நாட்டிலொரு நாடகம் நடக்குது! - சிறுகதை - ஆதவன் தீட்சண்யா

ஓவியங்கள்: செந்தில்

ந்த நாடகத்தின் முதல் காட்சி, காவல் நிலையத்துக்குள் தொடங்குகிறது. நிஜத்தில் என்றால், உள்பாகங்கள் முழுவதும் திருடப்பட்டு, துருவேறிய வெறுங்கூடுகளாக நிறைய வண்டி வாகனங்கள் நிற்கும் இடம் எதுவோ, அதைக் காவல் நிலையம் என்று எளிதாக அடையாளம் காட்டிவிடலாம்.  ஆனால், நாடக மேடையில் அப்படிக் காட்ட முடியாது. இருந்தாலும் நாடகத்துக்காக மேடையில் காவல் நிலையம் ஒன்றை உருவாக்கத்தான் வேண்டும். காய்ந்த ரத்தத்தின் நிறத்தில் செஞ்சாந்து பூசி, அதில் இடைக்கிடை வெள்ளைக்கோடுகள் வரையப்பட்ட ஒரு கித்தானை அல்லது தட்டியை வைத்தால், காவல் நிலையம் போன்ற தோற்றம் மேடைக்குக் கிடைத்துவிடும். மேடையின் முன்புறத்தில் அரைவட்ட வடிவிலான நுழைவாயில் வளைவு ஒன்று தேவை. அதில் `காவல் நிலையம்’என மறக்காமல் எழுத வேண்டும். ஒருவேளை கா‘வள்’ நிலையம் என எழுதப்படுமானால், அது எழுத்துப் பிழைதானே தவிர, அர்த்தப் பிழை அல்ல என்பதறிக. வேண்டாதவர்கள் மீது வழக்குப் போடுவதற்காக ஒடுங்கிய சொம்புகள், சில கஞ்சாச்செடிகள், கஞ்சாப் பொட்டலம் ஒன்றிரண்டு மேடையின் ஓரத்தில் சற்றே வெளித்தெரியும்படியாக வைக்கப்படுமானால், அச்சு அசலான காவல் நிலையம் என்றே பார்வையாளர்கள் நம்பிவிடுவார்கள். கூடவே, சித்ரவதை தாளாதவர்களின் ஓலமும் கேவலும் பின்னணியில் ஒலிக்குமாயின், மிகுந்த நம்பகத்தன்மை உருவாகிவிடும். பார்வை யாளர்களைப் பயத்தில் ஆழ்த்தி, மூத்திரம் பெய்யவைக்கும் அளவுக்குக் கொடூரமான குரலில், எழுதத்தகாத வசைச்சொற்கள், ‘என்கவுன்டர்ல போட்டுத்தள்ளிட்டு போய்க்கிட்டேயிருப்பேன். ஒரு ம...ரைக்கூட பு...க முடியாது’ என்பதுபோன்று வீர தீர கர்ஜனைகள் ஒலிப்பதும் அவசியம். மேடையில் இம்மாதிரியான சொற்களைப் பயன்படுத்தலாமா என்கிற குழப்பம் தேவையற்றது. நாட்டின் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஓயாது உச்சரிக்கப்படுகிற இந்தச் சொற்களை மேடையில் பயன்படுத்து வதால், புதிதாக எந்த ஆபாசமும் வந்து விடப்போவது இல்லை. அப்படி ஏதேனும் மனத்தடை இருக்குமானால், `பீப்’ பாடல்போல `பீப்’ வசனமாக மாற்றிக்கொள்வது உசிதம்.காவல் நிலையம் சட்டம் ஒழுங்கு (லா அண்டு ஆர்டர்), குற்றம் (கிரைம்) என இரண்டாக வகிடெடுத்துப் பிரிக்கப்பட வேண்டும். சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பது சட்டம் - ஒழுங்குப் பிரிவின் வேலை என்றால், குற்றங்களைப் பராமரிப்பது குற்றப் பிரிவின் வேலையா என்று குதர்க்கம் பேசுவதோ, குற்றத் தடுப்புப் பிரிவு என்று திருத்தம் சொல்வதோ, இந்த நாடகத்துக்குத் தேவையற்றது. இடுகுறிப் பெயரா, காரணப் பெயரா என்ற ஆராய்ச்சியில் இறங்காமல், பேர்வைத்தவர்கள் விவரம் இல்லாமலா வைத்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு, நாடகத்தைத் தொடங்குகிற வழியைப் பார்க்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick