன் உருவானது, ஏன் அது உலகளாவ இத்தனை செல்வாக்கு அடைந்து இன்றும் நீடிக்கிறது? அது வியப்புக்கும் வேடிக்கைக்கும் உரிய வடிவமாக முதலில் ஏன் அமைந்தது? முன்னரே இலக்கிய வாசகன் கதை என்னும் வடிவுக்குப் பழகியிருக்கிறான். ஒரு களத்தில் ஒரு நிகழ்வுத் தொடர் ஒரு சில கதாபாத்திரங்களைக்கொண்டு தொடங்கும் என்றால், அது எதைச் சொல்லி எவ்வண்ணம் முடியும் என்று ஒரு கணிப்பு அவனுக்கு இருந்தது. பெரு விருந்துகளுக்குப் பிறகு அரட்டைகளிலும், நூல் வாசிப்பு அரங்குகளிலும் கூடிய பெரும்பாலான வாசகர்கள், அத்தகைய கதைகளை, கூடவே பயணம் செய்து ஆசிரியன் முடிக்கும் முன்பே தாங்கள் முடித்துவிடும் பழக்கம் கொண்டிருந்தனர்.

அவர்களிடம் ஓர் ஆர்வமூட்டும் விளையாட்டை ஆசிரியன் ஆடத் தொடங்கியபோது, சிறுகதை உருவாகியது. வாசகனின் எதிர்பார்ப்பை, ஊகத்தை முறியடித்து, முற்றிலும் எதிர்பாராத இடத்துக்குக் கதையை ஆசிரியன் கொண்டு செல்லும்போது அவர்கள் திகைத்து, பின் மகிழ்கிறார்கள். கிட்டத்தட்ட மூன்று சீட்டு விளையாட்டுதான். நீங்கள் கைவைக்கும் இடத்தில் ஆடுதன் இருக்காது, ஏஸ் இருக்கும். இத்தனை சோதனைகளுக்குப் பிறகும் சிறுகதையின் இந்த அடிப்படை வடிவம் மாறவே இல்லை.

வேடிக்கைக்காக உருவாக்கப்பட்ட இந்த வடிவம் இரண்டு அம்சங்கள் கொண்டது. ஒன்று, அதில் ஆசிரியனுக்கும் வாசகனுக்குமான ஓர் உரையாடல் உள்ளது. ஆசிரியன், வாசகனிடம் விளையாடுகிறான். ஆசிரியன் விட்ட இடைவெளியை வாசகன் நிரப்புகிறான். வாசகனின் கற்பனையை ஆசிரியன் தாண்டிச் செல்கிறான். அங்கு ஆசிரியன் நின்றுவிட்ட இடத்தில் இருந்து மீண்டும் வாசகன் மேலே செல்கிறான். சிறுகதையின் அடிப்படை இயல்புகளில் ஒன்று இந்த ஆடல். எவ்வகையிலேனும் இந்த ஆடல் நிகழாத ஒன்று, ஒருபோதும் சிறுகதையாவது இல்லை.

இரண்டாவதாக, சிறுகதை எப்போதும் முரண்பாட்டைச் சொல்கிறது. அதன் இறுதித் திருப்பம் காரணமாகவே, அது ஒரு களத்தில் நிகழக்கூடும் என எவரும் நினைக்காத ஒன்றைப் புதிதாகச் சொன்னது. அனைவரும் நம்பிய ஒன்றை மாற்றியமைத்தது. வழிவழி வந்தவற்றை மறுத்துப் பேசியது. ஆகவே, புனைவு விளையாட்டாகத் தொடங்கிய சிறுகதை வடிவம், மிக விரைவிலேயே சமூகத்தின், வாழ்க்கையின், தத்துவ தரிசனத்தின் அடிப்படை முரண்பாடுகளைச் சொல்வதற்கு உகந்த வடிவம் என்று கண்டடையப்பட்டது. ஆகவேதான், ஒரு கதையாடல் என்னும் இடத்தில் இருந்து, இலக்கியப் பிரதி என்னும் கௌரவத்தை அது அடைந்தது. எட்கர் ஆலன் போவிலும் ஓ.ஹென்றியிலும் வெறும் கேளிக்கை வடிவமாக இருந்த சிறுகதை, செக்காவிலும் மாப்பசானிலும் இலக்கியத் தகுதி கொள்வது, முரண்பாடுகளைச் சொல்லும் கலை வடிவமாக ஆனதினால்தான்.
சிறுகதை உலகளாவப்பெற்ற பெரும் வரவேற்புக்குக் காரணமும் இவ்விரண்டும்தான். பதினேழாம் நூற்றாண்டின் இறுதியிலும் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் காலனி ஆதிக்கம் வழியாக, நவீனமயமாதல் உலகமெங்கும் சென்று சேர்ந்தது. அதன் மூன்று அடிப்படைகள் இவை. அனைவருக்குமான பொதுக்கல்வி, பொதுப்போக்குவரத்து, கூட்டு உற்பத்தியமைப்புகள். இவை ஜனநாயகத்தை உருவாக்கும் அடிப்படைகளாக அமைந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick