புறக்கணிக்கப்படும் பெண் எழுத்து - சு.தமிழ்ச்செல்வி

கட்டுரை

கி.மு 100-ல் இருந்து நமது சங்க இலக்கியங்கள் தொடங்குவதாகக் கருதப்படு கிறது. அப்போதைய பெண் கவிஞர்களுக்கு தங்களது காதலைப் பாட எவ்வித மனத் தடைகளும் இல்லை.

‘முட்டுவேன்கொல் தாக்குவேன் கொல்
ஓரேன், யானும் ஓர் பெற்றி மேலிட்டு,
‘ஆ அ ஊ! ஒல் எனக் கூவுவேன்கொல் அலமரல் அசைவளி அலைப்ப, என் உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே.’


‘மெல்லிய காற்று அசைக்கும் தன் காதல் நோயை அறியாது தூங்கும் இவ்வூரை என்ன செய்வது?’ என ஔவை எழுதியபோது, அது செவ்வியல் இலக்கியமாக அங்கீகரிக்கப்பட்ட நிலை இங்கிருந்தது. ஔவை மட்டுமா? ஒக்கூர் மாசாத்தியார், ஆதிமந்தியார், காக்கைப்பாடினியார், நச்செள்ளையார் எனப் பெண்பால் புலவர்கள் எழுதிக்குவித்த அழகுகளை அல்லவா நம் தமிழன்னை அணிகளாகச் சூடி அழகுபார்த்தாள். பிறகு, பக்தி இலக்கியக் காலத்தில் ஆண்டாளின் முனகல் கேட்டது.

அப்புறம் நூற்றாண்டு இடைவெளிகளில் பெண் ஏன் ஊமையானாள்? இல்லை, அவள் ஊமையாக்கப்பட்டாள் என்பதே உண்மை. நிலவுடமை அமைப்பை வலுவாக்கத் தோன்றிய கற்பு போன்ற மதிப்பீடுகள், அதிகாரமாக வளர்ந்த மதம் தோற்றுவித்த நெறிகள் என எல்லாம் சேர்த்துதான் பெண்ணின் குரல்வளையை நெரித்தன. அவள் புழங்கும் எல்லைகள், படுக்கையறை யாகவும் சமையற்கட்டாகவும் அத்துக்களை வகுத்தன. பெண் உடல் களிப்பொருளாக, அதேசமயம் தீட்டாகக் கருதப்பட்டது. தூமை சுரக்கும் யோனி, பாவத்தின் பிறப்பிடம். கடைசியாக அவள் கைகளில் இருந்து பாடப் புத்தகங்களும் பறிக்கப்பட்டன. பெண்கள் படிப்பதற்கு பாரதியும் பாரதிதாசனும் கவிதைகள் எழுதவேண்டியதாயிற்று. பெரியார், அயராது பேசவும் எழுதவும் வேண்டியிருந்தது. விளைவாக, பெண் மீண்டும் தன் மௌனம் கலைத்தாள். இருந்தாலும் நமக்கு வேதரத்தினத்தை, தி.ஜா-வை,  கு.ப.ரா-வை, புதுமைப்பித்தனை, ஜெயகாந்தனைத் தெரிந்த அளவுக்கு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரை, வை.மு.கோதைநாயகி அம்மாளை, குமுதினியை, எஸ்.அம்புஜத்தை ஏன் தெரியவில்லை? கடந்த நூற்றாண்டில் எழுதியவர்கள் மீது, இந்த நூற்றாண்டிலேயே இருள் கவிகிறதே. இங்கு மொழி, அழகியல், இலக்கிய விதிகள் எல்லாமே ஆண்களின் பார்வையில் வரிக்கப்படுகின்றன. அதுவும் ஆதிக்கச் சமூகத்திலிருந்து பிறக்கும் எழுத்துக்கள் மைய இலக்கியம்; தலித்துகள், பெண்கள் எழுதுபவை எல்லாம் விளிம்பு எழுத்துக்கள் என வகைபடுத்தப்படும் அவலம் இங்குதான் நிகழ்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick