புலம்பெயர் வாழ்வு - அகம் புறம் துயரம் - சயந்தன் | Life of a Eelam Refugee - Vikatan Thadam | விகடன் தடம்

புலம்பெயர் வாழ்வு - அகம் புறம் துயரம் - சயந்தன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
அனுபவம்ஓவியம் : கார்த்திகேயன் மேடி

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து முதலாவது வருடம் முடிந்திருந்தது. பனி கொட்டிக்கொண்டிருந்த ஒரு காலைப் பொழுதில், சுவற்சர்லாந்தின் சூரிச் தொடரூந்து நிலையத்தில் அந்த இரண்டு பேரையும் நான் கண்டேன். ஒருவிதப் பதற்றமான முகத்தோடு “அண்ணை... தமிழா..?” என்று என்னைக்  கேட்டார்கள். இருவருக்கும், 17, 18 வயதுகளைத் தாண்டியிருக்காத பருவம். முதுகில் ஆளுக்கொரு பையைச் சுமந்திருந்தார்கள். குளிருக்கு ஏற்ற ஆடைகளை அணிந்திருக்க வில்லை. கதைக்கும்போது நடுங்கினார்கள். “அகதிகள் முகாமுக்குச் சென்று எங்களைப் பதிவுசெய்ய வேண்டும். அங்கு செல்வதற்கு எந்தத் தொடரூந்தில் ஏற வேண்டும்?”

அவர்கள்  இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஈழத்தைவிட்டு நீங்கியிருந்தார்கள். முதலில் மேற்கு ஆப்பிரிக்காவில் ஸ்நேகல் என்ற நாட்டில் தங்கவைக்கப்பட்டார்கள். அங்கிருந்து ஐரோப்பாவுக்கு பல்வேறு பாதைகளை முகவர்கள் பரீட்சித்துப் பார்த்த போதெல்லாம் இவர்கள் பரிசோதனைக்கூட எலிகளைப் போலவாகியிருக்கிறார்கள். எல்லா வழிகளும் அவர்களுக்கு அடைக்கப் பட்டிருந்தன. கைதுசெய்யப்படுவதும், எந்தத் தேசம் என்றே தெரியாத சிறைகளில் அடைக்கப்படுவதும், தம்மை என்ன செய்யப் போகிறார்கள் என்று காத்திருப்பதுவும், மறுபடியும் ஸ்நேகலுக்கு அனுப்பிவைக்கப் படுவதுமாக, இரண்டாண்டுகளை அவர்கள் கழித்தார்கள். பிறகொருநாள் மொறோக்கோ ஊடாக இத்தாலிக்கு விமானமேறி, அங்கிருந்து ‘போர்டர் மாற்றுபவர்களால்’ சூரிச்சுக்கு வந்து சேர்ந்தார்கள். 

அகதிகள் முகாமுக்கான தொடரூந்துக்குக் காத்திருந்த அரைமணி நேரத்தில், ஸ்நேகலில்  ஒரு வீட்டில் 20 பேராக அடைப்பட்டிருந்ததைப் பற்றிப் பேசியபோது... இன்னுமொரு வீட்டில் தங்கியிருந்த ஐந்து பெண்களும் எதிர்கொள்ளும் சிரமங்களைப்பற்றிச் சொன்னபோது... ஒரு முறை துனிசியா நாட்டில் சிறைப்பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் அடிவாங்கிய அனுபவத்தை விவரித்தபோது... பெயர் தெரியாத ஒரு நாட்டில் அவர்களிடம் மிச்சமிருந்த கொஞ்ச டொலர்களையும் பறித்துக்கொண்டு தெருவில் விரட்டிவிட்டதைச் சொன்னபோது... அவர்களின் பதின்மப்பருவத்தின் எந்தச் சாயலும் அவர்களுடைய பேச்சிலும் முகத்திலும் தொனிக்கவில்லை. அதனை முற்றாகத் தொலைத்துவிட்டிருந்தார்கள்.

அவர்களுக்கான தொடரூந்து வந்து நின்றது. அகதி முகாமுக்குச் செல்வதற்காக இறங்கவேண்டிய நிறுத்தத்தைச் சொல்லி அவர்களை வழியனுப்பிவைத்தேன். அப்போது தொடரூந்திலிருந்து இரண்டு தமிழ்ப் பெண்கள், அவர்களுக்கும் 17, 18   வயதுகளிருக்கும். தமக்குள் சிரித்துப் பேசியபடி இறங்கி எம்மைக் கடந்துபோனார்கள். சட்டென்று இந்த இளைஞர்கள் என்னை நோக்கித் திரும்பினார்கள். “அண்ணை, நாம் பேசினால், இவர்கள் எங்களோடும் பேசுவார்களா?”

அந்த ஒரு கணத்தில், அவர்கள் தொலைத்து விட்டிருந்த பதின்ம வயதின் குறுகுறுப்பும், மலர்ச்சியும், மகிழ்வும் அவர்களுடைய கண்களில் ஒளிரக் கண்டேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick