விக்ரமாதித்யன் தமிழின் அலங்காரம் - லக்ஷ்மி மணிவண்ணன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படங்கள் : சந்தோஷ் ஸ்ரீராம், ஓவியம் : டிராட்ஸ்கி மருதுஆளுமை

மிழ்க் கவிதையில் பாரதி இனி எப்படி சாத்தியமில்லையோ, அதுபோலவே விக்ரமாதித்யனும். நிகழ்ந்த அற்புதங்கள், மீண்டும் சாத்தியங்கள் அற்றவை.

குற்றாலம் கவிதைப் பட்டறை; திருமேனியும் முத்து மகரந்தனும் ஆளுக்கொரு பக்கமாக கைத்தாங்கலாக விக்ரமாதித்யனைத் தூக்கிக்கொண்டு வந்தனர்.  தள்ளாடிய மகாராஜன் பல்லக்கில் வருவதுபோல இருந்தது அந்தக் காட்சி. இந்த பவனி திவான் பங்களாவின் உள்ளறைக்கு வர, சாமி இறக்கிவைக்கப்பட்டார். படையலுக்கு தினுசான பலவகை ரசாயனங்கள். உண்டியை யாரும் பொருட்படுத்துவது இல்லை. ஆனால், அவையும் வேடிக்கைக்காக வந்து உட்கார்ந்திருந்தன.

திரவ ஆகாரத்தின் மீது மட்டும் நம்பிக்கைகொண்ட கூட்டமே அப்போது அவரை வட்டமடித்துக் கிறங்கும். அது வெறும் திரவத்திற்காக மட்டுமே என்று சொல்வதற்கில்லை. விக்ரமாதித்யனோடு சேர்ந்து அருந்தும் கள்ளுக்கும் சாராயத்துக்கும் தனிச்சுவை. திரவத்தின் மீது ஒருவித ஜலமயக்கத்தை அப்போது அண்ணாச்சி ஏற்படுத்தத் தொடங்கியிருந்த காலம். ஜலமற்றது எதுவுமே கவிதையாகாது என்னும் திடக்கொள்கை ஸ்தாபிக்கப்பட்டு கொடி பறந்துகொண்டிருந்தது. நான் குறிப்பிடுவது 90-களின் தொடக்க காலம். சாமி பல்லக்கில் இருந்து இறக்கிவைக்கப்பட்டதும், “இன்று கவிதையாக வந்து கொட்டுகிறது” என்று கூற, கொட்டிய கவிதைகளெல்லாம் எழுதி எடுக்கப்பட்டன.

விக்ரமாதித்யனிடம் ஒரு சகாயம் உண்டு.  அடிப்பொடியில் இருந்து யார் வேண்டுமானாலும் நிகராக நின்று மல்லுக்கட்ட முடியும். மல்லுக்கட்டி கட்டி இலக்கியம் கற்க முடியும். பிற படைப்பாளிகளிடம் எப்போதும் இந்தச் சகாயம் கிட்டும் என்று சொல்வதற்கில்லை. ஆரம்பநிலை சந்தேகங்கள் தொடங்கி, ஆழங்கள் வரை செல்லும் மல்யுத்தம் அது. ஜலமயக்கத்துக்கு ஒதுங்கிக் கொள்பவர்களுக்கு இந்த வாய்ப்பில்லை. ஜலமின்றி இந்த எந்திரம் ஓடாது. ஓடியதில்லை. ஜலம் தீருமிடத்தில் இலக்கியம் நிற்கும்.

குடிக்காத விக்ரமாதித்யனைக் காண, இன்று வரையில் எனக்குப் பிடிப்பதில்லை. விக்ரமாதித்யன் எப்போதும் தனித்து வருகிறவர் அல்ல. அவரோடு இணைந்து பழைய கவிராயர்கள் எல்லாம் கூடவே வருகிறார்கள். அவர் குடிக்காத வேளைகளில் அவர்கள், இவருடன் கூட்டுவைத்துக்
கொள்வதில்லை. `டேய் முட்டாள்’ என அவர் ஒருவராக நின்று கூறினால், அதற்கு மதிப்பு வராது; திடுக்கிட வைக்காது. அவருக்கும் கூறும் தைரியம் கிடையாது. அவர் குடித்திருக்கும் வேளையில் மொத்தக் கவிராயர்களும் ஒட்டுமொத்தக் குரலில் நின்று திட்டுகிறார்கள் என்பதுதான் பிரச்னையே!

தனியாக வருகிறபோதும் அவர் தனியாள் அல்ல. அவர் ஒரு மாயக்கூட்டத்தையும் அழைத்துக்கொண்டு வருவதுபோலவே தோன்ற இதுவே காரணம். ஓர் ஊர்வலம் வருவதுபோல வரக்கூடியவர். தூரத்திலிருந்து வரும்போதே தெரியும்... அண்ணாச்சி வருகிறார் என்பது. குடிக்காத விக்ரமாதித்யனின் தனிமை, காணக் கூடாதது. கண்டால் அடித்துவிடும். பிசாசின் கை ஓங்கி அடித்ததுபோல வலியெடுக்கும். அது பல நூற்றாண்டுகால சாமிகள் ஏற்கிற தனிமை. காணக்கூடாதது. அவரும் அந்தத் தனிமையின் அகோரத்தை மறைக்கத்தான் பொதுவில் குடித்துக்கொண்டே இருக்கிறார். பல சாமிகள் பண்டிகைகளில் தங்களைக் காட்டி, பின் மறைந்துவிடுதலைப்போல. குடியற்ற விக்ரமாதித்யன்தான், விக்ரமாதித்யனின் சவம்.

ஆரம்ப காலங்களில் அண்ணாச்சி குடிக்கிறார் என்பது கருதி ஒதுங்கிக்கொள்கிறவர்கள் பலர் இருந்தார்கள். இப்போது பலர் டாஸ்மாக்கிலேயே அடையாளம் கண்டு நலம் விசாரிப்பது, பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. முன்னர் ஒதுங்கியவர்களுக்கு, குடித்துவிட்டு அவர் உளறுவதாகக் கற்பனை இருந்தது. அது உண்மையில்லை. குடித்துவிட்டு அவர் பேசுவதுதான் பேச்சே. குடிக்காமல் பேசுவதெல்லாம் நப்பாசை. திரும்பத் திரும்ப சில விஷயங்களை ஒரே அலைவரிசையில் பேசுவார். சில வேளைகளில் அது அலுப்பூட்டும். ஆனால், உங்கள் அகத்தின் பூட்டுகள் அத்தனையையும் அவர் உடைத்து நொறுக்கிவிடுபவர். ஸ்திரமாக மனதில் நாம் ஏற்றிவைத்திருக்கும் தீர்மானங்களை அழிக்க வல்லவர். அகம் உடையும் சத்தத்துக்கு அஞ்சுபவர்களே அவரது போதையைக் காரணம் காட்டினார்கள் என்பதே நிஜம். அவரது போதையின் முன்பாக எந்த கம்பீரத்துக்கும் கதி கிடையாது, கலையையும் இலக்கியத்தையும் தவிர. ஒரே ஒரு கவிதையை மட்டும் தீர்க்கமாக எழுதிவிட்ட இளைஞனோடும் அவர் உரிமையோடிருப்பார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick