மாணவப் பருவம் - போராடும் காலம் - அ.முத்துக்கிருஷ்ணன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கட்டுரை

லகம் முழுவதும் மாணவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். `கல்விக் கட்டணத்தைக் குறையுங்கள்; அரசுப் பள்ளிகளுக்குப் போதிய நிதி ஒதுக்குங்கள்’ என்கிற முழக்கங் களோடு அரசுக்கு எதிரான வாசகங்களைக்கொண்ட  பதாகைகளை ஏந்திப்பிடிக்கின்றனர். இந்த மாணவர்களுக்கு, ஒரே நேரத்தில் அப்படி என்ன நெருக்கடி?

உலகமயத்தின் விளைவு இது. உலக நாடுகளில் உள்ள அரசுகளுக்கு ஒரு நெருக்கடியை, உலக முதலாளிகள் கொடுத்துவருகிறார்கள். அவர்கள் தரும் நெருக்கடி, கல்வியை ஒரு வர்த்தகப்பொருளாக அறிவிக்க வேண்டும் என்பதே. பல்கலைக்கழகங்களை, உயர் ஆய்வு நிறுவனங்களை லாபம் ஈட்டும் இடங்களாக, கல்வியை ஒரு தொழிலாக மாற்ற முயல்கிறார்கள். கல்வியைக் கடைச்சரக்காகப் பார்க்க இயலுமா? கல்வி என்பது எல்லா குடிமக்களுக்குமான அடிப்படை உரிமை அல்லவா? ஒரு நாட்டின் குடிமக்களுக்கு நல்ல கல்வி கிடைத்தால்தானே, அவர்கள் உற்பத்தியில் ஈடுபடும் ஓர் ஆரோக்கியமான மனிதவளமாக உருவெடுப்பார்கள்; ஒரு நாட்டின் பொறுப்புமிக்க பிரஜைகளாக மலர்ந்து எழுவார்கள்?

சுதந்திரம் பெற்ற பல நாடுகளில் ஜனநாயக அரசுகளின் லட்சியங்களில் ஒன்று, கல்வியைக் கடைக்கோடி மனிதரிடமும் கொண்டு சேர்ப்பதாகத்தான் இருந்தது. ஆனால்,  இன்று கல்வியின் முகம் அப்படி இல்லை. அது சாமானியர்களுக்கு எட்டாகனியாக மாறிவிட்டது. எல்லாம் இருக்கட்டும், இந்தியாவின் நிலை என்ன?

சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவில் 73 சதவிகித மக்கள் மட்டுமே கல்வியறிவு உடையவர்களாக இருக்கிறார்கள். அதிலும் ஏழைகளில் ஏழு சதவிகிதம் பேர்தான் பள்ளிப்படிப்பை முடிக்கிறார்கள். 93 சதவிகித ஏழை மாணவர்கள் வகுப்பறையை எட்டிப்பார்த்து விடுபட்டவர்களாக (Dropouts) வெளியேறி விடுகிறார்கள். இதில், இந்தியாவில் கல்வியை மொத்தச் சமூகத்துக்கும் கொண்டு சேர்ப்பதில் பெரும் தடையாக இருப்பது, சாதி. இடைநிற்றல் மாணவர்களில் பெரும் பகுதியாக இருப்பவர்கள் தலித்துகளாக, பழங்குடிகளாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

கல்விக்குப் போதிய நிதியை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்காமல், மெள்ள மெள்ள தங்கள் கடமைகளில் இருந்து விடுவித்துக் கொள்ளத் தொடங்கியிருப்பதே, இதற்கு அடிப்படைக் காரணம். நிதிப் பற்றாக்குறையை ஒரு காரணமாகக் காட்டுவது இன்றுதான் தொடங்கியதா?

ராஜாஜி முதலமைச்சராக இருந்த காலத்திலேயே நிதிப் பற்றாக்குறையைக் காரணமாகவைத்து அரசுப் பள்ளிகளை மூடுவதாக அறிவித்தார். மாணவர்கள் அரை நாள் பள்ளிக்கு வந்தால் போதும்; அரை நாள் வேலைக்குப் போகட்டும்; அவர்களது பெற்றோரின் சாதித் தொழிலைச் செய்யட்டும் என்கிற ஓர் இழிவான யோசனையை முன்வைத்தார். குலக்கல்விக் கொள்கையை எதிர்த்து தந்தை பெரியார் அன்று சட்டசபைக்கு முன்பு பெரும் போராட்டம் நடத்தினார்.

1937-ம் ஆண்டு ஏப்ரலில் இந்தியைக் கட்டாயப் பாடமாக அறிவித்தார்கள். அன்று தந்தை பெரியார், தமிழறிஞர் சோமசுந்தர பாரதியார், தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் போன்றவர்களின் தலைமையில் இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழகம் எங்கும் பெரும் போராட்டம் வெடித்தது. போராட்டத்தின் வலிமையைப் பார்த்த ராஜகோபாலாச்சாரி, இந்தித் திணிப்பு உத்தரவுகள் அனைத்தையும் ரத்துசெய்தார்.

மீண்டும், 1965 ஜனவரி 26, குடியரசு தினத்தன்று இந்தியை ஆட்சிமொழியாக அறிவிக்க முடிவு செய்தார்கள். இந்த அறிவிப்பு மீண்டும் தமிழகத்தில் ஒரு பெரும் மாணவர் எழுச்சியை ஏற்படுத்தியது. 55 நாட்கள் நடைபெற்ற மொழிப் போரின் நீட்சியாகவே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு முடிவுகட்டப்பட்டது. அன்று மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டார்கள்; தங்களின் கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுத்தார்கள், போராடினார்கள். அப்படிப் போராடியவர்களில் பலர் பின்னாட்களில் பொது வாழ்க்கையில் அடி எடுத்துவைத்தார்கள்.

உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டம்தான் தெலங்கானா தனி மாநிலமாக உருவாக ஒரு திடமான களத்தை ஏற்படுத்தியது. 2013-ம் ஆண்டில் ஈழத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும், இங்கே அதே நேரம் தமிழக மாணவர்களும் தெருக்களில் இறங்கிப் போராடினார்கள். மாணவப் பருவம்தான் ஒருவரின் வாழ்க்கைக்கான அரசியல் பாதையை, பொது விஷயங்கள் சார்ந்த புரிதலை ஏற்படுத்துகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick