தனிமை துடைக்கும் தேயிலை - கவிதை - தேன்மொழி தாஸ்

ஓவியம்: செந்தில்

திராட்சைத் தோட்டங்களால் நிறைந்திருக்கும்
மலையடிவாரத்தை
கடந்து செல்கிறேன்

சம்பூரணமாய் காற்று மேய்ந்து செல்கிறது
காட்டுச் செந்நெல்லின் தாளப்பிரமாணம்

கண்களின் வேரினைப் பின்னிழுக்கிறது
மலைத்தொடர் எதிர்வந்து
மனதுக்குள் பகல்வத்தி
ஏற்றிச் செல்கையில்

சமநிலம் கீழே வண்ணச் சதுரங்களாகின்றன
கணியமேனும் கருணையின்றி மாமலை மரங்கள்
நாசியை வாசத்தால் பிறழ்வுக்குள் கடத்துகின்றன

வெயிலின் பதமை மண்டியிடும் மேடுகளில்
வெள்ளந்தி மான்கள் விளையாடுகின்றன

எனது திணையின் இசை
சிற்றோடை நகர்விலும் சில்வண்டின் சிறகிலும்
சிதறுகின்றன

காட்டின் நரம்புகளில் கடல் ஊறிப் பெருகுகிறது
நீரிஞ்சி மரத்தின் சாம்பல்நிற இலைகளின் மேல்
எனது நித்திரையைக் கிடத்துகிறேன்

எனது மலைவாசஸ்தலம் வந்துவிட்டது
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் உடைகள்
குறிஞ்சி நிலத்தின் குறியீடுகளாய் கடக்கின்றன

உறவுகளின் கல்லறைத் தோட்டம்
உள் உணர்வை வவ்வாலாய்த் தொங்கவிடுகிறது
எனது தனிமையின் முகத்தை
ஒரு தேயிலை துடைக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick